அந்த அறிவிப்பு : எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை - முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்தி.! - Seithipunal
Seithipunal


"அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டபோது, எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை" என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

"ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்ட போதிலும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!

சமூகநீதியை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டம்தான் இந்தக் காலை உணவுத் திட்டம். வயிற்றுக்கு நிறைவும் - செவிக்கு அறிவும் ஊட்டுபவையாக பள்ளிச் சாலைகளை மாற்றும் முயற்சி இது!

இலட்சக்கணக்கான மாணவக் கண்மணிகளின் மனம் குளிர நான் காரணம் ஆகிறேன் என்பதே எனக்கு ஏற்பட்டுள்ள பெருமகிழ்ச்சி! திராவிட இயக்கக் கொள்கைகளில் உணர்வுப்பூர்வமாகத் தோய்ந்துபோன எனக்கு, ஏழைக் குழந்தைகளின் பள்ளிப் படிப்பை ஊக்குவிக்கும் இந்தத் திட்டம் ஒரு கனவுத் திட்டம்! முதலமைச்சராகப் பெருமிதம் தரும் திட்டம்! மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகள், மலைப் பகுதிகள் எனத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் முதற்கட்டமாக இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. தாங்கள் பெற்ற பிள்ளைகளுக்குச் சமைப்பதில் எடுத்துக் கொள்கிற சிரத்தையோடு, தங்கள் அன்பைக் கொட்டி, தூய்மையுடன் உணவைப் பரிமாற – களப்பணியாளர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தத் திட்டம், தனது நோக்கத்தில் மகத்தான வெற்றி அடைவதை மக்கள் பிரதிநிதிகளும். பொதுமக்களும் ஆர்வத்துடன் ஈடுபாடு காட்டி உறுதிப்படுத்த வேண்டும்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட கோடானுகோடி மக்களுக்குக் கல்வி வாய்ப்பை உருவாக்கித் தருவதும், கல்வியைப் பரவலாக்குவதன் மூலம் அதிகாரத்தில் அடித்தட்டு மக்களை அமர வைப்பதும் திராவிட இயக்கத்தின் அடிப்படையான கொள்கைகள். அந்தக் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க வெற்றியைத் திராவிட இயக்கம் கண்டுள்ளது என்பது தமிழ்நாடு பெருமைப்படத்தக்க ஒன்று!

பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்குவது, கற்றலை இனிமையாக்குவது என்ற நோக்கத்தில்  “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதிலும், ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதிலும் சந்தேகம் இல்லை. இந்த முன்னோடியான திட்டத்தின் வெற்றி நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கும். பிற மாநிலங்களிலும் திராவிட மாடல் ஆட்சியின் இந்தத் திட்டம் பின்பற்றப்படும் என்பதிலும் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது"

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin say about tn govt school new scheme


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->