"இடைத்தேர்தல் இல்லை.! இலை தேர்தல்" அதிமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பு!! தயாரான தொண்டர்கள்!!  - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணைமுதலைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் தேர்தலை முன்னிட்டு கூட்டாக தங்களது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளனர்.

அதில், "எனக்குப் பின்னாலும் நூறு ஆண்டுகள் ஆனாலும், அ.தி.மு.க.தான் தமிழகத்தை ஆளும் என சட்டமன்றப் பேரவையில் நம் அம்மா ஒலித்திட்ட கடைசி சூளுரையை இதயத்தில் நிறுத்தி, நம் கருணைத் தாயின் அந்த நம்பிக்கையில் கடுகளவும் குறை நிகழ்ந்துவிடக்கூடாது எனும் குறிக்கோளோடு 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் கழகத்தின் கூட்டணிக்கே வெற்றி என்னும் லட்சியத்திற்காகவும்; இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகள் அனைத்தும் இலைத் தேர்தலாகும் என்னும் உறுதியோடும் அயராது உழைத்துவரும் கழகத்தின் அன்பு உடன்பிறப்புகளே, கனவுமிக்க இந்த இயக்கத்தை மடியிட்டு வளர்த்து வரும் அன்பிற்குரிய தாய்மார்களே, ஆற்றல் மிக்க செயல் மறவர்களே, கழகத்தின் பல்வேறு நிலைகளில் கடமையாற்றிவரும் கழக அடலேறுகளே!

தாயில்லாப் பிள்ளைக்கு நடக்கிற தலைப் பிரசவம் போல, முப்பது ஆண்டு காலத்திற்கும் மேலாக நம்மையும், நம் கழகத்தையும் வழிநடத்திய நம் அம்மா இல்லாத நிலையில், நாம் சந்திக்கும் முதல் பாராளுமன்ற பொதுத் தேர்தல் இது என்றாலும், நாம் அமைத்திருக்கும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மெகா கூட்டணி, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் வென்று காட்டும் என்பது நிதர்சனமான உண்மை.

இதனை உணர்ந்து கொண்ட எதிர்க்கட்சிகள், கருத்துக் கணிப்பு என்னும் பெயரில் தங்களது குடும்ப ஊடகங்களையும், கூலிக்கு மாறடிக்கும் சிலரையும் வைத்துக்கொண்டு, கழகக் கூட்டணிக்கு வாக்களிக்க திடமாக எண்ணி இருக்கும் வாக்காளர்களையும், பொதுமக்களையும் திசை திருப்பும் நோக்கோடும், எந்தச் சூழ்நிலையிலும் மனம் தளராமல் போராடி வரும் நம் கழகத் தொண்டர்களின் எழுச்சியைத் தடுத்து, அவர்களிடையே ஒரு மனச் சோர்வை உருவாக்கிடும் யுக்தியோடும் பெரும் சதியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அடித்துக் குவித்து வைத்திருக்கும் அலைக்கற்றை பணங்களை இறக்கி, விதவிதமான விளம்பரங்களால் வாய்மையை வென்றுவிடலாம் என கனவு காண்கிறார்கள்.

ஆனால், இதற்கெல்லாம் அஞ்சுகிற பழக்கமோ, கவன சிதைவுக்கு ஆளாகிற வழக்கமோ நம் கழகத் தொண்டர்களுக்கு ஒருபோதும் இல்லை. “வெல்லப் பாயும் குதிரை, கொல்லையும் நோக்காது, புல்லையும் பார்க்காது” என்பது போல, கொண்ட குறிக்கோளை வென்றெடுப்பதில் இம்மியளவும் விலகாமல் சரித்திரம் படைப்பது தான் நம் கழகத்தின் வரலாறு.

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால் நமது பாதை சரியாக இருக்கிறது என்பது தானே அர்த்தம். இன்று மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருக்கக்கூடிய நாமும், பாரதிய ஜனதா கட்சியும் செய்திருக்கும் மகத்தான சாதனைகளை, மக்கள் நலப் பணிகளை மக்களிடம் எடுத்துச் சொல்கிறோம்.

எஞ்சியிருக்கும் பணிகளை விரைவில் செய்து முடித்திடுவோம் என்கிற உளமார்ந்த உறுதியையும் அவர்களிடம் தருகிறோம். இதனால், அலை அலையாய் அணிவகுக்கும் மக்கள் இலைக்கும், பூவுக்கும், கனிக்குமே எங்கள் ஓட்டு என்று முரசடித்துச் சொல்கிறார்கள்.

ஆனால், ஐந்து முறை ஆட்சி செய்த திமுகவும் சரி, ஐம்பதாண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரசும் சரி, தாங்கள் செய்த சாதனைகள் என்று சொல்வதற்கு ஏதும் இல்லாதவர்களாய்.... கச்சத்தீவை தாரை வார்த்ததும், காவிரி துரோகமும், இலங்கையில் அவர்கள் கரம் கோர்த்து நடத்திய இன அழிப்புப் படுகொலைகளும், அவர்கள் கண் முன்னே வந்து நிற்பதால், வெட்கப்பட்டுக்கொண்டு எடுத்துச் சொல்ல சாதனை எதுவும் இல்லாத காரணத்தால், எங்கள் மீதும், கழகத்தின் மீதும், பாரதப் பிரதமர் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களைத் தொடுக்கிறார்கள்.

ஏற்கெனவே குற்றம் புரிந்தவர்களைக் கூட்டி வந்து, கொலைப் பழி சுமத்த சதித் திட்டம் தீட்டி மூக்கறுபட்டவர்கள், இனி என்ன செய்வது என்றே தெரியாத கையறு நிலையில் நின்றுகொண்டு கரன்சிகளை அள்ளிவிட்டு தி.மு.க.வின் அன்றைய திருமங்கலம் பாணியில் தேர்தல் ஜனநாயகத்தை விலைபேசத் திட்டமிடுகிறார்கள். இதற்கு சாட்சி தான்,

தி.மு.க. பொருளாளர் துரை முருகன் வீட்டில் மலை மலையாய், கத்தை கத்தையாய் கைப்பற்றப்பட்டிருக்கும் கோடான கோடி பணம்.

ஆனால், நெறிபிறழாத வழியில் எதற்கும் அஞ்சாது நாம் செய்த சாதனைகளை, நாம் மீட்டெடுத்த உரிமைகளின் பெருமைகளை மக்களிடம் வீடு வீடாய் எடுத்துச்சொல்லி ஓட்டு வேட்டையாடிவரும் எங்களின் உயிரினும் மேலான கழகக் கண்மணிகளுக்கும், கூட்டணி இயக்கங்களின் குலையா உறுதிகொண்ட தொண்டர்களுக்கும் எங்களது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

நாம் தர்மத்தின் வழியில் நிற்கிறோம். பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, அகில இந்திய சூ.சு. காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றோம்.

மேலும், தோழமைக் கட்சிகளான அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், அகில இந்திய புரட்சி பார்வர்ட் பிளாக், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, மனித உரிமை காக்கும் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், கொங்குநாடு முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய முஸ்லீம் லீக், கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும், இயக்கங்களும், சங்கங்களும், கழகக் கூட்டணிக்கு ஆதரவாக தங்களின் உளமார்ந்த ஈடுபாட்டுடன் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையை அனைவரும் பாராட்டுகின்றனர். இப்படி, மக்களை ஈர்க்கும் காந்தங்கள் எல்லாம் நம்முடன் இருப்பதோடு, அம்மா ஆகியோரது மனமார்ந்த ஆசியும், வாழ்த்தும், மக்களின் ஏகோபித்த ஆதரவும் நமக்குள்ளது. அதனால், நம் கூட்டணியின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட ஒன்று. எனவே, வாக்களிக்கும் வைபவத் திருநாளான ஏப்ரல் 18 வரை கழக கண்மணிகள் அனைவரும் மிகுந்த விழிப்போடு கண் துஞ்சாமல் களப்பணியாற்றிட வேண்டுகிறோம்.

நாம் வலைதளத்தில் மட்டுமே வாழும் கட்சி அல்ல. நாம் தரைதளத்தில் ஆழமாய் வேர்விட்டு ஆயிரம் ஆயிரம் கிளைகள் பரப்பி பூத்துக் குலுங்குகின்ற ஆலவிருட்ச இயக்கம்.

நாம் ஊடகங்களால் மட்டுமே தூக்கிப் பிடிக்கிற இயக்கம் அல்ல. ஊர் சனங்களின் உள்ளத்திலும், இல்லத்திலும் நிறை யாசனமிட்டு அமர்ந்திருக்கும் நிகரில்லா பேரியக்கம். இதனை கழகத்தின் தொண்டர்கள் ஒவ்வொருவரும் நெஞ்சத்தில் நிறுத்தி, விரோதமும், குரோதமும், துரோகமும் திரை மறைவு கூட்டுவைத்து கழகத்தை வீழ்த்தலாம் என காணும் கனவை சுக்குநூறாக்கி, நாம் “கோடிச் சிங்கத்தின் தைரியம் குடியிருக்கும் வீரத்திருமகளின் வளர்ப்பு” என்பதை உறுதிசெய்யும் தருணம் இது.

ஒருவன் சொர்க்கத்தின் வாசலில் ஆயிரம் ஆண்டு தவம் இருந்தானாம்; சொர்க்க வாசல் எப்போது திறக்கும் என்று. அப்போது ஒரு கணம் கண்மூடி திறந்திருக்கிறான்.

அந்த இடைவெளியில் சொர்க்கவாசல் கதவு திறந்து மூடிக்கொண்டதாம். அதுபோல, சில நேரங்களில் சில வருடங்களை விட சில விநாடிகள் முக்கியமாகி விடும். ஆம், கழகத் தொண்டர்களாகிய நமக்கு இப்போதைய ஒவ்வொரு விநாடியும் உன்னதமானவை என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

ஆளுக்கு ஒரு ஓட்டு, நம் அம்மாவுக்கு ஒரு ஓட்டு, நம் இல்லத்து ஓட்டோடு மக்கள் திலகத்திற்காக இன்னொரு ஓட்டு என்பதையும் நெஞ்சத்தில் நிறுத்தி கடமையாற்றிடவும், கழகத்தை வெல்வதற்கு இவ்வுலகில் இன்னொரு இயக்கம் இல்லை என்பதை சித்திரைத் திங்களில் முத்திரைப் பதித்து உணர்த்திடவும், எங்கள் அருமை கழகத் தொண்டர்களே, நீங்கள் அனைவரும் கண் துஞ்சாமல் கடமையாற்றிட அன்போடு வேண்டுகிறோம்.

மரம் தெரியவில்லை, கிளை தெரியவில்லை, கிளி தெரியவில்லை, கிளியின் கழுத்து மட்டுமே தெரிகிறது என்று சொல்லியடித்த மகாபாரதத்து அர்ச்சுனனின் வில்வித்தை போன்றது அ.தி.மு.க. தொண்டர்களின் தேர்தல் யுக்தி என்பதை உணர்த்திடும் வண்ணம் உழைத்திடுவீர்.

கழகத்தின் ஆட்சிக் கால பெருமையையும், நாம் காவேரி உரிமையை மீட்ட பெருமிதத்தையும், நீர்நிலைகளை தூர்வாரி நீராபானம் கொண்டு வந்ததையும், மின் மிகை மாநிலமாய் மீட்டெடுத்த பெருமையையும், நிலப்பறிப்பு, அபகரிப்பு இல்லாத நிம்மதியான சட்டம்-ஒழுங்கை நிகழ்த்தி காட்டிய சிறப்பையும், மீத்தேனுக்கு முற்றுப்புள்ளி வைத்த மேன்மையையும், அரை நூற்றாண்டு கனவாகிய அத்திக்கடவுஅவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பெருமையையும், மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டுவந்த நம் மகோன்னதத்தையும் மக்களிடம் பணிவோடு எடுத்துரைத்து வாகைத் தோரணம் அமைப்போம்.

நாற்பது பாராளுமன்றத் தொகுதிகளில் மகத்தான வெற்றியையும், இம்மியளவும் குறையாத வகையில் இடைத்தேர்தலில் மொத்த வெற்றியையும் ஒருசேர வென்றெடுத்து, வங்கக் கடலோரம் சந்தனப் பேழையில் சாய்ந்துறங்கும் நம் தங்கத் தாரகையாம் அம்மா, பூக்களுக்கும் புன்னகையை கற்றுத் தந்த பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரது பொற்பாதக்கமலங்களில் காணிக்கையாய் சமர்ப்பிப்போம்; அ.தி.மு.க.வின் கூட்டணிக்கே மகத்தான வெற்றி என்பதை இனிப் பாக்குவோம்." என அவர்கள் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aiadmk head releasing letter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->