பாதுகாப்பும்,சுற்றுச்சூழல் அக்கறையும் கூடிய தீபாவளியை கொண்டாடுங்கள்.. சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
Celebrate Diwali with safety and environmental care Health department advisory
பாதுகாப்பும்,சுற்றுச்சூழல் அக்கறையும் கூடிய தீபாவளி கொண்டாட்டம் உங்கள் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செவ்வேள் அவர்கள் புதுச்சேரியில் பாதுகாப்பான தீபாவளி குறித்து செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பாக தீபாவளி காலத்தில் மக்கள் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க சில முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய செய்தி குறிப்பு மக்களின் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ளது.அதில் சட்டபூர்வமான, பசுமை பட்டாசுகள், உரிய அனுமதி பெற்ற விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே வாங்குவது பாதுகாப்பானதாகும் என்றும், வீட்டின் அருகில், பள்ளிவாசல், மருத்துவமனை, பள்ளி போன்ற அமைதிப் பகுதிகளில் அல்லாமல் பாதுகாப்பான திறந்தவெளிகளில் பட்டாசு வெடிப்பது பாதுகாப்பானதாகும் என்றும், பட்டாசு வெடிக்கும் போது பருத்தி ஆடைகள் அணிதல், எளிதில் தீப்பிடிக்கும் பாலியஸ்டர் போன்ற ஆடைகளைத் தவிர்த்தல், தண்ணீர் மற்றும் மணல் போன்றவை முன்னெச்சரிக்கையாக அருகில் வைத்திருத்தல்
(அவசரநிலையில் தீ அணைக்க பயன்படும்), குழந்தைகள் பெரியவர்களின் மேற்பார்வையில், சிறு வயது குழந்தைகளுக்கு எளிய பட்டாசுகள் மட்டும் அனுமதித்தல், பட்டாசு செயல்படவில்லை என்றால் மீண்டும் ஏற்றாமல் நீரில் மூழ்கடித்து தூக்கி எறிதல், விளக்கு மெழுகுவர்த்தி போன்றவை வெடிகளின் அருகே இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல் போன்ற அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது வீட்டில் சிறுவர், முதியவர்கள் இருந்தால்: ஜன்னல், கதவுகளை மூடிவைத்து புகை புகாதபடி சிறப்பு கவனம் செலுத்துதல், தீபாவளி நாளில் காற்று மாசு அதிகரிப்பதால் முகக்கவசம் அணிதல், ஆஸ்துமா நோயாளிகள் பட்டாசு புகை விலகி இருக்கவும், இன்ஹேலரை அருகில் வைத்திருக்கவும் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
செல்லப்பிராணிகளை பட்டாசு சத்தத்திலிருந்து பாதுகாப்பாக வீட்டுக்குள் வைத்திருக்கவும், பசுமை பட்டாசுகளை பயன்படுத்துவதன் மூலம் இந்த தீபாவளியில் காற்று மாசுபாட்டை குறைக்கலாம் என்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
வெடித்த பட்டாசு, எரிந்த கம்பி மத்தாப்புகள் ஆகியவற்றின் மீது தண்ணீரை ஊற்றி நனைத்து தனியே சேகரிப்பதன் மூலம் கவனக்குறைவு காரணமாக தீக்காயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்றும் பூவானம் போன்ற தீ பொறிகள் கிளம்பும் பட்டாசுகளை வெடிக்கும் பொழுது குறிப்பாக குழந்தைகள் முகத்தினை சற்று தூரமாக வைத்துக் கொள்வதன் மூலம் கண்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும், வெடிகளை வெடிக்கும் பொழுது கைகளில் பிடித்து எரிவது போன்ற செயல்பாடுகளை தவிர்ப்பதன் மூலம் தீக்காயங்களை தவிர்க்கலாம் என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பும்,சுற்றுச்சூழல் அக்கறையும் கூடிய தீபாவளி கொண்டாட்டம் உங்கள் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் மகிழ்ச்சியை அளிக்கும் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செவ்வேள் அவர்கள் புதுச்சேரியில் பாதுகாப்பான தீபாவளி குறித்து செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.
English Summary
Celebrate Diwali with safety and environmental care Health department advisory