விண்ணை பிளந்த பக்தர்களின் கோஷம் - கொடியேற்றத்துடன் தொடங்கியது தசரா திருவிழா.!!
dhasara festival flag hoisting in kulasai mutharamman temple
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தத் திருவிழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக இன்று அதிகாலையில் கொடிப்பட்டம் ஊர்வலம் நடைபெற்றது. அதன் பின்னர் காலை 6 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. இதையடுத்து விரதமிருக்கும் பக்தர்கள் கோவில் பூசாரியிடம் மஞ்சள் கயிற்றாலான காப்பு அணிந்து கொள்வார்கள்.
காப்பு அணிந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து, 10-ம் நாளில் கோவிலில் செலுத்துவார்கள். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மதியம், மாலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.
இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளாக 10-ம் திருநாளான வருகிற 2-ந்தேதி இரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 11-ம் திருநாளான 3-ந் தேதி மாலையில் அம்மன் தேர் பவனி கோவிலை வந்தடைந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதத்தை முடிப்பார்கள். 12-ம் திருநாளான 4-ந்தேதி மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் இந்தத் திருவிழா நிறைவு பெறுகிறது.
English Summary
dhasara festival flag hoisting in kulasai mutharamman temple