நள்ளிரவில் சோலார் நிறுவனத்தில் 'அபேஸ்'...! காப்பர் கேபிள் கொள்ளையனை மடக்கிப் பிடித்த காவலர்கள்...! - 2 பைக்குகள் பறிமுதல்!
Apes solar company middle night Cops catch copper cable thief 2 bikes seized
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டாரத்திற்குட்பட்ட தெற்கு மயிலோடை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தனியார் சோலார் மின் உற்பத்தி நிலையத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற காப்பர் கேபிள் திருட்டு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.அந்த பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பில் சோலார் மின் திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக சோலார் சேனல்களில் உயர்மதிப்புள்ள காப்பர் கேபிள்கள் பொருத்தப்பட்டு வந்தன. ஆனால் கடந்த சில நாட்களாக அந்த கேபிள்கள் மர்மமான முறையில் ஒன்றன்பின் ஒன்றாக திருடப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து நிறுவன நிர்வாகம் இரவு நேரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி, கண்காணிப்பு பணியில் பாதுகாப்பு ஊழியர்களை தீவிரமாக ஈடுபடுத்தியது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை, பாதுகாப்பு ஊழியர்களான இசக்கிமுத்து மற்றும் மாடசாமி ஆகியோர் வழக்கம்போல் சோலார் வளாகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சில மர்ம நபர்கள் சோலார் சேனல்களில் பொருத்தப்பட்டிருந்த காப்பர் வயர்களை துண்டித்து திருடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.பாதுகாப்பு ஊழியர்களை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக இந்த தகவல் பாதுகாப்பு மேற்பார்வையாளர் கிருஷ்ணனுக்கு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அவர் கயத்தாறு காவலர்களிடம் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்பகுதியில் நடத்தப்பட்ட அதிரடி தேடுதல் நடவடிக்கையில், காப்பர் கேபிள் திருட்டில் தொடர்புடையதாக கயத்தாறு இந்திராநகரைச் சேர்ந்த பாரதியின் மகன் சின்னதுரை (25) கைது செய்யப்பட்டார்.
மேலும் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்ட சின்னதுரையிடம், திருடப்பட்ட காப்பர் வயர்கள் எங்கு விற்பனை செய்யப்பட்டன, இந்த திருட்டு வலையில் தொடர்புடைய மற்ற கூட்டாளிகள் யார் என்பது குறித்து காவலர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளை பிடிக்க கயத்தாறு காவலர்கள் பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Apes solar company middle night Cops catch copper cable thief 2 bikes seized