கார்த்திகை தீபம்.. பாவங்களை போக்கும் பரணி தீபம்... எப்படி ஏற்ற வேண்டும்?..!  - Seithipunal
Seithipunal


பரணி தீபம்:

கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய முக்கிய ஆன்மிக நிகழ்வாக பார்க்கப்படுவது திருவண்ணாமலையில் நடக்கும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா தான்.

மலையையே சிவபெருமானாக வணங்கக்கூடிய ஸ்தலம் தான் திருவண்ணாமலை. இங்கு கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பௌர்ணமியும் இணைந்து வரக்கூடிய நன்னாளில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் விசேஷம்.

இந்த தீபத்திருவிழா திருவண்ணாமலையில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் வீடுகள்தோறும் விளக்கேற்றி கொண்டாடுவார்கள். 

கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில், பரணி தீபம், அண்ணாமலையார் தீபம் (மகா தீபம்), விஷ்ணு தீபம், நாட்டுக்கார்த்திகை தீபம், தோட்டக்கார்த்திகை தீபம் என ஐந்து நாட்கள் தீபங்கள் ஏற்றப்படும்.

முதல்நாள் பரணி தீபம் ஏற்றுவார்கள். பரணி காளிக்குரிய நாளாகும். ஆதிநாளில் காளிதேவியை வழிபடும் நோக்கத்தில் பரணி தீபத்தைக் கொண்டாடினார்கள். 

அண்ணாமலையார் தீபம் கார்த்திகை மாதக் கிருத்திகை நட்சத்திரத்தில், மலையின் உச்சியில் விளக்கேற்றுவதுடன் இல்லங்கள்தோறும் ஏராளமான விளக்குகளை ஏற்றுகின்றனர். இது, சிவபெருமானை குறித்து கொண்டாடும் விழாவாகும். இதை அண்ணாமலையார் தீபம் என்று அழைக்கின்றனர்.

பரணி தீபம் என்றால் என்ன?

அதிகாலையில் பரணி தீபம் அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்டு, பின்னர் அர்த்த மண்டபத்தில் ஐந்து தீபங்களாக இவை காட்டப்படும். கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில் இந்த தீபம் காட்டப்படுவதால் 'பரணி தீபம்" என்று பெயர் பெற்றது. 

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற சிவனின் ஐந்து அம்சங்களையும் காட்டும் விதமாகவே பரணி தீபம் காட்டப்படுகிறது. அதன் பின்னர், மாலை 6 மணி அளவில் திருவண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

பாவங்களைப் போக்கும் பரணி தீபம் :

தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகல திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரத்தன்று இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

மண் விளக்குகளை வீட்டின் வாசல் படிகளிலும், உள்ளே உள்ள வாசல்களிலும் படிக்கு மூன்று வீதம் ஏற்றி வைப்பது மரபு. வீட்டில் நல்லெண்ணெயிலும், முருகன் முன்னிலையில் இலுப்பெண்ணெயிலும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் அஷ்டலட்சுமிகளும் வீட்டில் அடியெடுத்து வைப்பார்கள், ஐஸ்வர்யம் பெருகும்.

தீப பலன்கள் :

நமது வீட்டு பூஜையறையில் ஒரு முக தீபம் ஏற்றினால் மத்திம பலன் தரும். இரண்டு முக தீபம் ஏற்றினால் குடும்பம் ஒற்றுமை தரும். மூன்று முக தீபம் ஏற்றினால் புத்திர சுகம் தரும். நான்கு முக தீபம் ஏற்றினால் பசு, பூமி சுகம் தரும். ஐந்து முக தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.

அடிமுடி காண முடியாதவன் சிவபெருமான் என்பதை விஷ்ணுவும், பிரம்மாவும் உணர்வதை முன்னிட்டு, அடிமுடியற்ற ஜோதி சொரூபனாக அவர்களுக்கு சிவபெருமான் காட்சி தந்த திருத்தலம் திருவண்ணாமலை. அதை கொண்டாடும் வகையிலேயே மகா கார்த்திகை தீப திருநாளன்று திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

barani dheepam yetrum murai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->