ஒவ்வொரு குடும்பத்துக்கும் மோட்டார் சைக்கிள்! -விஜயின் அறிவிப்பு அரசியலில் புதிய அலை!
motorcycle for every family Vijays announcement new wave in politics
தமிழக அரசியல் சூழலை கலக்கும் வகையில், நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் 2026 ஏப்ரல் சட்டசபை தேர்தலில் முதன்முறையாக களம் இறங்கத் தயாராகி வருகிறது. இதையடுத்து, விஜய் நடத்தி வரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் அவர் முன்வைக்கும் கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் வாக்காளர்களை கவரும் பல திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், விஜய் மட்டும் “சாத்தியமான வாக்குறுதிகளையே செயல்வடிவம் கொடுப்போம்” என்று தெளிவாக கூறி வந்தார்.ஆனால், கரூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவத்துக்குப் பிறகு அவர் நிகழ்ச்சிகளை நிறுத்தி வைத்தார்.

பின்னர், நேற்று காஞ்சீபுரத்தில் நடந்த கூட்டத்தில் மக்கள் சந்திப்பை மீண்டும் தொடங்கினார்.இந்த முறை திறந்த வெளியில் அல்லாமல் 2,000 பேருக்கான சிறப்பு அரங்கில் கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.அந்த கூட்டத்தில் விஜய், தனது முந்தைய நிலைப்பாட்டுக்கு மாறாக பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினார்.
“அனைவருக்கும் வீடு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் மோட்டார் சைக்கிள்” போன்ற அறிவிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.ஆளுங்கட்சிகளுடன் நேரடியாக மோத வேண்டுமெனில், கைக்குள்ள நெருப்பு போல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை முன்வைக்க வேண்டிய கட்டாயம் விஜய்க்கும் ஏற்பட்டுவிட்டது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஆனால், இவ்வாறான அறிவிப்புகளை உண்மையில் நிறைவேற்றுவது சாத்தியமா? என்பதைப் பற்றிய கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.1967 வரை மாநில அரசுக்கு கடன் இல்லாத நிலையில், திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தபின்னர் தொடர்ந்து கடன் எடுப்பு அதிகரித்து, இன்று அது ரூ.10 லட்சம் கோடி அளவை தாண்டியுள்ளது.2025–2026 நிதியாண்டு முடிவில், தமிழக கடன் ரூ.15 லட்சம் கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் மக்களை கவரும் நோக்கில் திட்டங்களை அறிவிப்பது வழக்கம். ஆனால் அவற்றை செயல் படுத்த அரசாங்கங்கள் மாபெரும் கடன்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது.
2006-இல் திமுக அரசு இலவச வண்ண டிவி, 2011-இல் அதிமுக அரசு மிக்சி–கிரைண்டர்–விசிறி, தற்போது திமுக அரசு குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது என ஒவ்வொரு காலகட்டத்திலும் “ஆட்சி பிடிக்கும் வாக்குறுதிகள்” அதிக கடன் சுமையைக் கூட்டியுள்ளதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.அதே பாதையில், இப்போது விஜய்யும் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அளித்து விட்டார். ஆனால்,
அவற்றை எப்படி நிறைவேற்றப் போகிறார்?
அதற்கான நிதி எங்கிருந்து வரும்?
என்பதற்கான எந்த விளக்கமும் அவர் தரவில்லை.எதுவாயினும்…அரசியல் தலைவர்கள் வாக்குகளைப் பெற பல வண்ண வாக்குறுதிகளை வெளிப்படுத்துவது வழக்கமாகிவிட்ட நிலையில்,அவற்றை செயல்படுத்த பணம் எப்படி கிடைக்கும் என்பதையும் தெளிவாக கூறவேண்டும்
என்பதே மக்களின் வலியுறுத்தலாக மாறியுள்ளது.
English Summary
motorcycle for every family Vijays announcement new wave in politics