பேருந்து வாங்க பணம் இல்லை: அடுக்குமாடி வாகன நிறுத்தம் (MLCP) என்கிற குப்பையில் கொட்ட பணம் இருக்கு! இதுதான் தமிழ்நாடு! - Seithipunal
Seithipunal


பசுமைத் தாயகம் மாநிலச் செயலாளர் இர. அருள் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சென்னை தி.நகரில் ரூ. 40 கோடி செலவில் ஏற்கெனவே கட்டப்பட்ட அடுக்குமாடி வாகன நிறுத்தம் ஈ ஓட்டுகிறது. பலகோடி மதிப்புள்ள இடத்தையும் வீணடித்து, பணத்தையும் குப்பையாக்கியுள்ளார்கள். 

இந்நிலையில் தற்போது ரூ. 162 கோடி செலவில் இன்னும் 4 இடத்தில் இதே அடுக்குமாடி வாகன நிறுத்தத்தை கட்டும் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. (மேலும் 6 இடங்களில் பின்னர் கட்டப்படுமாம்!)

சென்னை மாநகரப் போக்குவரத்துக்கு மிகவும் முதனமையான தேவை தரமான பேருந்துகள்தான். ஆனால், இங்கு ஓடும் பேருந்துகள் பெரும்பாலானவை காலம் கடந்து ஓடுகின்றன. 

சுமார் 10,000 பேருந்துகள் தேவைப்படும் சென்னை பெருநகரில் வெறும் 3000 பேருந்துகளே இயங்குகின்றன. பேருந்துகளை அதிகமாக்கவும், நவீனமாக்கவும் கோரினால் – பணம் இல்லை என்று கைவிரிக்கிறார்கள். ஆனால், அடுக்குமாடி வாகன நிறுத்தம் எனும் வெட்டித் திட்டத்திற்கு ரூ. 202 கோடியை செலவிடுகிறார்கள்.

அடுக்குமாடி வாகன நிறுத்தம் ஒருபோதும் போக்குவரத்தை மேம்படுத்தாது. சீரழிக்கும் என்பதுதான் அறிவியல்பூர்வமான உண்மை. எங்கெல்லாம் அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் கட்டப்படுகின்றனவோ, அங்கெல்லாம் அதிக கார்களால் போக்குவரத்து நெரிசலும் அதிகமாகும்.

மேலும், நடைபாதை, மிதிவண்டிப்பாதை, பேருந்து போக்குவரத்து போன்றவற்றுக்கு தேவைப்படும் நிதியும் இடமும் வீணடிக்கப்படும். அதனால், மேலை நாடுகளில் அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் ஒழிக்கப்படுகின்றன. ஆனால், சென்னை மாநகரில் இவற்றை வேண்டுமென்றே திணிக்கிறார்கள். கார்ப்பரேட் கட்டுமான நிறுவனங்களின் பேராசையும் ஊழலுமே இவற்றின் பின்னணி ஆகும்.

தி.நகர் MLCP வாகன நிறுத்தத்தின் கதை

சென்னை மாநகரை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுவதாகக் கூறிக்கொண்டே, இங்கு அறிவியலுக்கு பொருந்தாத திட்டங்களை பெரும் பொருட்செலவில் மக்கள் மீது திணிக்கிறார்கள். அதில் ஒன்றுதான் அடுக்குமாடி வாகன நிறுத்தம் (Multi-level Car Parking - MLCP) கட்டுவதும் ஆகும்.

அதன்படி தி.நகர் தணிகாச்சலம் சாலையில் 40 கோடி ரூபாயில் முதல் அடுக்குமாடி கார் நிறுத்தத்தைக் கட்டினார்கள். இப்போது முக்கியமான தி.நகர் வர்த்தகப்பகுதியில் இடத்தை ஆக்கிரமித்து வெறும் கட்டிடம் தான் நிற்கிறது! அங்கு கார் நிறுத்த எவரும் இல்லை! அடுக்குமாடி வாகன நிறுத்துத்தின் பணியாளர்கள் வெட்டியாக சம்பளம் வாங்கிக்கொண்டு, ஈ ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். 

இத்தனைக்கும், 'செருப்புக்கு ஏற்றபடி காலை வெட்டும் செயல்' எனும் பழமொழி போன்று, அடுக்குமாடி வாகன நிறுத்தத்தை காப்பாற்றுவதற்காக பாண்டி பஜாரில் மட்டும் சாலையோரத்தில் வாகனம் நிறுத்தும் கட்டணத்தை 200% உயர்த்தியது சென்னை மாநகராட்சி! சாலையில் வாகனம் நிறுத்தினால் மணிக்கு 60 ரூபாய் கட்டணம், அதுவே, அடுக்குமாடி வாகன நிறுத்தத்தில் வெறும் 20 ரூபாய் தான். ஆனாலும்கூட எவரும் அதனை பயன்படுத்தவில்லை.

முதன்மையான 3 கேள்விகள்

1. Parking கொள்கை உருவாகும் முன்பே MLCP கட்டுவது ஏன்?!

சென்னை பெருநகரின் போக்குவரத்தை ஒருங்கிணைக்க தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ‘சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம்’ உள்ளது (Chennai Unified Metropolitan Transport Authority - CUMTA). அந்த ஆணையம் சென்னை பெருநகருக்கான வாகன நிறுத்தக் கொள்கையை (parking policy) உருவாக்கி வருவதாக அறிவித்துள்ளது.

ஆனால், அந்த கொள்கை அறிக்கை வெளிவருவதற்கு முன்பாகவே ரூ. 162 கோடியில் சென்னை மாநகராட்சி அடுக்குமாடி வாகன நிறுத்தத்தை அமைப்பது எதற்காக?

2. சொந்த வழிகாட்டுதலை மீறுவது ஏன்?

சென்னை மாநகராட்சி அதன் இணைய தளத்தில் Complete Street Planning Guidelines 2020 என்பதை வெளியிட்டுள்ளது. https://chennaicorporation.gov.in/images/Complete_Street_Planning%20Guidelines.pdf  நீடித்த போக்குவரத்து முறைக்கு அடுக்குமாடி வாகன நிறுத்தம் உதவாது என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், தெருக்களில் வாகனம் நிறுத்துவதை மேலாண்மைசெய்யும் (on-street parking management) முறையை முதலில் கொண்டுவர வேண்டும். அதற்கு பின்பே அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டுவதற்கு தேவை உள்ளதா என்று ஆராய வேண்டும் என்கிறது. (First implement on-street parking management and then assess the demand for Construction of Multi-level car parking – MLCP.)

ஆனால், சென்னை மாநகர சாலைகளில் வாகனம் நிறுத்துவதை முறைப்படுத்தும் முன்பாகவே, அடுக்குமாடி வாகன நிறுத்தங்களை திணிக்கிறார்கள்.

3. சென்னை NMT கொள்கை என்ன ஆனது?

சென்னை நகருக்கான மோட்டார் வாகனம் அல்லாத போக்குவரத்துக் கொள்கையை 2014-இல் சென்னை மாநகராட்சி வெளியிட்டது (The Non-Motorised Transport (NMT) Policy of Greater Chennai Corporation). 

அதில் நடைபாதை, மிதிவண்டி, பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிப்போம். வாகன நிறுத்தத்தை கடைசி தேவையாகக் கருதுவோம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், இப்போது நடைபாதைக்கும், பொதுப்போக்குவரத்துக்கும் தேவையான பணத்தை - பயனளிக்க வாய்ப்பே இல்லாத அடுக்குமாடி வாகன நிறுத்தத்தில் கொட்டுகிறார்கள்!

என்ன செய்ய வேண்டும்?

அடுக்குமாடி வாகன நிறுத்தம் (Multi-level Car Parking) எனும் பிழையான, மோசமான திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். சென்னையின் எந்த இடத்திலும் அவற்றை அமைக்கக் கூடாது. மாபெரும் கட்டுமான நிறுவனங்களின் இலாபமும், ஊழலும்தான் முக்கியமானது என்கிற நிலையை ஒழித்து, சென்னை மாநகர மக்களின் நலனுக்கு முன்னுரிமைக் கொடுக்க வேண்டும்!

அடுக்குமாடி வாகன நிறுத்தம் (Multi-level car parking), பறக்கும் சாலைகள் (Express ways), தேவையில்லாத இடங்களில் மேம்பாலங்கள் என்பதாக - கட்டுமான நிறுவனங்களுக்கு மட்டுமே பயனளிக்கும் மாபெரும் 'மெகா' திட்டங்களை, சென்னை மாநகருக்குள் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயலாக்குவது எதற்காக? யாரின் நன்மைக்காக?

பொதுமக்கள் இவற்றையெல்லாம் தட்டிக்கேட்க முன்வராவிட்டால், மக்களுக்கு மிகவும் தேவையான பொதுப்போக்குவரத்து திட்டங்களுக்கு, MTC பேருந்துகள் வாங்குவதற்கு பணம் இல்லை என்று அரசுகள் கைவிரிப்பது தொடர் கதையாகிவிடும்" என்று இர. அருள் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pasumai Thayakam R Arul Say About MLCP


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->