அண்ணாமலை பல்கலைக்கழக தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் - மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தொகுப்பூதிய பணியாளர்கள், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தொடர்ந்து ஒன்பதாவது நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இரவு, பகல் பாராமல் போராடி வரும் அவர்களுடன் பேச்சு நடத்தக் கூட பல்கலை. நிர்வாகம் முன்வராதது கண்டிக்கத்தக்கது என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் 206 பணியாளர்களும், தினக்கூலி அடிப்படையில் 140 பணியாளர்களும் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மாதம் ரூ.3,500 முதல் ரூ.7,000 வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. தினக்கூலி பணியாளர்களுக்கு அவர்கள் பணி செய்யும் நாட்களுக்கு மட்டும் தான் ஊதியம் வழங்கப்படும். அவர்களுக்கு கிடைக்கும் ஊதியம் தொகுப்பூதியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைக் காட்டிலும் மிகவும் குறைவாகும். தொகுப்பூதிய பணியாளர்கள் கடந்த 2010-ஆண்டு நியமிக்கப்பட்டனர். அப்போது அவர்களின் சராசரி ஊதியம் ரூ.1,500 ஆகும். அதன்பின் 13 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவர்களின் சராசரி ஊதியம் இப்போது தான் ரூ.5000 என்ற அளவை எட்டி உள்ளது. இதை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்த இயலாது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

அண்ணாமலைப் பல்கலைக்கழக விதிகளின்படி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் கால முறை ஊதியத்தின் அடிப்படையில் தான் நியமிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் ஆசிரியர் அல்லாத பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் சில காலத்திற்கு தற்காலிகமாக பணியாற்றிய பிறகு தான் பணி நிலைப்பு செய்யப்படுவர். இப்போது தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றும் அனைவரும் பல்கலைக்கழக நிர்வாகம் தனியாரிடம் இருந்த போது நியமிக்கப்பட்டவர்கள். அந்த நிர்வாகம் தொடர்ந்திருந்தால் அடுத்த சில ஆண்டுகளில் இவர்கள் பணி நிலைப்பு பெற்று பெருந்தொகையை ஊதியமாக பெற்றிருப்பார்கள். ஆனால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் பல்கலைக் கழகம் வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இவர்களின் கோரிக்கை மட்டும் ஏற்கப்படவில்லை.

தொகுப்பூதியர்களாகவும், தற்காலிக ஊழியர்களாகவும் பணியாற்றி வரும் அனைவரும், அவர்கள் செய்யும் பணிக்கு ஏற்ற கல்வித் தகுதியை பெற்றவர்கள் ஆவர். இவர்களின் நியமனம் முழுவதும் விதிகளின்படியும், பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு ஒப்புதலுடனும் தான் செய்யப்பட்டுள்ளது. பணி நிலைப்பு செய்வதற்கான தகுதியும், திறமையும் கொண்ட தொகுப்பூதியர்களையும், தினக்கூலி பணியாளர்களையும் பணி நிலைப்பு செய்ய பல்கலை. நிர்வாகம் மறுப்பது எந்த வகையிலும் நியாயமற்றது.

தொகுப்பூதியர்களுக்கும், தினக்கூலி தொழிலாளர்களுக்கும் பணி நிலைப்பு வழங்குவதைத் தவிர்க்க  பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்ந்து ஓர் உத்தியை செயல்படுத்தி வருகிறது. பணி நிலைப்பு கோரி  குரல் கொடுக்க அவர்கள் எப்போதெல்லாம் தயாராகிறார்களோ, அப்போது அவர்களை பணி நீக்கம்  செய்யப் போவதாக பல்கலைக்கழக நிர்வாகமே ஒரு செய்தியை பரப்பும். அதன் மூலம் பணியாளர்களின்  வாழ்வாதாரத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி, அவர்களை கோரிக்கையிலிருந்து பின்வாங்கச் செய்யும். இது தான் பல்கலைக்கழக நிர்வாகத்தின் உத்தி ஆகும். இதை தங்களுக்கான வெற்றியாக பல்கலை. நிர்வாகம் நினைத்துக் கொள்ளலாம். ஆனால், இது அறம் அல்ல... மிரட்டி பணியவைக்கும் முயற்சி.

பல்கலைக்கழக பணியாளர்கள் ஏப்ரல் 27-ஆம் தேதி போராட்டத்தை தொடங்கிய போது, துணைவேந்தர் இல்லாத நிலையில் பொறுப்பு பதிவாளர் பேச்சு நடத்தியுள்ளார். அது வெற்றி பெறவில்லை. அதன்பின்  இன்று 9&ஆவது நாளாக போராட்டம் தொடரும் நிலையில், துணைவேந்தரோ அல்லது வேறு பிரதிநிதியோ அவர்களை அழைத்து பேசியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது பல்கலைக்கழகத்தின் அலட்சியத் தன்மையையும், மிரட்டிப் பணியவைக்கும் போக்கையும் தான் காட்டுகின்றன. இது சரியானது அல்ல.

அண்ணாமலை பல்கலைக்கழக பணியாளர்கள் மிகவும் வறிய நிலையில் இருப்பவர்கள். அவர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகம் காட்ட வேண்டியது கருணை தானே தவிர ஈகோ அல்ல. அதனால், அவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் அழைத்துப் பேசி உடனடியாக பணி நிலைப்பு செய்ய வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About Annamalai University Staffs salary and job permanent Issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->