EPS அறிவிப்புகள் எல்லாம் ‘Paste Copy’ தான்...! - புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி தாக்கு!
All EPS announcements just copy paste Minister Raghupathi attacks Pudukkottai
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். அவர் தெரிவித்ததாவது,"எடப்பாடி பழனிசாமி தற்போது வெளியிட்டு வரும் அறிவிப்புகள் அனைத்தும் பேஸ்ட்–காப்பி அரசியலின் வெளிப்பாடுகள் மட்டுமே.
கடந்த தேர்தலில் திமுக, மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தபோது, அதை சிறுபிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுத்து படிக்க வைப்பதுடன் ஒப்பிட்டு விமர்சித்தவர் எடப்பாடி பழனிசாமி.

மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவது சாத்தியமில்லை என்றும் கூறினார்.ஆனால் இன்று, அதே எடப்பாடி பழனிசாமி ரூ.2000 வழங்க முடியும் என பேசுகிறார். இதுவே, திமுக அரசு வழங்கி வரும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை எந்த அளவிற்கு மகளிர் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது என்பதையும், அதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்துள்ள வரவேற்பையும் தெளிவாக காட்டுகிறது.
பொதுவாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்படுவது மரபு. ஆனால் எடப்பாடி பழனிசாமி, பந்தி போடாத இடத்தில் முதலில் வந்து அமர முயல்வதைப் போல, அவசர அவசரமாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
பந்தியே இன்னும் போடப்படவில்லை; அவர் காத்திருக்க வேண்டியதுதான். பந்தி போடப்பட்டவுடன் நாங்கள் வந்து அமர்ந்து, சாப்பிட்டு, ஆட்சி அமைத்து சென்று விடுவோம்.எடப்பாடியால் எந்த நிதி நிறுவனத்தையும் சரியாக நிர்வகிக்க முடியாது. அவரது நிர்வாகத் திறமை என்ன என்பது மக்கள் ஏற்கனவே பார்த்துவிட்டார்கள்.
திறமையாக திட்டங்களை செயல்படுத்தும் ஆற்றல் அவருக்கு இல்லை.கூட்டணி விவகாரத்தைப் பொறுத்தவரை, ராகுல் காந்தி தான் முடிவுகளை அறிவிப்பார். அதனால் கூட்டணிக்குள் எந்த குழப்பமும் ஏற்படாது. யாராலும் எங்கள் கூட்டணியை உடைக்க முடியாது.
சிலர் எதிர்பார்ப்பது போல் கூட்டணி உடையும் சூழல் எதுவும் இல்லை. எங்கள் தலைவர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூட்டணிக் கட்சிகளை வெளியேற்றும் பழக்கம் கொண்டவர் அல்ல; அவர்களை அரவணைக்கும் அரசியல் கலாச்சாரம் கொண்டவர். அந்த அரவணைப்பை விட்டு யாராவது செல்ல நினைத்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.
காங்கிரஸ் கட்சி எங்களோடு இருக்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு தொடர்பாக எங்கள் தலைவர் ஏற்கனவே தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.வரவிருக்கும் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும் என டி.டி.வி. தினகரன் ஜாதகம் பார்த்து ஜோசியம் சொல்லி வருகிறார்.
டி.டி.வி. தினகரன் யார்? அவருக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது.வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், திமுக தனித்து பெரும்பான்மை பெற்று, நிச்சயம் தனித்து ஆட்சி அமைக்கும் என்றார் அமைச்சர் ரகுபதி.
English Summary
All EPS announcements just copy paste Minister Raghupathi attacks Pudukkottai