பூமிக்கடியில் கண்டெடுக்கப்பட்ட 6500 ஆண்டுகள் பழமையான கட்டமைப்பு; சடங்கு மையமாக இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருத்து..! - Seithipunal
Seithipunal


உலகப் புகழ்பெற்ற ஸ்டோன்ஹெஞ்சை விட சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கட்டமைப்பு ஒன்றை பூமிக்கடியில் செக் குடியரசின் கிளெபி பகுதியில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கட்டமைப்பு சுமார் 6500 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. 

இந்த கட்டமைப்பு ஒரு சடங்கு மையமாக இருந்திருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இது சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கத்துடன் நேரடியாகத் தொடர்புடையதாக இருக்கிறது. இங்கு, பண்டைய கால மக்கள் சூரியன் மற்றும் சந்திரனின் செயல்பாடுகளைக் கண்காணித்து வந்திருக்கலாம் என்றும், நம்பப்படுகிறது.

காரணம் இந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் ஒரு பெரிய வட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டத்தின் விட்டம் சுமார் 750 அடி மற்றும் ஆழம் 08 அடி ஆகும். இந்த வரலாற்று மையத்தில் மொத்தம் 12 பாதைகள் உள்ளன. இந்தப் பாதைகள் அனைத்தும் வட்டத்தின் நடுவில் சந்திக்கின்றன.

அத்துடன், அந்த வளாகத்தின் சுவர்கள் மரக் கம்பங்களால் செய்யப்பட்டிருந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். அந்த வளாகத்தின் அகழியில் பல விலங்குகளின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

அந்த கட்டமைப்பின் நுழைவாயில் காளையின் மண்டை ஓடு மற்றும் கொம்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததாக நிபுணர்கள் நம்புகின்றனர். அதாவது, "ஆரம்பகால விவசாய சமூகங்களில் காளை வழிபாடு ஒரு முக்கியமான மதச் சின்னமாக இருந்தது," என்று சார்லஸ் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஜான் டுரெக் கூறினார். "அக்காலத்தில் ஐரோப்பாவின் பல பகுதிகளில் காளை வலிமை மற்றும் வளத்தின் சின்னமாக கருதப்பட்டது."

இந்த மர்மமான அமைப்பின் அளவும் திசையமைப்பும் கற்காலத்திற்கு மிகவும் தனித்துவமானவை. மேற்கு பொஹேமியா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வுப் பேராசிரியர் பீட்டர் கிறிஸ்டோஃப், இந்த ஆய்வுக் குழுவை வழிநடத்துகிறார். 

இது குறித்து கிறிஸ்டோஃப் கூறுகையில், 'இந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த கோள வடிவ அமைப்புகள் நமது பிராந்தியத்தில் முற்றிலும் அறியப்படாதவை'. என்று கூறியுள்ளார். அத்துடன், அதன் பாதைகளின் அமைப்பு தற்செயலானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் வடிவியல், வானியல் நிகழ்வுகளைக் கவனிக்கக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்குகிறது. இது அக்கால மக்களின் அறிவியல் புரிதலைக் காட்டுகிறது என்றும் கருதப்படுகிறது.

இந்த அமைப்பில் உள்ள 12 பாதைகளும் மிகவும் விசேஷமான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. அதாவது, வட்டத்திற்குள் இருந்த மக்கள் முக்கியமான வானியல் நிகழ்வுகளைத் தெளிவாகக் காண முடிந்தது. இதில், சந்திரனின் 18.6 ஆண்டு சுழற்சியின் போது, ​​அது அடிவானத்தில் அடையும் உச்சபட்ச நிலையும் அடங்கும். 

கோடைக்கால சங்கராந்தியின் போது சூரியன் உதிப்பதையும், குளிர்கால சங்கராந்தியின் போது சூரியன் மறைவதையும் மக்கள் காண முடிந்தது என்று கிறிஸ்டோஃப் மேலும் கூறியுள்ளார். அத்துடன், 'பண்டைய விவசாய சமூகங்களுக்கு, கோடைக்கால சூரிய உதயம் ஒரு தொடக்கத்தின் சின்னமாக இருந்தது.' அதே நேரத்தில், குளிர்கால சூரிய அஸ்தமனம் ஒரு முடிவைக் குறித்தது. இதே கொள்கையை ஸ்டோன்ஹெஞ்சிலும் காணலாம்.

பிற்காலத்தில், இந்தக் கிளெபி அமைப்பின் மத முக்கியத்துவம் தொலைந்து போனது அல்லது மறக்கப்பட்டது. பழைய அகழ்வாராய்ச்சிகளில், வெண்கலக் காலத்தைச் சேர்ந்த 18 மக்களின் கல்லறைகள் இங்கு கண்டெடுக்கப்பட்டன. இந்தக் காலகட்டம் கி.மு. 2300 முதல் 1600 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்ததாக நம்பப்படுகிறது. அந்தக் காலத்தில்கூட, இந்த இடம் ஒரு சடங்கின் பகுதியாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இரும்புக் காலத்தில், கிளெபி தளத்தின் மீது ஒரு பொதுக் குடியிருப்பு நிறுவப்பட்டது. இரும்புக் காலத்திற்குள், இந்த நினைவுச்சின்னம் அதன் அசல் முக்கியத்துவத்தை இழந்துவிட்டது என்று கிறிஸ்டோஃப் விளக்கியுள்ளார். அகழிகள் படிப்படியாக நிரப்பப்பட்டு, இங்கு ஒரு குடியிருப்பு கட்டப்பட்டது.

இந்தப் பழங்காலத் தளத்தில் ஆராய்ச்சி இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இப்போது இங்குள்ள மண்ணை விரிவாக ஆய்வு செய்ய உள்ளனர். ஹ்ராடெக் க்ராலோவ் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான யான் ஃபிஷரும் இந்தத் திட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இது குறித்து ஃபிஷர் கூறுகையில், "மக்கள் இறந்த பிறகு, கலைப்பொருட்கள் மற்றும் எச்சங்களுடன், இரசாயனத் தடயங்களும் மண்ணில் எஞ்சியுள்ளன" என்று தெரிவித்துள்ளார். இந்தத் தடயங்கள், அந்தக் காலகட்டத்தின் மர்மங்களைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்குப் பெரிதும் உதவுகின்றன. இந்தத் தனித்துவமான தளம் வெவ்வேறு காலகட்டங்களில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை இது வெளிப்படுத்தும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

6500 year old structure discovered underground


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->