வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால்! திமுக இறக்கிய முக்கிய ஆயுதம்! எகிறி அடிக்க ரெடியாகும் ஆதவ்!
Aadhaar challenges Arjuna in Villivakkam DMK main weapon! Aadhaar is ready to pounce
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வில்லிவாக்கம் தொகுதியில் அரசியல் போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக தரப்பில் வலுவான களப்பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வில்லிவாக்கம் தொகுதியில் கடந்த காலங்களில் தவெக சார்பில் சில சமூக சேவை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அவை பெரும்பாலும் விழாக்கால நிகழ்வுகள் மற்றும் உதவித் திட்டங்களாக மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் நேரடி அரசியல் ஆதரவு உருவாகியுள்ளதா என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
மாறாக, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த தொகுதியில் நீண்டகாலமாக அமைப்பு ரீதியாக வலுவாக செயல்பட்டு வருகின்றன. குடிநீர், சாலை, பொது வசதிகள் போன்ற பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், கட்சி நிர்வாகிகள் அடிமட்டத்தில் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளனர். குறிப்பாக திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கிளை அளவிலேயே வலுவான அமைப்பைக் கொண்டுள்ளன.
இந்த அமைப்பு பலம் தேர்தல் நேரத்தில் வாக்கு வங்கியாக மாறும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கணிப்பு. கடந்த தேர்தல் வரலாறும் இதையே உறுதிப்படுத்துகிறது. வில்லிவாக்கத்தில் திமுக பலமுறை வெற்றி பெற்றுள்ளதுடன், சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் வெற்றி கண்டுள்ளன.
மறுபுறம், ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய முக்கிய அம்சமாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி. பிரபாகரனின் ஆதரவாளர்கள் பார்க்கப்படுகின்றனர். ஆனால் அவர் இந்த முறை வேறு தொகுதிக்கு மாற்றப்பட்டிருப்பதால், அவரது ஆதரவாளர்களில் அதிருப்தி நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த வாக்குகள் முழுமையாக தவெக பக்கம் திரளுமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
மொத்தத்தில், வில்லிவாக்கம் தொகுதியில் திமுக கூட்டணியின் அமைப்பு வலிமையும், நிலையான களப்பணிகளும் முக்கிய பலமாக இருக்கும் நிலையில், தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா அந்த நிலையை உடைக்க முடியுமா என்பது தேர்தல் முடிவில் தான் தெளிவாகும்.
English Summary
Aadhaar challenges Arjuna in Villivakkam DMK main weapon! Aadhaar is ready to pounce