தொடர்ந்து போராடும் மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய விஜயகாந்த்.! வெளியிட்ட அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், "மயிலாடுதுறையை தலைமையிடமாகவும், புதிய மாவட்டமாகவும் அறிவிக்க வேண்டும்" என வலியுறுத்தி இருக்கின்றார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மயிலாடுதுறையை தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டமாக அமைக்க அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 1991 ஆம் ஆண்டிலிருந்து 28 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். 1997 ஆம் ஆண்டு நாகை மாவட்டத்தை இரண்டாக பிரித்து திருவாரூர் மாவட்டம் உதயமானது. மயிலாடுதுறை மக்களின் கோரிக்கை பரிசீலித்த தமிழக அரசு 2004 ஆம் ஆண்டு மயிலாடுதுறையை தனி மாவட்டமாக உருவாக்குவதற்கு கொள்கை அளவில் முடிவெடுத்து, அதற்கான நிர்வாக ரீதியான பணிகளையும் மேற்கொண்டது. அப்போது சுனாமி பேரலை சீற்றம் ஏற்பட்டதன் காரணமாக அப்பணி முடங்கிவிட்டது. 2013 ஆம் ஆண்டில் அப்பகுதிமக்கள் தேமுதிக விடம் தொடர் கோரிக்கைகளை வைத்ததன் அடிப்படையில், நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சட்டசபையில் பேசினேன். மீண்டும் தமிழக அரசு 2013 ஆம் ஆண்டில் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அமைக்க வருவாய்த்துறை நிர்வாகம் ஆணையர் மூலமாக, நாகை மாவட்ட நிர்வாகத்திடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அப்போது மாவட்ட நிர்வாகம் மூலம், மாவட்டத்தை பிரிப்பதற்கான பரிந்துரையை வருவாய்த்துறை நிர்வாக ஆணையரிடம் அளிக்கப்பட்டது. பின் தொடர் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாமல், எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளாமல் மீண்டும் முடக்கப்பட்டுவிட்டது.

இதற்கிடையில் திருவாரூர் மாவட்டத்தின் சில பகுதிகளையும், தஞ்சாவூர் மாவட்டத்தின் சில பகுதிகளையும் இணைத்து கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்பட உள்ளது என சில ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வந்ததையொட்டி, மயிலாடுதுறை மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்கள். சில மாதங்களுக்கு முன் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்பின் கடந்த ஜூலை 18 ம் தேதி அன்று தென்காசி, செங்கல்பட்டு ஆகிய இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதற்கான அறிவிப்பையும் தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளார்கள்.

பல ஆண்டுகளாக போராடிக்கொண்டிருக்கும் மயிலாடுதுறை மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற இந்த அரசு தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்வதோடு, மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளையும், 241 ஊராட்சிகளையும், 288 வருவாய் கிராமங்களையும், மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் 9.15 லட்சம் மக்கள் தொகை உள்ள மயிலாடுதுறையை தலைமை இடமாக கொண்டு, புதிய மாவட்டமாக பிரிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் மயிலாடுதுறை பொதுமக்களின் அன்றாடம் ஏற்படக்கூடிய பிரச்சினைகளையும், குறைகளையும் எடுத்துரைப்பதற்கு யூனியன் பிரதேசமாக இருக்கும் காரைக்காலை கடந்து பல கிலோமீட்டர் சென்று நாகை மாவட்ட ஆட்சியரை அணுக வேண்டிய சூழ்நிலை இருப்பதாலும், மயிலாடுதுறையில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளும், கோவில்களும் இருப்பதாலும் 28 ஆண்டுகளாக போராடிக்கொண்டிருக்கும் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, மயிலாடுதுறை மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்." என அவர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijaykanth new announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->