துண்டு துண்டாக வெட்டப்பட்ட மருதநாயகம் பிள்ளை.! ஆங்கிலேயனை நடுங்கவைத்த சம்பவம்...! - Seithipunal
Seithipunal


பெரும் மழை பெய்து, பாண்டிச்சேரி நகரமே வெள்ளக்காடாக காட்சி அளித்தது. பிரெஞ்சியர்களால், பிரான்ஸ் நாட்டுப் பாணியில் கட்டமைப்பில், உருவான பாண்டிச்சேரி, மழையின் கோரத்தால், உருக்குழைந்து போயிருந்தது. வீடுகளில் எல்லாம் மழை நீர், குளம் போல் தேங்கி இருந்த நிலையில், அங்கிருந்த மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டு, செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்த வேளையில் தான், சத்தமில்லாமல், பிரிட்டிஷாரின் படை பாண்டிச்சேரிக்குள் நுழைந்தது.

நொந்து, சோர்ந்து போன மக்களின் மன நிலை, போருக்கு வந்திருந்த ஆங்கிலேயப்படையினைக் கண்டு, மேலும்  மிரண்டு போயிருந்தது. பாண்டிச்சேரி படையில் இருந்த வீரர்களில் பலர், நோயால் பிணி ஏற்பட்டு, எதிர்த்துப் போரிடவும் திராணியற்றுப் போயிருந்தனர்.

போதாக்குறைக்கு, ஆயுதக் கிடங்கில் இருந்த வெடி மருந்து உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும், மழையால் நமத்துப் போயிருந்தது. இது போதாதா? அதிகம் அலட்டிக் கொள்ளாமல், மிக எளிதாகவே, பாண்டிச்சேரி பிரிட்டிஷாரின் காலடியில் விழுந்தது. பிரெஞ்சுத் தளபதி லல்லித்தொலாந்தால், வேறு வழியின்றி சரணடைந்தார். ஆங்கிலேயப் படையினரின் ஆர்ப்பாட்டம் விண்ணைப் பிளந்தது.  

பிரிட்டிஷ் படையினை வழி நடத்திச் சென்ற, கர்னல் அயர் கூட் ரசனை மிகுந்தவர். ஓராண்டுக்கு முன்பு, 1760- ஜனவரி-22-ஆம் தேதி அன்று, வந்தவாசியில் நடைபெற்ற போரில், பிரெஞ்சுத் தளபதியான, காம்டி-டி-லாலியிடம், மண்ணைக் கவ்விய, ஆங்கிலேய கவர்னர் அயர் கூட், பாண்டிச்சேரி என்ற அழகிய நகரை, அப்படியே ஆக்கிரமித்துக் கொள்ளலாம். இதனை அழிக்க வேண்டாமே, என்று சென்னைக்கு தகவல் அனுப்பினார்.

ஆனால், சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், “மீண்டும், பிரெஞ்சியர், சிறிது காலம் கழித்து, இதே போன்ற ஒரு சூழலில், நம்மைத் தாக்க வரலாம். எனவே, பாண்டிச்சேரியில், பிரெஞ்சியர் இருந்ததற்கான, எந்த தடயமும் இருக்க கூடாது. அனைத்தையும் இடித்து தரை மட்டமாக்குங்கள்” என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால், அழகிய பிரெஞ்சியர் நகரான பாண்டிச்சேரி, ஆங்கிலேயரின் பீரங்கிக் குண்டுகளால், தரை மட்டமானது. டூப்ளேவின் அரண்மனை, தவிடு பொடியானது.

குடியிருப்பவர்கள் தான், என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு எல்லாம் மூன்று மாத கால அவகாசம் தந்து, அனைவரையும், வெளியேறச் செய்து, பாண்டிச்சேரியை வெறும் மண் மேடாக்கினார்கள் பிரிட்டிஷார். இந்தப் போருக்குப் பிறகு, பிரெஞ்சியருக்கென்று எந்ந ஒரு நிலமும் இந்தியாவில் இல்லை.

இதே சமயம், பிரிட்டனுக்கும், பிரான்சு நாடுகளுக்கிடையே தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக நடைபெற்ற போர் முடிவுக்கு வந்தது. இரண்டு பக்கமும், ஏகப்பட்ட இழப்புகள். 1763 – பிப்ரவரி-10-ஆம் தேதி, இரண்டு நாடுகளுக்கிடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. “பாரிஸ் உடன்படிக்கை” என்ற ஒப்பந்தப்படி, ஆங்கிலேயர் கைப்பற்றிய, பிரெஞ்சியரின் இடங்களை எல்லாம், மீண்டும் அவர்களிடமே ஒப்படைத்தது. அப்படித் தான், பாண்டிச்சேரியும், மீண்டும் பிரெஞ்சியரின் வசம் வந்தது.

பிரெஞ்சியரின் செல்வாக்கு மீண்டும் இந்தியாவில் உயரத் தொடங்கிய தருணத்தை, தனக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொண்டார், மதுரையின் கவர்னராக இருந்த மருதநாயகம். தொடர்ந்து ஆங்கிலேயருக்கு சேர வேண்டிய வரிப் பணத்தை ஒப்படைக்காமல், தானே வைத்துக் கொண்டு, தன்னை வளப்படுத்திக் கொண்டிருந்த மருதநாயகத்திற்கு , அது வரை ஆதரவு தந்த பிரிட்டிஷார், மதுரையைக் கைப்பற்றி, மருதநாயகத்தையும் ஒழித்துக் கட்ட திட்டம் தீட்டி, படைகளை அனுப்பி வைத்தனர்.

சென்னையில் இருந்த பிகாட் பிரபுவின் ஆலோசனைப்படி, திருச்சியில் இருந்து, ஸ்டிரிங்கர் லாரன்ஸ் மற்றும் மான்சன் தலைமையிலான பெரும்படை மதுரைக் கோட்டையை முற்றுகை இட்டது.

இதனை அறிந்த மருதநாயகம், ஆங்கிலேயரை எதிர்ப்பதற்காக, பிரெஞ்சியரிடம் ஆதரவு பெற்றார். மதுரைக் கோட்டையில், பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் கொடியை இறக்கி விட்டு, பிரெஞ்சுக் கொடியை பறக்க விட்டார். மருதநாயகத்தின் இந்த செயல், எரியும் தீயில், எண்ணெயை ஊற்றியது போலாகி விட்டது.

மதுரைக் கோட்டையைச் சுற்றி, முற்றுகை இ்ட்டது பிரிட்டிஷாரின் படை. மருதநாயகத்தின் படையும், ஆங்கிலேயரை வீரத்துடனே எதிர்த்துப் போரிட்டனர். பிரெஞ்சுப் படையும், தங்கள் பங்கிற்கு, மதுரையில் கால் வைத்த ஆங்கிலேயரின் தடம் கூட பதியாமல், தக்க பதிலடி கொடுத்தனர். மருதநாயகத்தின் கோட்டைக்குள்ளே, விசுவாசமான மதுரையைச் சேர்ந்த வீரர்கள் போர்க் கருவிகளுடன், தங்களின் இறுதி மூச்சு வரை, போராடிக் கொண்டிருந்தார்கள்.

பிரெஞ்சுத் தளபதியும், கான்சாகிப் என்ற மருதநாயகத்தின் ஆதி கால நண்பனான மார்சந்த், மருதநாயகத்திற்கு பக்க பலமாகத் தான் இருந்தான். பாபா சாகிப், மதுரைக் கோட்டையின் அரண்களைப் பலப்படுத்திக் கொண்டிருந்தான். ஆங்கிலேயரின் தீவிர விசுவாசியான, திவான் சீனிவாசராவ் மதுரையின் கோட்டைக்கு வெளியே தங்கி இருந்து, ஆங்கிலேயருக்குத் தேவையான உதவிகளை செய்து கொண்டிருந்தார்.

கோட்டைக்குள் நடப்பவைகளையும், தனது ஆட்களின் வாயிலாக, கண்காணித்துக் கொண்டிருந்தார். மருதநாயகத்தின் கோட்டை, ஆங்கிலேயரால் முற்றுகை இடப்பட்டதையும், கோட்டைக்குள் அவதிப்பட்டவர்கள் கண்ட அனுபவம், துயரத்தைப் பற்றி எல்லாம் தனியாக ஒரு புத்தகமே போடலாம்.

ஒரு கட்டத்தில், ஆங்கிலேயரின் முற்றுகை இறுகியது. கோட்டைக்குள் இருந்து யாரும் வெளியே செல்ல முடியவில்லை. வெளியே இருந்து உள்ளேயும் போக முடியாத நிலை. உள்ளே, உணவுப் பண்டங்கள் விரைவில் தீர்ந்து போய்க் கொண்டிருந்தன. தண்ணீர் கிடைக்காமல், கோட்டைக்குள் இருந்த சொற்பமான கிணற்றுத் தண்ணீரை அருந்த வேண்டிய சூழல். உணவு தீர்ந்தாலும், கோட்டைக்குள் இருந்த வீரர்கள் மற்றும் பணியாளர்கள், வெற்றிலையை மென்று வாயில் போட்டுக் கொண்டு, பசியைத் தள்ளி வைத்தனர்.

இந்த செய்தியை அறிந்த மருதநாயகம் கோபத்தின் உச்சிக்கே சென்றார். “ஏன் இந்த நிலை? நீ கோட்டையில் உள்ளவர்களின் உணவுத் தேவையைக் கூட பூர்த்தி செய்யாமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று மார்சந்தை அனைவரின் முன்னிலையில், அறைந்தார்.

இந்த அவமான சம்பவத்தினால், அது வரை உற்ற நண்பனாக இருந்த மார்சந்த், மருதநாயகத்தின் மறைமுக எதிரியாக மாறினான். நம்பிக்கையான ஒற்றர்களுக்கு, நிறைய பொன் கொடுத்து, தனது திட்டத்தை, ஆங்கிலேயரிடம் எடுத்துச் சொல்ல, அனுப்பி வைத்தான். அவன் திட்டம் சீனிவாசராவ் மூலமாக, ஆங்கிலேயருக்குச் சென்றது.

மருதநாயகத்தைப் பிடித்துக் கொடுத்தால், மதுரையின் கவர்னராக, தன்னை நியமிக்க வேண்டும், என்ற மார்சந்தின் கோரி்க்கையை, ஆங்கிலேயர் ஏற்றுக் கொண்டனர். தன்னைப் போல, துரோகிகளை, கோட்டைக்குள்ளே கூட்டு சேர்த்துக் கொண்டிருந்தான் மார்சந்த். இந்த விபரங்கள் ஏதும், மருதநாயகத்திற்குத் தெரிய வாய்ப்பில்லாமல் போனது, அவரது துரதிர்ஷ்டம் தான்.

தனது வஞ்சகத் திட்டத்திற்கு நாள் குறித்திருந்தான், மார்சந்த். 1764- அக்டோபர் 13-ஆம் தேதி, மாலை வேலையில், தனது அறையில், கையில் ஆயுதம் ஏதுமில்லாமல் மண்டியிட்டு, கண்களை மூடித் தொழுகையில் ஈடுபட்டிருந்தார் மருதநாயகம் என்ற கான்சாகிப். அப்போது, மார்சந்த் தன் திட்டப்படி, சில வீரர்களின் துணையோடு சத்தமில்லாமல், மருதநாயகத்தின் பின்னால் நின்று கொண்டான்.

மருதநாயகத்தின் அருகே, கதவுத் திரைச் சேலை காற்றில் லேசாக ஆடிக் கொண்டிருந்தது. சற்றும் தாமதம் செய்யாமல், அந்த திரைச் சேலையால், மருதநாயகத்தின் முகத்தைச் சுற்றிக் கட்டினான். உடன் வந்த வீரர்கள், கொண்டு வந்திருந்த கயிற்றால், மருதநாயகத்தின் கைகளையும், கால்களையும் கட்டினர்.

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை மருதநாயகத்தால் உணர மட்டுமே முடிந்தது. கட்டப்பட்ட மருதநாயகத்தை, அலேக்காகத் துாக்கிச் சென்று, ஒரு இருட்டறையில் போட்டான் மார்ச்சந்த். பாதுகாவலனாக இருக்க வேண்டிய பாபாசாகிப், தனது சவுக்கால், மருதநாயகத்தை ரத்தம் சொட்ட சொட்ட விளாசிக் கொண்டிருந்தான். கோட்டை பரபரப்பானது. மருதநாயகத்தின் மனைவி மாசா, அவளது அறையிலேயே சிறை வைக்கப்பட்டாள். செய்தியைக் கேள்விப்பட்டு துடித்துப் போன அவள், மார்சந்த் கால்களில் விழுந்து கதறி மன்றாடினாள். “இந்தக் கோட்டை, பதவி, இங்குள்ள செல்வங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள். என் கணவரை மட்டும் விட்டு விடு. நான் அவரைக் கூட்டிச் சென்று எங்காவது, கண் காணாத இடத்திற்குச் சென்று விடுகிறேன். அவரை விட்டு விடு” என்று, தன் கண்ணீர் தரையில், ஒடும் அளவிற்கு அழுது, அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

மார்சந்துக்கு தெரியாதா? மாசாவின் பேச்சைக் கேட்டு மருதநாயகத்தை விடுவித்தால், அடுத்த நிமிடமே தன் தலை, தரையில் உருளும் என்று? நேரத்தைக் கடத்தாமல், விரைவாக ஆங்கிலேயருக்கு, செய்தி அனுப்பினான். திருச்சியில் இருந்து,  ஒரே நாளில், மதுரைக்கு விரைந்து வந்தனர், ஆங்கிலேய அதிகாரிகள். அடுத்தடுத்து காரியங்கள் எல்லாம், விரைவாக நடைபெற்றது. அக்டோபர் 15-ஆம் தேதி, திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு, மதுரைக் கோட்டைக்கு வெளியே மேற்குப் பொட்டல் என்று அழைக்கப்பட்ட சம்மட்டிபுரத்தில் உள்ள புளிய மரத்தில், மருதநாயகத்தை துாக்கில் இட்டனர். துாக்கில் போடுவதற்கு முன்பு தான், அவரது, முகத்தை சுற்றி இருந்த துணியையே அவிழ்த்தார்கள். துாக்கு மேடையில் கண் திறந்து பார்த்த மருதநாயகத்திக் கண்கள், தன் காதல் மனைவி மாசைவைத் தேடியது. அழகுமுத்துக் கோன், பீரங்கிக்கு முன்பாக, சொன்ன கடைசி வாசகம், ஏனோ அந்த நேரத்தில், மருதநாயகத்தின் நினைவிற்கு வந்தது. அவ்வளவு தான். மீண்டும், மருதநாயகத்தின் கண்கள் கட்டப்பட்டன. ஒரு நிமிடத்தைக் கூட, மருதநாயகத்திற்கு ஒதுக்க விரும்பாத ஆங்கிலேயர், உடனடியாக, அவரது துாக்கு தண்டனையை நிறைவேற்றினர்.

ஆங்கிலேயரின் தங்க மெடலைச் சுமந்த கழுத்து, அந்த ஆங்கிலேயராலேயே துாக்கு கயிறுக்கு இடம் கொடுத்தது, காலத்தின் கொடுமை தான். மருதநாயகம் இறந்த பின்னும், ஆங்கிலேயரின் ஆத்திரம் அடங்கிய பாடில்லை. இறந்து போன அவரது உடலை வெட்டி, கழுத்துக் கீழே உள்ள உடல் பகுதியை, சம்மட்டிபுரத்தில் புதைத்தனர். கால்களை வெட்டி, பெரியகுளத்திலும், கைகளை மானாமதுரையிலும், தலையை திருச்சியிலும் புதைத்தனர். ஒரு ஆலமரமாக வளர வேண்டிய, விவேகமான வீரனின் வரலாறு, துரோகிகளின் செயலால், 39-வது வயதிலேயே முடிவடைந்தது.

மருதநாயகத்தினால் ஏற்றப்பட்ட பிரெஞ்சுக் கொடி இறக்கப்பட்டு, பிரிட்டிஷ் கொடி பறந்தது...மதுரைக் கோட்டையில்....


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

marudhanayagam pillai


கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக கட்சிக்கான பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக?
Seithipunal