கொரவள்ளிமேடு திரு.K.R.சுப்ரமணிய படையாட்சி அவர்கள் பிறந்ததினம்!.
The birth date of Thiru K R Subramaniam from Koravalli Medu
புதுச்சேரி சுதந்திரப் போராட்ட தியாகி கொரவள்ளிமேடு திரு.K.R.சுப்ரமணிய படையாட்சி அவர்கள் பிறந்ததினம்!.
K.R.சுப்ரமணிய படையாட்சி 1925 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி பாகூர் கொம்யூன் கொரவள்ளிமேடு கிராமத்தில் பிறந்தவர்.பள்ளிப் பருவம் முதல் தேசத்தந்தை மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோர்களின் மீது மிகவும் பற்று கொண்டு காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.
புதுச்சேரி பிரதேசம் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட மிகவும் பாடுபட்டார். சுதந்திரப் போராட்டத்தின் போது பிரெஞ்சுக்காரர்கள் இவரை கைது செய்ய முற்பட்டபோது அருகில் உள்ள தமிழக எல்லைக்குட்பட்ட கடலூரில் மறைந்து இருந்து பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பிரெஞ்சிந்தியாவிடம் இருந்து புதுச்சேரி விடுதலையடைந்தபோது தன்னுடைய கொரவள்ளிமேடு கிராமத்தில் முக்கிய தலைவர்களுடனும்,காந்திய வழிநின்ற தொண்டர்களுடனும் 1954 நவம்பர் 1ஆம் தேதி முதல் விடுதலை தினத்தை கொடியேற்றி கொண்டாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி மாநிலம் சுதந்திரம் அடைந்த பின்னர் 1955 ஆம் ஆண்டு பாகூர் கொம்யூன் மேயராக பணிபுரிந்து பாகூர் கொம்யூன் முன்னேற்றம் அடைய பாடுபட்டார்.
1963 ஆம் ஆண்டு பாகூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 1964 முதல் 1968 வரை குருவி நத்தம் சட்டமன்ற உறுப்பினராக புதுச்சேரி மாநிலம் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்து புதுவை மாநில முன்னேற்றத்திற்கு பெரிதும் பாடுபட்டார். மீண்டும் குருவி நத்தம் தொகுதியில் 1969 முதல் 1974 வரை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
புதுச்சேரி மாநிலத்திற்கு மகாத்மா காந்தி அவர்களின் சீடரும் பூமிதான இயக்கத் தலைவருமான தலைவர் வினோபாஜி வந்தபோது அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து, நாட்டிற்காக தனது சொந்த நிலத்தினைத் தானமாக கொடுத்தார். அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு உண்மையாகவும், நேர்மையாகவும் கடமையாற்றி புதுச்சேரி மாநிலத்தின் 'இரும்பு மனிதர்' என பெயர் பெற்றவர்.
English Summary
The birth date of Thiru K R Subramaniam from Koravalli Medu