நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலை - தமிழகம் முழுவதும் போராட்டம்.!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரியில், நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவர் சேவியர்குமாரை படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்யாவிட்டால், மாநிலமெங்கும் போராட்டம் வெடிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி சேவியர்குமார் அவர்கள் திமுகவின் வன்முறைக்கும்பலால் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். தம்பியின் உயிர்த்துணையான மனைவியையும், பெற்றெடுத்த இரு பெண் பிள்ளைகளையும் எப்படி தேற்றுவதெனத் தெரியாது மனம் கலங்கி நிற்கிறேன்.

நம்மோடு உறவாய் இருந்த தம்பியைப் பறிகொடுத்ததை எண்ணி, ஒவ்வொரு நொடியும் உள்ளம் பதைபதைக்கிறது. தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, இக்கொடுந்துயர் சூழ்ந்திருக்கும் வேளையில் முழுமையாகத் துணைநிற்கிறேன். தம்பியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் ஏற்பட்டப் பேரிழப்பாகும்.

தம்பி சேவியர்குமார் எளிய குடும்பப் பின்புலத்தைக் கொண்டிருந்தாலும் மண்ணின் மீதும், மக்களின் மீதும் கொண்ட அளப்பெரும் பற்றினால் தன்னையும், தன் குடும்பத்தாரையும் முழுமையாக நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டு, இனத்தின் நலனுக்காக அயராது பணியாற்றினார். அநீதிகளுக்கெதிராகவும், சமூக அவலங்களுக்கெதிராகவும் சமரசமின்றி களத்தில் நின்ற ஒப்பற்றப் போராளியாகத் திகழ்ந்தார். அதுதான் எதிராளிகள் அவரது உயிரைப் பறிக்கவும் காரணமாகவும் அமைந்திருக்கிறதென்பது பெருங்கொடுமையாகும்.

தம்பி சேவியர்குமார் தான் உறுப்பினராக அங்கம் வகிக்கும் மயிலோடு கிராமத்திலுள்ள புனித மைக்கேல் கத்தோலிக்க தேவாலயத்தில் நடக்கும் முறைகேடுகளைக் கேள்வி கேட்டதாலும், திமுகவினரின் மோசடித்தனங்களைத் தோலுரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாலும் திமுகவின் ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு என்பவருக்கு இவர் மீது முன்விரோதம் ஏற்பட்டிருக்கிறது.

திமுகவினர் செய்த நிர்வாகச் சீர்கேடுகளைத் தொடர்ச்சியாகத் தட்டிக்கேட்டதால் அவருக்கு அச்சுறுத்தல்களும், கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தம்பி சேவியர்குமார் காவல்நிலையத்தில் புகாரளித்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியும் ஆளும் கட்சியின் அதிகார அத்துமீறலால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதன் மூலம் அரச நிர்வாகத்தின் பாராமுகத்தை அறிந்துகொள்ளலாம்.

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பழிவாங்கும் நோக்கோடு தம்பி சேவியர்குமாரின் மனைவி எமிலியை ஏற்கனவே ஆசிரியர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தம்பி சேவியர்குமாருக்கு ஆபாசமாகப் பேசியும், கொலைமிரட்டலும் விடுத்துள்ளார் திமுகவின் ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு. 

இந்த நிலையில், நேற்று தம்பி சேவியர்குமாரை அலைபேசியில் பேசி அழைத்து, திமுக ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு, பங்குத்தந்தை ராபின்சன், ஜஸ்டஸ் ரோக், ஜெலிஸ், வின்சென்ட், வினோ, சோனிஸ் என்கிற அபிலாஷ், எட்வின் ஜோஸ் ஆகியோர் ராபின்சன் வீட்டில் வைத்து கொடூரமாகத் தாக்கி பச்சைப்படுகொலை செய்திருக்கின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு கூட்டுச்சதியின் மூலம் அரங்கேற்றப்பட்ட இக்கொடூரமான படுகொலை குரூரத்தின் உச்சம்.

மாற்றுக்கருத்துக்கொண்டோரையும், அரசின் நிர்வாக அமைப்பின் மீது விமர்சனம் கொண்டோரையும் அச்சுறுத்துவது, மிரட்டுவது எனும் கொடுங்கோன்மை நீட்சியடைந்து, ஒரு படுகொலையில் முடிந்திருக்கிறது என்பது திமுக அரசின் அதிகாரத்திமிரையே காட்டுகிறது. திமுகவினரின் வெளிப்படையான அட்டூழியமும், அடாவடித்தனமும் நெடுநாள் நீடிக்கப் போவதுமில்லை; ஆட்சியும், அதிகாரமும் திமுகவுக்கு நிரந்தரமும் இல்லை. அதிகாரம் தந்த மயக்கத்திலும், பதவிபோதை தந்த மமதையிலும் ஆட்டம் போட்டவர்கள் எல்லாம் அடங்கிப்போனது வரலாறு நெடுகிலும் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அந்த நிலை திமுகவுக்கும் ஒருநாள் உறுதியாக வரும்.

பதினான்கு ஆண்டுகாலப் பயணத்தில் நாம் தமிழர் எனும் பெரும் படையைப் பொறுப்புணர்வுடன் கூடியக் கட்டுப்பாடோடும், மிகுந்தக் கட்டுக்கோப்போடும் வழிநடத்தி வருகிறேன். தமிழர்களது உரிமைகள் பறிக்கப்படும்போதும், அண்டை மாநிலங்களில் தமிழர்கள் இனவெறி கொண்டு தாக்கப்படும்போதும், அடக்குமுறைகள் ஏவப்படும்போதும், சனநாயக வழிமுறைகளையும், அறம்சார்ந்த போராட்ட வடிவத்தையுமே முன்மொழிந்திருக்கிறேன். 

இலக்கு நோக்கியப் பயணத்தில் கவனம் சிதறிவிடக்கூடாதெனும் ஒற்றை நோக்கமே என்னையும், எனது பிள்ளைகளையும் மிகுந்த சனநாயகவாதிகளாக இருக்கச் செய்கிறது. ஆனால், நாங்கள் சனநாயகவாதிகளாக இருப்பதையே தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, எங்கள் பிள்ளைகள் மீது கொடுந்தாக்குதல்களையும், வன்முறை வெறியாட்டங்களையும் ஏவிவிட்டால், அதற்குப் பணிந்துபோகிறவர்கள் நாங்கள் இல்லை.

‘துன்பத்தை அதைத் தந்தவனுக்கே திருப்பிக் கொடு’ என்பதுதான் எங்கள் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் எங்களுக்குப் கற்பித்தப்பாடம். எங்கள் பொறுமைக்கும், சகிப்புத்தன்மைக்கும் ஒரு எல்லை உண்டு. எங்கள் குடும்பத்தில் மிகப்பெரிய இழப்பு நேர்ந்திருக்கிறது. தம்பி சேவியர்குமாரை இழந்து பரிதவித்து நிற்கிறோம். எங்களது சனநாயக உணர்வையும், அரசியல்ரீதியிலான அணுகுமுறையையும் ஒருநாளும் குறைத்து மதிப்பிட வேண்டாம். அவ்வாறு மதிப்பிட்டால், அது பெரும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழ்நாட்டு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு, தம்பி சேவியர்குமார் படுகொலைக்குக் காரணமான கொலையாளிகள் அத்தனைப்பேரும் கைதுசெய்யப்பட்டு, உடனடியாகக் சிறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறினால், மாநிலம் முழுமைக்கும் பெரும் போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுக்கிறேன்” என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ntk leader seeman announce protest for ntk excuetive murder in kanniyakumari


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->