அ.தி.மு.க - பா.ஜ.க நேரடி உறவுக்காரர்கள்...! ஆனால் திமுக அப்படி இல்ல...! -நாமக்கல் மேடையில் வெடித்த விஜய் குற்றச்சாட்டு
AIADMK BJP direct relatives But DMK not like that Vijays accusation exploded Namakkal stage
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு, விக்கிரவாண்டி, மதுரை போன்ற இடங்களில் பிரமாண்டமான மாநாடுகளை நடத்தி ரசிகர்களையும், தொண்டர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்திய நடிகர் விஜய், தற்போது சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாகனப் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
கடந்த இரண்டு வாரங்களில் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மக்களை சந்தித்துவிட்டு, இன்று நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். வழியெங்கும் த.வெ.க தொண்டர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர்.நாமக்கல் பி.கே. புதூரில் ஆயிரக்கணக்கான மக்களிடம் உரையாற்றிய விஜய் தெரிவித்ததாவது,"நாமக்கல் என்றாலே முட்டை உற்பத்தி தான்!

தினசரி 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்த மாவட்டத்தின் வளர்ச்சியை பற்றி ஆண்டுக்கட்சி, ஆளுங்கட்சி எவரும் சிந்தித்ததில்லை. தி.மு.க. எம்.எல்.ஏ. ஆட்சிக்காலத்தில் மருத்துவமனையில் நடந்த கிட்னி திருட்டு சம்பவத்தில் நாமக்கல் மக்கள் மிகுந்த பாதிப்படைந்தனர். நம் ஆட்சியில் இதில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.அவர் தொடர்ந்து, “விசைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை சிரமத்தில் உள்ளது.
அவர்களுக்கான சிறப்பு அறிவிப்பை தேர்தல் அறிக்கையில் வழங்குவோம். சாலை வசதி, குடிநீர், மருத்துவ வசதி, பெண்கள் பாதுகாப்பு போன்ற அடிப்படை தேவைகளை சமரசமின்றி நிறைவேற்றுவோம். நாங்கள் தரும் வாக்குறுதிகள் யதார்த்தமானவை – தி.மு.க போல ‘செவ்வாயில் ஐ.டி. கம்பெனி, வீட்டுக்குள் விமானம் ஓடும்’ என்று கற்பனைகள் சொல்லமாட்டோம்” எனக் கடும் தாக்குதலை நிகழ்த்தினார்.
மேலும், “பா.ஜ.க-வின் பாசிச அரசியலோடு எங்களுக்குச் சம்பந்தமில்லை. தி.மு.க போல ‘அண்டர்கிரவுண்ட் டீலிங்’ எதுவும் செய்யமாட்டோம். அ.தி.மு.க – பா.ஜ.க நேரடி உறவுக்காரர்கள். தி.மு.க. குடும்பமும் பா.ஜ.க-வுடன் ரகசிய உறவிலேயே இருக்கிறது. தி.மு.க.வுக்கு ஓட்டு போடுவது, பா.ஜ.க-வுக்கு ஓட்டு போட்டதற்கு சமம்” என்று அதிரடி குற்றச்சாட்டு எழுப்பினார்.
கடைசியாக, “2026 சட்டமன்றத் தேர்தலில் உண்மையான போட்டி த.வெ.க மற்றும் தி.மு.க இடையே தான் இருக்கும். ஒன்று மக்களின் நம்பிக்கையோடு நிற்கும் த.வெ.க, இன்னொன்று கொள்கை என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் தி.மு.க. மக்களின் ஆதரவோடு வெற்றி நிச்சயம் நமதே!” என உறுதியளித்தார்.
English Summary
AIADMK BJP direct relatives But DMK not like that Vijays accusation exploded Namakkal stage