மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி 27% இட ஒதுக்கீடு அறிவிப்பு, தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி - அன்புமணி இராமதாஸ்..! - Seithipunal
Seithipunal


அகில இந்திய தொகுப்பு மருத்துவ இடங்களில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27% ஒதுக்கீடு, ஒட்டுமொத்த தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்கான பா.ம.க.வின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 50% இடங்களும் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன. ஆனால், அந்த இடங்களில் ஓரிடம் கூட பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படுவதில்லை. இந்த நிலையை மாற்றி அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. இதற்காக உச்சநீதிமன்றத்தில் நான் தான் முதன்முதலில் வழக்குத் தொடர்ந்தேன். பின்னர் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி உயர்நீதிமன்றத்திலும் நான்  வழக்கு தொடர்ந்தேன். தமிழகத்தின் பிற கட்சிகளும் இதே வழக்கை தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆணையிட்டது.

அதன் பின்னர் ஓராண்டு நிறைவடைந்து விட்ட நிலையில் இப்போது தமிழ்நாட்டில் மட்டுமின்றி, நாடு முழுவதும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. இந்த இட ஒதுக்கீடு நடப்பாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தேசிய அளவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு  ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5000 இடங்கள் கூடுதலாக கிடைக்கும். இது பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவுகளை நனவாக்கும். இந்த அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டியதாகும். இது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கோரி முதன்முதலில் வழக்குத் தொடர்ந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கும், தமிழகத்தின் பிற அரசியல் கட்சிகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் இப்போது பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மட்டும் முறையே 15%, 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதல்படி இந்த இட ஒதுக்கீட்டை பட்டியலினம், பழங்குடியினத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது 2007-08 ஆம் ஆண்டில்  நான் தான் வழங்கினேன். இப்போது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு, நான் தொடர்ந்த வழக்கின் காரணமாக நடைமுறைப்படுத்தப்படுவது இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு ஆகும். மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையின் போது தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவில் எந்தக் கல்லூரியில் வாய்ப்புக் கிடைத்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அகில இந்திய தொகுப்பு ரத்து செய்யப்பட்டு, அனைத்து இடங்களும் மாநில அரசுகளால் நிரப்பப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலை ஆகும். அந்த இலக்கை அடைவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாமக மேற்கொள்ளும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss Statement about OBC 27 Percentage Reservation Announced by Central Govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->