ஒரு கிராமம் அரச மரம்..ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் கோவில் காடுகள் திட்டம் அறிமுகம் !
A village sacred tree Introduction of the temple forest project under Esha Kaveri initiative
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம், பேரூர் மற்றும் தருமபுரம் ஆதீனங்கள் இணைந்து தமிழ்நாடு முழுவதும் கோவில் காடுகள் திட்டத்தை முன்னெடுக்க உள்ளன.
ஒரு நதி ஆண்டு முழுவதும் வற்றாத ஜீவ நதியாக பாய்ந்தோட வேண்டுமென்றால் அதன் வடிநிலப்பகுதிகள் பசுமை பரப்புடன் இருக்க வேண்டும். மழை பொழிவதற்கு மட்டுமல்ல மழை நீரை மண்ணில் சேமிக்கவும் மரங்கள் அவசியம். இதன் அடிப்படையிலும் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் சத்குரு காவேரி கூக்குரல் இயக்கத்தினை தொடங்கினார்.
இந்த இயக்கம் மூலம் விவசாயிகளிடையே மரம் சார்ந்த விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பிரதானமாக காவேரி வடிநிலப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மரங்களை நடவு செய்யப்படுகிறது. விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்தை மேற்கொள்வதால் “மண்வளம், ஆறுகளின் வளம், சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் பொருளாதாரம்” ஆகியன ஒரே நேரத்தில் மேம்படுகிறது
கடந்த 2024 - 2025 ஆம் நிதியாண்டில் மட்டும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள விவசாய நிலங்களில் மொத்தம் 1.36 கோடி மரக்கன்றுகளை இவ்வியக்கம் மூலம் நடவு செய்யப்பட்டு உள்ளது. இந்த இயக்கம் துவங்கப்பட்டது முதல் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மரங்கள் நடப்பட்டு வருகிறது.
இப்படி கோடிக்கணக்கான மரங்களை நட ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் கடலூர், திருவண்ணாமலை மற்றும் கோவை என 3 இடங்களில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் நர்சரிகளை உருவாக்கி பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதில் கடலூர் அருகே குள்ளஞ்சாவடியில் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் பிரம்மாண்ட நாற்றுப்பண்ணை அமைந்துள்ளது. ஆண்டுக்கு 85 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி திறன் கொண்ட இந்த நாற்றுப்பண்ணை உலகின் மிகப்பெரிய நாற்றுப்பண்ணைகளில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு 54 வகையான வெவ்வேறு உயர் மதிப்புள்ள மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து இருக்கும் பிரம்மாண்ட நாற்றுப் பண்ணையில் நிர்வாகம், திட்டமிடல், பராமரிப்பு, ஒருங்கிணைப்பு என அனைத்து பணிகளையும் 200 எண்ணிக்கையிலான பெண்களே மேற்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நம் பாரத கலாச்சாரத்தில் மரங்கள் மற்றும் காடுகளின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை அறிந்து மக்கள் கோவில் காடுகளை உருவாக்கி பொக்கிஷமாக போற்றி பாதுகாத்து வந்தனர். இந்த கோவில் காடுகளில் உள்ளூர் காவல் தெய்வங்களை மக்கள் வழிப்பட்டு வந்தனர். மேலும் கோயில் காடுகள் ஒரு வழிபாட்டுத்தலமாக மட்டுமில்லாமல், அரிய வகைத் தாவரங்கள், மருத்துவத் தாவரங்கள் மற்றும் பல்லுயிர்களின் புகலிடமாகவும் இருந்தது.
ஆனால் இன்று பல்வேறு காரணங்களால் கோவில் காடுகள் பெருமளவில் அழிந்து வருகின்றன. மீதமிருக்கும் கோயில் காடுகளும் அதன் பரப்பளவில் பெருமளவு குறைந்து வருகின்றன. இதனால் கோயில் காடுகளின் எதிர்காலம் நிச்சயமற்று இருக்கிறது. இந்நிலை நீடித்தால் நம் சந்ததியினருக்கு எதிர்காலமில்லை.
இந்நிலையில் ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம், பேரூர் மற்றும் தருமபுரம் ஆதீனங்கள் இணைந்து தமிழ்நாடு முழுவதும் கோவில் காடுகள் திட்டத்தை முன்னெடுக்க உள்ளன.
முன்னதாக பேரூர் ஆதீனத்தின் 24-ஆவது குரு மகாசன்னிதானம் தெய்வத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் வழிகாட்டுதலில் தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் அரச மரங்களை நடும் “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இத்திட்டம் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான திட்ட துவக்க விழா இன்று காலை தருமபுர ஆதீனம் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.
இவ்விழாவில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் ஆர். பாலாஜி பாபு மற்றும் காவேரி கூக்குரல் இயக்க திட்ட கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் ஆகியோர் கலந்து கொண்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கான திட்டப் பணிகளை துவக்கி வைத்தனர்.
இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் இத்திட்டம் குறித்து விளக்கி பேசுகையில், “சத்குரு கடந்த 2004-ஆம் ஆண்டு ‘பசுமை கரங்கள்’ என்ற இயக்கத்தினை துவங்கிய போது ஒரு கிராமத்தில் 5 அரச மரங்களை வைத்து வளர்த்தால் அது மக்களின் உடல் மற்றும் மனநலத்திற்கு நல்லது எனக் கூறினார்.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் அரச மரங்களை நடுவதை இலக்காக கொண்டு பேரூர் ஆதீனம் 24-ஆவது குரு மகாசன்னிதானம் அவர்களின் நூற்றாண்டு நிறவையொட்டி, தற்போதைய 25-ஆவது ஆதீனத்துடன் இணைந்து “ஒரு கிராமம் அரச மரம்” திட்டத்தினை செயல்படுத்துகிறோம்.” எனக் கூறினார்.
English Summary
A village sacred tree Introduction of the temple forest project under Esha Kaveri initiative