2-வது சம்மன்...! நெரிசல் தெரிந்தும் ஏன் போனீங்க...? - விஜய்யை சூழ்ந்த சிபிஐ கேள்விகள்
Second summons Why did you go despite knowing about crowd CBI questions surround Vijay
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கட்டுப்பாடற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்த துயரச் சம்பவம் தொடர்பான வழக்கை தற்போது சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் நீண்ட நேரம் கேள்விகள் எழுப்பப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.இதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 12-ம் தேதி தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ முதல்முறையாக சம்மன் அனுப்பியது. அதை ஏற்று விஜய் டெல்லி சென்று சிபிஐ அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜரானார்.
அப்போது அவரிடம் தொடர்ந்து 7 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பொங்கல் பண்டிகை காரணமாக விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்ற விஜய்யின் கோரிக்கையை சிபிஐ அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.அதன்பின், மீண்டும் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்க்கு இரண்டாவது சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த அழைப்பையும் ஏற்று விஜய் மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் சம்பவம் தொடர்பாக அடுக்கடுக்காக கூர்மையான கேள்விகள் எழுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கூட்ட நெரிசல் ஏற்பட்ட பிறகும் ஏன் தொடர்ந்து பிரசாரம் செய்தீர்கள்?
உங்கள் பேச்சை எப்போது முடித்தீர்கள்?
அங்கிருந்து எப்போது புறப்பட்டீர்கள்?
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கூட்டம் எப்படி கூடியது?
அவ்வளவு பெரிய கூட்டத்தை நிர்வாகிகள் கவனிக்கவில்லையா?
தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்ட போது கூட்ட நெரிசலைக் காணவில்லையா?
வாகனத்தில் ஏறி நின்றபோது கீழே நடந்ததை கவனிக்கவில்லையா?
கண் எதிரே நடந்த நெரிசலை பார்த்தும் ஏன் வாகனத்தை முன்னே நகர்த்தினீர்கள்?
என சிபிஐ அதிகாரிகள் தொடர்ச்சியாக கேள்விகள் எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலளித்த விஜய்,“நான் முழுமையாக தமிழக போலீசாரை நம்பினேன். அவர்களது வழிநடத்தலின் படியே நான் செயல்பட்டேன்”என்று விளக்கம் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில், இன்று நடைபெற்ற விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளது.
சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை முடிந்ததும் அவர் சிபிஐ அலுவலகத்திலிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். இன்று இரவே அவர் சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது .
சிபிஐ எழுப்பிய பெரும்பாலான கேள்விகளுக்கு விஜய் ஓரிரு வரிகளில் மட்டுமே பதில் அளித்ததாகவும், சில கேள்விகளுக்கு அவகாசம் கோரியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், விஜய்யிடம் சிபிஐ விசாரணை மேலும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையே, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் அடுத்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாகவும், அந்த குற்றப்பத்திரிகையில் விஜய் பெயரும் இடம் பெறலாம் என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
Second summons Why did you go despite knowing about crowd CBI questions surround Vijay