நிகிதா விவகாரம் .. நகை திருட்டு புகார் உண்மையா? 2-வது நாளாக சிபிஐ விசாரணை!
Nikitha controversy Is the jewelry theft complaint true? 2nd day of CBI investigation
நிகிதா விவகாரத்தில் இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் கோயில் ஊழியர்களிடம் 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது. 7 பேர் விசாரணை முடிந்து சென்ற நிலையில் 42 பேரை விசாரணைக்கு உட்படுத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் பணியாற்றிய காவலாளி அஜித்குமார் மீது நிகிதா என்ற பேராசிரியை நகை திருட்டு புகார் அளித்தார். அப்போது விசாரணைக்கு அழைத்துச் சென்ற அஜித்குமார் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது .இதையடுத்து இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் நிகிதா அளித்த நகை திருட்டு புகாரையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தததன்பேரில் நகை திருட்டு தொடர்பாக சி.பி.ஐ. மற்றொரு வழக்கு பதிவு செய்தது விசாரித்து வருகிறது .மேலும் சம்பவத்தன்று கோவிலுக்கு தரிசிக்க வந்தபோது நிகிதாவின் 10 பவுன் நகைகள் உண்மையிலேயே தொலைந்து போனதா, இந்த வழக்கில் அஜித்குமாரை போலீசார் கொடூரமாக தாக்க உத்தரவிட்ட உயர் அதிகாரிகள் யார்? என்பது போன்ற முழு பின்னணிகளை கண்டுபிடிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் விசாரணையை தீவிரமாக தொடங்கி இருக்கிறார்கள்.
இதற்காக மடப்புரம் கோவில் வணிக வளாகத்தில் உள்ள தற்காலிக அலுவலகத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று வந்தனர். இதுசம்பந்தமாக ஆட்டோ டிரைவர் அருண்குமார், கோவிலின் மற்றொரு காவலாளி வினோத்குமார், கோவில் ஊழியர்கள் ராஜா, சக்தீசுவரன் மற்றும் பழக்கடைக்காரர் ஈசுவரன் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கோயில் ஊழியர்களிடம் 3 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியது. 7 பேர் விசாரணை முடிந்து சென்ற நிலையில் 42 பேரை விசாரணைக்கு உட்படுத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.
English Summary
Nikitha controversy Is the jewelry theft complaint true? 2nd day of CBI investigation