ஈரோட்டில் விஜய் பிரசாரக் கூட்டம்...! - மைதானம் சீரமைப்பு வேகம் பெற்றது
Vijay campaign rally Erode Ground renovations gain momentum
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளை பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே, த.வெ.க. சார்பில் நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.இந்த பொதுக்கூட்டம் விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

84 கேள்விகள்… 5 கட்டுப்பாடுகள்
பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்குவதற்கு முன் காவல்துறை சார்பில் 84 கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அவற்றுக்கான விளக்கங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை த.வெ.க. நிர்வாகம் சமர்ப்பித்தது. இருப்பினும், கூட்டம் நடைபெறும் இடம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், கோவில் நிர்வாகத்தின் தடையில்லா சான்று பெறப்படவில்லை என காவல்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோவில் செயல் அலுவலர் கடிதம் அனுப்பினார்.இதனைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகத்திடம் இருந்து தடையில்லா சான்று பெற்றுத்தருமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில் கோவில் நிர்வாகம் 5 முக்கிய கட்டுப்பாடுகளை விதித்தது.
வைப்பு நிதி, பாதுகாப்பு உறுதிமொழி
பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்காக ரூ.50 ஆயிரம் வைப்பு நிதியாகவும், ரூ.50 ஆயிரம் வாடகையாகவும் செலுத்த வேண்டும், கூட்டத்துக்கு வரும் மக்களுக்கு குடிநீர், உணவு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இவை அனைத்தையும் த.வெ.க. ஏற்றுக்கொண்டதை அடுத்து, இந்து சமய அறநிலையத்துறை தடையில்லா சான்று வழங்கியது.இதனைத் தொடர்ந்து, 18-ந் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட காவல்துறை அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியது. இதனால் நேற்று முதல் மைதானம் சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
QR கோடு அனுமதி, 2 மணி நேர கூட்டம்
முன்னதாக போலீசார் விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில், தொண்டர்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் மைதானத்துக்குள் அழைத்துவர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு QR கோடு அடிப்படையில் அனுமதி வழங்கப்பட உள்ளது.மேலும், பொதுக்கூட்டம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை, 2 மணி நேரத்திற்கு மட்டுமே நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் இடத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
பெண்களுக்கு தனி அமர்வு ஏற்பாடு
பெண்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் அமர்ந்து கட்சித் தலைவர் விஜயின் உரையை நேரில் காணும் வகையில், மைதானத்தில் பெண்களுக்கென தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி பொதுக்கூட்டத்தை நடத்த த.வெ.க. நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
English Summary
Vijay campaign rally Erode Ground renovations gain momentum