ஆச்சர்யம்...! தென்பெண்ணை ஆற்றில் 5,000 ஆண்டுகள் பழமையான மனித நாகரிக தடயங்கள் கண்டெடுப்பு...! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் அருகே பிடாகம் குச்சிப்பாளையம் பகுதியில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் நடைபெற்ற கள ஆய்வில், மனித நாகரிகத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாமுவேல், வெற்றிவேல் ஆகியோர் மேற்கொண்ட மேற்பரப்பு ஆய்வின்போது, புதிய கற்காலத்தைச் சேர்ந்த கைக்கோடரி, கருப்பு–சிவப்பு பானை ஓடுகள் மற்றும் உடைந்த இரும்பு ஆயுதம் கண்டெடுக்கப்பட்டது.

அங்கு கண்டறியப்பட்ட கற்கருவி சுமார் 6.5 செ.மீ. நீளமுடைய, நன்கு தேய்த்து மெருகூட்டப்பட்ட கருங்கல் கைக்கோடரி ஆகும். இது கி.மு. 3000 முதல் 1000 ஆண்டுகளுக்கிடையிலான புதிய கற்காலத்தைச் சேர்ந்ததாகவும், விலங்கு வேட்டை மற்றும் இயற்கை உணவுகளை தோண்டி எடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த கருவி சுமார் 5,000 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மண் அரிப்பு ஏற்பட்ட நிலையில், முதுமக்கள் தாழியுடன் தொடர்புடையதாக கருதப்படும் 17 செ.மீ. நீளமுள்ள உடைந்த இரும்பு ஆயுதம் பூமியின் மேற்பரப்பில் வெளிப்பட்டுள்ளது.

பழங்காலத்தில் இறந்தவர்களின் உடலுடன் அவர்களுடைய பொருட்களை தாழியில் புதைக்கும் வழக்கம் இருந்ததாகவும், அதனாலேயே இந்த ஆயுதம் வெளிப்பட்டிருக்கலாம் என்றும் தொல்லியல் ஆய்வாளர் விளக்கம் அளித்தார்.

மேலும், தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதியில் புதிய கற்காலம் முதல் சோழர்காலம் வரை தொடர்ச்சியான தொல்லியல் தடயங்கள் கண்டறியப்பட்டு, அவை முறையாக ஆவணப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Traces 5000 year old human civilization discovered Thenpennai River


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->