130 ஆண்டுகள் பழமையான தருமச் சான்று... தஞ்சையில் கல்வெட்டு கண்டுபிடிப்பு பரபரப்பு...! - ஆய்வாளர்கள் தகவல்
130 year old proof dharma Discovery inscription Thanjavur creates excitement Researchers report
தஞ்சை மாநகரின் ராஜகோபாலசாமி தெருவில் உள்ள கிட்டப்பா வட்டாரத்தில் வரலாற்று சிறப்புமிக்க பிற்கால கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதி ஆர்வமூட்டும் ஆய்வுகளின் மையமாக மாறியுள்ளது.
இந்த கல்வெட்டினை தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் தமிழ்ப்பண்டிதரும் வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தில்லை கோவிந்தராஜன், பட்டதாரி ஆசிரியர் ஜெயலட்சுமி மற்றும் ஏடகம் சுவடியியல் மாணவர் சரவணன் ஆகியோர் இணைந்து ஆராய்ந்து முக்கிய தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

அவர்கள் விளக்கத்தில், “பழங்காலத் தமிழகத்தில் சத்திரங்கள் மற்றும் மடங்கள் ‘அறச்சாலைகள்’ என அறியப்பட்டு, ஒவ்வொரு ஊரிலும் வழிப்போக்கர்களுக்காக அமைக்கப்பட்டிருந்தன. பயணம் மேற்கொண்டவர்கள் இச்சத்திரங்களில் தங்கி உணவருந்தி ஓய்வு எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்தது.
மேலும், பயணத்தின் போது நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அங்கு உடனடி சிகிச்சை வழங்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த அமைப்புகள் ‘தருமக்கட்டளை’ என்ற பெயரில் பல இடங்களில் செயல்பட்டன” என்று தெரிவிக்கப்படுகிறது.மேலும், “இத்தகைய தருமச் செயல்களை நிலைத்திருக்கச் செய்ய, தனிநபர்களோ அல்லது குழுக்களோ நிலமும், பொருளாதார ஆதாரங்களும் வழங்கி நிரந்தர நிதி ஏற்பாடுகளை செய்தனர்.
கி.பி.1855-ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு ஆவணத்தில், சத்திரங்களின் வருவாயில் ஒரு பகுதியை சேமித்து வைக்க வேண்டும், அது எதிர்கால அவசர தேவைகளுக்கு உதவும் என்றும், உணவு வழங்கும் போது வழிப்போக்கர்கள், முதியோர், குழந்தைகள் ஆகியோருக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
உழைக்காமல் வரும் சோம்பேறிகளுக்கு தங்கும் வசதியும் உணவும் வழங்கக்கூடாது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்படுகிறது.இவ்வகை தருமப் பணியின் ஓர் உறுதியான சான்றாகவே கிட்டப்பா வட்டாரத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.
சுமார் 14 அடி அகலமும், 2½ அடி உயரமும் கொண்ட இந்த கல்வெட்டில் 30 வரிகள் செதுக்கப்பட்டுள்ளன. இதில் கி.பி.1889ஆம் ஆண்டு ஜனவரி 17 (தமிழ் சர்வதாரி ஆண்டு தை மாதம் 6) எனத் தெளிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதேபோல், கி.பி.1887ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி தஞ்சை கோட்டைக்குள் உள்ள ராஜகோபாலசாமி கோவில் வீதியில் வாழ்ந்த அண்ணு பாட்டகர் அறிவுறுத்தலின்படி நாகோ பாட்டகர் செய்த தருமச் செயலை, அவரது தமையன் வெங்கோ பாட்டகர் எழுதி வைத்த உயில் எனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த கல்வெட்டில், துவாதசி கட்டளை தருமத்திற்காக வீட்டின் மேல்பகுதி மற்றும் ரூ.400 நிரந்தர வைப்பு நிதியின் வட்டியினால் 10 பிராமணர்களுக்கு அன்னதானம் வழங்கி வந்தது பற்றியும், அதை நாகோ பாட்டகரும் அவரது தமக்கை காமாட்சி அம்மாளும் மேற்கொண்டதும், பின்னர் இந்த தருமப் பணியை காமாட்சி அம்மாளின் மகள் கங்காபாய் அம்மாள் தொடர வேண்டும் என்றும் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த தருமச் செயலை பொதுமக்கள் அறியும்படி கல்வெட்டு வடிவில் பதித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் இடம்பெற்றுள்ள பெயர்களின் அடிப்படையில், கொடை வழங்கியவர்கள் மராட்டிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
English Summary
130 year old proof dharma Discovery inscription Thanjavur creates excitement Researchers report