ஜொலிக்கும் வேளாங்கண்ணி மாதா கோவில்.. லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடந்த கொடியேற்றம்!
The shining Velankanni Mother Church Thousands of devotees participated in the flag hoisting
வேளாங்கண்ணி மாதா கோவில் கொடியேற்றத்தையொட்டி இன்றும் நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலகப் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு திருவிழா இன்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைத்தார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘மரியே வாழ்க’ என அன்னையை வாழ்த்தி விண்ணதிர முழக்கமிட்டனர்.வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.
விழா நாட்களில் பேராலயத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கணி, தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி அடுத்த மாதம்(செப்டம்பர்) 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
8-ந் தேதி (திங்கட்கிழமை) புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
திருவிழாவிற்காக வேளாங்கண்ணி ஆலயம் மற்றும் சுற்றுப்பகுதி முழுவதும் ஜொலிக்கும் வகையில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொடியேற்றத்தையொட்டி இன்றும் நாளையும் வேளாங்கண்ணியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
English Summary
The shining Velankanni Mother Church Thousands of devotees participated in the flag hoisting