சாப்பிட்ட உடனே ஜிம் போகவே கூடாது.. எவ்வளவு நேரம் கழித்து ஜிம் செல்லலாம்! மருத்துவர் விளக்கம்! - Seithipunal
Seithipunal


உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், பலரும் தினசரி ஜிம் செல்ல தொடங்கியுள்ளனர். காலை முதல் வேலை காரணமாக பிஸியாக இருப்பவர்கள் பெரும்பாலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஜிம் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில், இரவு டின்னர் முடித்த உடன் ஜிம் செல்லலாமா? அதனால் உடல்நல பாதிப்பு ஏற்படுமா? என்ற சந்தேகம் பலருக்கும் எழுவது இயல்பானதே.

இதுகுறித்து தானேவைச் சேர்ந்த எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அகர்வால் விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், “உடலால் செரிமான செயலையும் கடுமையான உடற்பயிற்சியையும் ஒரே நேரத்தில் சரியாக கையாள முடியாது. குறிப்பாக இரவு உணவு கனமாக இருந்தால், செரிமானத்திற்காக ரத்த ஓட்டம் அதிகமாக வயிற்றுப் பகுதிக்குச் செல்லும். அந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தால், ரத்தம் தசைகளுக்குத் திரும்பிச் செல்லும். இதனால் செரிமானம் தாமதமாகி பல அசௌகரியங்கள் ஏற்படலாம்” என்றார்.

இரவு டின்னருக்குப் பிறகு உடனடியாக ஜிம் சென்றால், வயிற்றுப் புடைப்பு (bloating), வயிற்றுப் பிடிப்பு, குமட்டல், தலைச்சுற்றல், அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உடற்பயிற்சியை முழுமையாகவும், திறம்படவும் செய்ய முடியாமல் போகும். சில நேரங்களில் ஜிம்மில் இருந்தாலும் செரிமானக் கோளாறுகள் காரணமாக அவதிப்படும் நிலை ஏற்படலாம்.

மேலும், கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், பொரித்த உணவுகள், அதிக புரதம் கொண்ட ஹெவி டின்னர் ஆகியவை செரிமானமாக அதிக நேரம் எடுக்கும். இத்தகைய உணவுகளைச் சாப்பிட்ட உடனே உடற்பயிற்சி செய்தால் செரிமானச் செயல்முறை பாதிக்கப்பட்டு, உடலில் ஆற்றல் குறைந்து, பயிற்சி செய்வது கடினமாக மாறும் என டாக்டர் அகர்வால் எச்சரிக்கிறார்.

எனவே, டின்னர் மட்டுமல்ல, எந்த உணவிற்குப் பிறகும் குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் இடைவெளி விட்டு ஜிம் செல்வது சிறந்தது. இந்த நேர இடைவெளி உணவைச் செரிமானம் செய்யவும், ரத்த ஓட்டம் சமநிலைக்கு வரவும் உடலுக்கு உதவுகிறது. அதன் பிறகு ஜிம் சென்றால் உடற்பயிற்சியைச் சிறப்பாகச் செய்ய முடியும்.

அதேநேரம், உணவின் வகையைப் பொறுத்து காத்திருக்கும் நேரமும் மாறுபடும். பழங்கள், டோஸ்ட், ஓட்ஸ் போன்ற லேசான கார்போஹைட்ரேட் உணவுகள் வேகமாகச் செரிமானமாகும். இதுபோன்ற உணவுகளை எடுத்துக்கொண்டால், 60 முதல் 90 நிமிடங்களுக்குள் உடற்பயிற்சி செய்யலாம். ஜிம் செல்லும் முன் லேசான இரவு உணவை எடுத்துக் கொண்டு, கனமான உணவுகளை உடற்பயிற்சிக்குப் பிறகு சாப்பிடுவது நல்லது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், இரவு உணவுக்குப் பிறகு ஜிம் செல்வது தவறில்லை. ஆனால் ஹெவி டின்னர் சாப்பிட்ட உடனே உடற்பயிற்சி செய்வது செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, இரவு உணவுக்குப் பிறகு 2–3 மணி நேர இடைவெளி விட்டு ஜிம் செல்வதே பாதுகாப்பானதும் ஆரோக்கியமானதும் ஆகும்.

 இந்த செய்தி பொதுவான தகவல்களுக்காக மட்டுமே. இதனை மருத்துவ ஆலோசனையாக எடுத்துக்கொள்ளக் கூடாது. உடல்நலக் குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

You should never go to the gym right after eating How long after eating can you go to the gym Doctor explains


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->