உள்ளாட்சித் தேர்தல் சவால்: "ஒரு மேயர் இடமாவது தவெக வென்றால் ஒரு பக்க மீசையை எடுத்துக்கொள்கிறேன்" - ஆர்.எஸ். பாரதி
Local government election challenge If Tvk wins at least one mayoral seat I will take a side mustache RS Bharathi
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் திமுக இடையேயான அரசியல் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை மையமாக வைத்து இரு கட்சிகளும் நேரடி சவால்களை முன்வைத்து வருகின்றன.
சென்னையில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவை கடுமையாக விமர்சித்தார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுத்த அவர், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் எனக் கூறினார்.
அப்போது பேசிய ஆதவ் அர்ஜுனா,"75 ஆண்டுகால வரலாறு கொண்ட திமுக என்றால், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 25 மேயர் பதவிகளில் குறைந்தபட்சம் ஒரு இடத்தையாவது வென்று காட்டுங்கள். எங்கள் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி அவமதிக்கப்பட்ட நாளிலிருந்தே தேர்தல் பணியை தொடங்கிவிட்டோம்" என்று தெரிவித்தார்.
இந்தப் பேச்சுக்கு பதிலளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்களை கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறுகையில்,"76 ஆண்டுகால திமுக வரலாற்றில் இதுபோன்ற பலரை பார்த்திருக்கிறோம். அரசியலில் மிக வேகமாக பேசுபவர்களுக்கு மக்கள் சரியான பதிலை அளித்துள்ளார்கள். திமுக பல தோல்விகளை சந்தித்துள்ளது. அதேநேரத்தில் பல வெற்றிகளையும் பெற்றுள்ளது. எம்.ஜி.ஆரை விட பெரிய தலைவர்கள் யாரும் இல்லை; விஜயும் அல்ல."
மேலும்,
"1984 தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற 1986 உள்ளாட்சித் தேர்தலில் 102 நகராட்சிகளில் 90 நகராட்சிகளை திமுக கூட்டணி வென்றது. அதனால் தேர்தல் முடிவுகளை வைத்து திமுகவை மதிப்பிட முடியாது" என்றார்.
தொடர்ந்து சவால் விடுத்த ஆர்.எஸ். பாரதி,
"ஆறு மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள். ஒரு மேயர் பதவியிலாவது தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றால், நான் ஒரு பக்க மீசையை எடுத்துக்கொள்கிறேன். இந்த சவாலை தவெக ஏற்க தயாரா?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும்,
"ஸ்டாலினுக்கோ, உதயநிதி ஸ்டாலினுக்கோ சவால் விடும் அரசியல் தகுதி ஆதவ் அர்ஜுனாவுக்கு இல்லை. விஜய்க்கு எதிர்காலத்தில் அரசியல் சிக்கல் ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு காரணமாக இருப்பவர் ஆதவ் அர்ஜுனாதான்" என்றும் அவர் தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் தவெக இடையிலான வார்த்தைப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த சவால் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் இரு கட்சிகளின் அரசியல் தாக்குதல்களும் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Local government election challenge If Tvk wins at least one mayoral seat I will take a side mustache RS Bharathi