கரூர் கூட்ட நெரிசல்; பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் கட்டணமில்லா சிகிச்சை: செந்தில் பாலாஜி அறிவிப்பு..!
Senthil Balaji announces arrangements to provide free treatment at private hospitals to those affected by the Karur stampede
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது வரை 36 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. கூட்டத்தில் மயக்கமடைந்த 50க்கும் மேற்பட்டோர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டார். அத்துடன், அங்கு நிலவி வரும் சூழல் குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாமக்கல், சேலத்தில் இருந்து மருத்துவர்களை கரூருக்கு வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளிலும் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள நிலவரம் குறித்து விசாரித்தோம். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குழந்தைகள் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை வழங்கி வருகிறார்கள். மேலும் உயிரிழப்பு ஏற்படாத வகையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்ட பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
English Summary
Senthil Balaji announces arrangements to provide free treatment at private hospitals to those affected by the Karur stampede