யாரும் உங்க நாடகத்தை நம்ப மாட்டாங்க - உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறிய செயலை கடுமையாக கண்டிக்கும் டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


முல்லைப் பெரியாற்றின் குறுக்கே இப்போதுள்ள அணைக்கு கீழே புதிய அணை கட்டுவதால் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது; அதனால், திட்டமிட்ட இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான  பணிகளை கேரள அரசு தொடங்க வேண்டும் என்று அம்மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள வல்லுனர்  குழு பரிந்துரைத்துள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "முல்லைப் பெரியாற்றில் தற்போதுள்ள அணையிலிருந்து 366 மீட்டர் கீழே புதிய அணை கட்டுவதால் இப்போதுள்ள அணை மற்றும் புதிதாக கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஏதேனும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து ஐதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்திருந்தது. 

அதை ஆய்வு செய்வதற்காக கேரள அரசால் அமைக்கப் பட்டிருந்த வல்லுனர் குழு தான் இந்த பரிந்துரையை அளித்திருக்கிறது. வல்லுனர் குழுவின் பரிந்துரையை ஏற்று ரூ.1,500 கோடி செலவில் புதிய முல்லைப் பெரியாறு அணையை கட்டுவதற்கு முடிவு செய்துள்ள கேரள அரசு, அதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது.

கேரள அரசின் இந்த நடவடிக்கை ஒருபுறம் அப்பட்டமான உச்சநீதிமன்ற அவமதிப்பு என்றால், மற்றொருபுறம் திட்டமிடப்பட்ட நாடகம் ஆகும். முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான தேவை எள் முனையளவும் ஏற்படவில்லை. 

முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கோரி கேரள அரசால் தொடரப்பட்ட வழக்கில் 2014ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்,‘‘முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலிமையாக உள்ளது. அங்கு புதிய அணை கட்டினால் எவ்வளவு வலிமையாக இருக்குமோ, அதைவிடக் கூடுதல் வலிமையுடன் இப்போதைய அணை உள்ளது. எனவே, புதிய அணை தேவையில்லை. மாறாக அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்று ஆணையிட்டிருந்தது.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு முல்லைப் பெரியாற்று அணையின் வலிமை குறித்து, உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட  கண்காணிப்புக் குழு ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு செய்து வருகிறது. அனைத்து ஆய்வுகளிலும் முல்லைப் பெரியாறு அணை வலிமையாக இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கேரள அரசு மதிக்கிறது என்றால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும், கண்காணிப்புக் குழுவின் ஆய்வு முடிவுகளையும் ஏற்று முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தி, அதன் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கான தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்வதற்கு கேரள அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

முல்லைப்பெரியாற்று அணையின் அங்கமான பேபி அணை பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்டினால் மட்டும் தான் அணையை வலுப்படுத்த முடியும். ஆனால், கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசு பலமுறை கேட்டுக் கொண்ட பிறகும் கூட, அதற்கு கேரள அரசு அனுமதி அளிக்கவில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய வழக்கு தொடர்ந்த நிலையில் தான்,  இந்த விவகாரத்தை திசை திருப்பும் நோக்கத்துடன் புதிய அணையை கட்டப்போவதாக கேரள அரசு அறிவித்திருக்கிறது.

முல்லைப்பெரியாற்றின் நீர் எந்த வகையிலும் கேரளத்திற்கு தேவைப்படாது. அதனால், புதிய அணை  கட்ட வேண்டிய தேவை இல்லை. ஆனாலும், முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளம் பிடிவாதம் பிடிப்பதன் நோக்கம், அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப் படுவதை தடுக்க வேண்டும் என்பது தான். 

முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்கப் பகுதிகளில் ஏராளமான சொகுசு விடுதிகளும், கேரள பிரபலங்களின் மாளிகைகளும் கட்டப்பட்டுள்ளன. அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால் அவை நீரில் மூழ்கி விடும். அவற்றை காக்கவே அணையின் நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் தடுக்கும் நோக்கத்துடன் புதிய அணை கட்டப்பட வேண்டும் என்ற முழக்கத்தை எழுப்பி கேரள அரசு நாடகம் ஆடி வருகிறது. இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.

முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய கேரள அரசே ஒரு நிறுவனத்தை நியமிப்பதும், அந்நிறுவனத்தின் அறிக்கையை ஆய்வு செய்ய கேரள அரசே வல்லுனர் குழுவை அமைப்பதும், அதன் பரிந்துரையை கேரள அரசே ஏற்றுக் கொள்வதும் திட்டமிடப்பட்ட நாடகம் என்பதைத் தவிர வேறல்ல. இந்த நாடகத்தை எவரும் நம்ப மாட்டார்கள்.

கேரள அரசின் இந்த நாடகத்தை தமிழக அரசு அம்பலப்படுத்த வேண்டும். பேபி அணை பகுதியில் உள்ள மரங்களை வெட்ட அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து அனுமதி பெற வேண்டும். 

அந்த மரங்களை அகற்றி அணையை வலுப்படுத்தும் பணிகளை விரைவாக முடித்து, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முன்பிருந்தவாறு 152 அடியாக உயர்த்த தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About Kerala Govt Mullai Periyaru dam Issue 131222


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->