ஆளுநர் என்ன ஆண்டவரா..? தீட்சிதர்களுக்கு தனி சட்டம் இருக்கா..? ஆர்.என் ரவியை விளாசிய அமைச்சர் சேகர்பாபு..!!
Minister SekarBabu criticized TN Governor RN Ravi
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது "தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சி. தவறு எங்கு நடந்திருந்தாலும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை திருமணம் மறுப்பு என்பது 1930 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம். அப்போது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கூட குழந்தைகள் திருமணத்திற்கு உட்படுத்தப்பட்டதை தடுப்பதற்காக தான் இந்த சட்டம் இயற்றப்பட்டது. பெண்ணுரிமை என்று பேசுகின்ற இந்த நாட்டில் தமிழக முதல்வரின் திராவிட மாடல் ஆட்சியில் 4 புகார்கள் பெறப்பட்டன.
அந்த 4 புகார்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சொல்லுகின்றது போல் இரட்டை விரல் பரிசோதனை நடைபெற்றதாக எந்த குறிப்பிலும் இல்லை. சட்டத்திற்கு உட்பட்டு நடத்தப்பட்ட அந்த பரிசோதனையில் கூட முழுமையாக பெண் மருத்துவர்கள் தான் ஈடுபட்டுள்ளனர் என்பதை காவல்துறையினர் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆளுநரை கேட்பது என்னவென்றால் சட்டமீறல், விதிமீறல் நடந்தால் சட்டம் சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீது பாய கூடாதா..? சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் அவர்களுக்கு என ஆளுநர் தனியாக சட்டம் வகுத்து தந்துள்ளாரா.? சட்டம் அனைவருக்கும் பொதுவானது. எனவே விதிமீறல்கள் எங்கு நடந்தாலும் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சிதம்பரம் திருக்கோயில் தீட்சிதர்கள் விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் புகார்களின் மீது ஆதாரங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநர் என்ன ஆண்டவரா..? தமிழ்நாட்டை ஆள்வது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி..? அண்ணா சொன்னது போல ஆட்டுக்கு தாடி தேவையில்லை, ஒட்டுமொத்த ஒன்றியத்திற்கு ஆளுநர்கள் தேவையில்லை என்பதுதான் திமுகவின் கொள்கை.
ஆகவே நியமன பதவியில் வந்த ஆளுநர் சொல்வதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆட்சி. எனவே மக்களுக்கு செய்ய வேண்டிய நன்மையை நோக்கி தான் இந்த ஆட்சி நகரும். ஆளுநரை குற்றச்சாட்டுக்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
ஆளுநரின் கூற்றை ஏற்க மறுக்கின்ற பல அரசியல் கட்சிகள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இவைகளே போதுமானவை. மக்கள் பணிகளை செய்து கொண்டிருக்கின்ற முதல்வரை ஆளுநரே பாராட்டியும் உள்ளார். ஏதோ ஒரு நிர்பந்தத்திற்காக பொய் குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார். எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலும் ஆளுமை மிக்க முதல்வர் மு.க ஸ்டாலின் என்பதால் அவர் அனைத்தையும் எதிர்கொள்வார், அனைத்தையும் வென்று காட்டுவார். காலாவதியாகப் போவது ஆளுநர் தானே தவிர திராவிட மாடல் அல்ல.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. இந்த திராவிட மாடல் ஆட்சி கர்நாடக மாநில தேர்தல் களத்தில் கூட பாஜக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டியாக இருக்கின்ற ஆட்சி திராவிட மாடலா ஆட்சி. காலாவதியாக போவது திராவிட மாடல் ஆட்சி அல்ல. அவர் எந்த இயக்கத்தை முன்னிலைப்படுத்த நினைக்கிறாரோ அந்த இயக்கம் தமிழகத்தில் காலாவதி ஆகிவிடும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கடமையாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
Minister SekarBabu criticized TN Governor RN Ravi