குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? மருத்துவர் ராமதாஸ் கேள்வி - Seithipunal
Seithipunal


இது குறித்து அவர் அறிக்கையில்   கூறியிருப்பதாவது:  தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல்,  தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். 

தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான்.  இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும்,  குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன. 

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில்  மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற  மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

When is the end of liquor?


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->