திமுக எடுத்த சர்வே! மகளிர் வாக்குகளை அள்ளும் விஜய்.. திமுகவுக்கு விஜய்யால் வந்த நெருக்கடி.. புதிய வியூகம் வகுத்த ஸ்டாலின்!
Survey taken by DMK Vijay is winning women votes Vijay crisis for DMK Stalin has devised a new strategy
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, திமுக ஒரு புதிய அதிரடி வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநிலத்தின் 38 மாவட்டங்களிலும் — ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு பெண் வேட்பாளருக்கு வாய்ப்பு வழங்கும் திட்டத்தை திமுக தலைமை ஆராய்ந்து வருகிறது. இதன் மூலம் சுமார் 40 முதல் 50 பெண்களுக்கு வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது.
மகளிர் வாக்குகளை தன்னுடன் இணைக்கவே திமுக இத்திட்டத்தை தீட்டியுள்ளதாகவும், இதற்கான உத்தேச பட்டியல் மாவட்டச் செயலாளர்களிடம் இருந்து கேட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது திமுகவில் ஆறு பெண் எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளதால், வரும் தேர்தலில் பெண்களுக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்க திமுக முடிவு செய்துள்ளது.
இதனுடன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான இளைஞரணி நிர்வாகிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இளைஞர்கள் மற்றும் மகளிர் வாக்குகளை ஒரே சமயத்தில் கவரும் வியூகமே இது என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக மகளிரை மையப்படுத்தி மகளிர் உரிமைத் தொகை, விடியல் பேருந்து திட்டம், புதுமைப் பெண் போன்ற திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டன. இவை நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல பலனை தந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் தற்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) களமிறங்கியுள்ளதால், மகளிர் மற்றும் இளைஞர் வாக்குகளில் திமுகவுக்கு சவால் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
இதற்கிடையில் திமுக நடத்திய கருத்துக் கணிப்பில், விஜய்க்கு சுமார் 23 சதவீத வாக்குகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் மகளிர் வாக்குகளை மீண்டும் தன்னகத்தே உறுதி செய்வதற்காக திமுக இந்த புதிய வியூகம் வகுத்துள்ளது.
மேலும், டிசம்பர் 15 முதல் புதிய விண்ணப்பத்தாரர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருப்பது, இந்த வியூகத்துடன் நேரடியாக இணைக்கப்பட்ட ஒரு அரசியல் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
அடுத்த சில மாதங்களில் மகளிரை குறிவைத்து இன்னும் சில புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. வரவிருக்கும் 2026 சட்டசபைத் தேர்தலில் “மகளிரின் வாக்கு வங்கியை” திமுக உறுதி செய்யுமா என்பதே தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
Survey taken by DMK Vijay is winning women votes Vijay crisis for DMK Stalin has devised a new strategy