சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைக்கு திமுக சம்மதம்?! ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை! - Seithipunal
Seithipunal


"சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்கட்சியாக இருந்தபோது எதிர்த்துவிட்டு, தற்போது தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது குறித்து வாய் திறக்காமல் இரட்டை நிலைப்பபாட்டை கடைபிடிக்கும் திமுக அரசிற்கு கடும் கண்டனங்கள்" என்று, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "பரந்தூர் விமான நிலையத்திற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த துடிக்கும் தி.மு.க. அரசு, கோவையில் தொழிற்பூங்கா என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை பறிக்க திட்டமிட்டுள்ள தி.மு.க. அரசு, தற்போது சென்னை-சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்திருப்பதாக இன்று பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது தி.மு.க. அரசின் இரட்டை வேடத்திற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அரசு மருத்துவர்களுக்கான காலமுறை ஊதிய உயர்வு ஆணையை செயல்படுத்துவதாக கூறிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், முதலமைச்சரான பிறகு அதுபற்றி வாய் திறக்காமல் இருக்கிறார். அதுகுறித்து போராட்டம் நடத்தினால் அவர்கள்மீது பழிவாங்கும் நடவடிக்கையை தி.மு.க. அரசு எடுத்து வருகிறது.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, முந்தைய தி.மு.க. அரசினால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட ஊதிய முரண்பாட்டினை நீக்குவேன் என்று கூறி, அதனை தேர்தல் வாக்குறுதியிலும் சேர்த்த தி.மு.க. தலைவர் திரு. மு.க. ஸ்டாலின், முதலமைச்சரான பிறகு அதை நிறைவேற்ற மறுக்கிறார். இதுபோன்ற தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாட்டிற்கு பல உதாரணங்கள் உள்ளன.

தற்போது சென்னை-சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்திலும் இரட்டை நிலைப்பாட்டினை தி.மு.க. அரசு எடுத்திருக்கிறது. புது டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சரை சந்தித்துப் பேசிய பிறகு, "சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை தி.மு.க. எதிர்த்தது என்பதும், தற்போது நிலையை மாற்றிக் கொண்டதாக கூறப்படுவதும் சரியானது அல்ல" என்று தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் கூறியிருப்பதாக இன்று பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம்.

இதுகுறித்து 11-6-2018 அன்று சட்டமன்றத்தில் தி.மு.க. சார்பில் பேசிய திரு. ஐ. பெரியசாமி அவர்கள், "சென்னை முதல் சேலம் வரையான எட்டு வழிச் சாலை மிக அவசியமாக இந்த மக்களுக்கு சோறு போடப் போகிறதா?” என்று வினவினார். மேலும் அவர் பேசுகையில், “சேலத்திற்கு அருகில் இருக்கக்கூடிய கல்வராயன் மலையாக இருந்தாலும் சரி, அல்லது அதற்கு அருகில் இருக்கக்கூடிய கஞ்சமலையாக இருந்தாலும் சரி, இந்தப் பகுதிகளில் எல்லாம் iron ore இருப்பதாகவும். Jindal போன்ற தனியார் நிறுவனங்கள் எதிர்காலத்திலே நம்முடைய தாது வளங்களையெல்லாம் சுரண்டி, ஏற்றுமதி செய்வதற்கு துறைமுகத்தை இணைப்பதற்காகத்தான் இந்தச் சாலையை அமைப்பதற்கான முக்கியத்துவத்தை இந்த அரசு கொடுப்பதாக பேசப்படுகிறது" என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேட்டி அளித்த தி.மு.க. தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், "கமிஷன் வாங்குவதற்காக மக்களைப் பற்றி கவலைப்படாமல், விவசாயத்தைப் பற்றி கவலைப்படாமல் 10,000 கோடி ரூபாய் திட்டத்தை கொண்டுவர அரசு முனைப்பாக இருக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, "தி.மு.க.விற்கு வாக்களித்தால் சென்னை-சேலம் எட்டு வழிச் சாலை திட்டம் நிறுத்தப்படும்" என்று கூறியவர்தான் தி.மு.க. தலைவர். மேலும், "இந்தத் திட்டத்தின்மூலம் 8000 ஏக்கர் விவசாய நிலங்கள், காப்புக் காடுகள், மலைகள், பாதிப்படையும்" என்றும் கூறினார். இது 23-03-2019 நாளிட்ட பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது. உண்மை நிலை இவ்வாறிருக்கையில், தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரின் தற்போதைய பேட்டி "தி.மு.க.விற்கு வர வேண்டியது வந்து விட்டதோ" என்ற சந்தேகத்தை மக்கள் மனதில் எழுப்பியுள்ளது. தி.மு.க.வின் இந்த இரட்டை நிலைப்பாட்டிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எதிர்த்த திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், தற்போது தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது குறித்து வாய் திறக்காமல் இருப்பது "மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி” என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. இந்தத் திட்டம் குறித்த தி.மு.க. அரசின் நிலைப்பாட்டினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்" என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Say About Salem To Chennai Road DMK 2023


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->