திணறும் பள்ளி மாணவர்கள்.! நடக்க இருக்கும் பேராபத்து.!! தமிழக அரசை எச்சரிக்கும் அன்புமணி இராமதாஸ்.!!! - Seithipunal
Seithipunal


புதிய படத்திட்டதால் பள்ளி மாணவர்களுக்கு படிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சியளிக்க கோரி, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். 

மேலும், இதுசம்மந்தமாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
''மருத்துவம் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள  வசதியாக தயாரிக்கப்பட்டுள்ள பாடத்திட்டம் வலிமையாக அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் நிலையில், புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள பாடங்கள், குறிப்பாக அறிவியல் பாடங்கள் மிகவும் கடினமாக இருப்பதாக மாணவர்களிடையே சலசலப்புகள் எழுந்துள்ளன. இது மிகவும் எளிதாக சரி செய்யக்கூடிய சிக்கல் தான் என்றாலும், அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் பாடத்திட்டங்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன் 1,6,9 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் புதியப் பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக 11-ஆம் வகுப்புக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு புதியப் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவம் மற்றும்  தொழில்நுட்பக்கல்வி சார்ந்த கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்திற்கு இணையாக தயாரிக்கப்பட்டிருப்பதால் அவற்றை மாணவர்கள் புரிந்து கொள்வதில் பல தடைகள் உள்ளன. பெரும்பாலான ஆசிரியர்களால் முற்றிலும் புதிதாகத் தோன்றும் இப்பாடங்களை நடத்த முடியவில்லை. புதியப் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் போது இத்தகைய சிக்கல்கள்  எழுவது இயல்பு தான். லட்சிய இலக்கை அடைய கடினமான தடைகளை கடந்து தான் ஆக வேண்டும்.

ஆனால், மேல்நிலை வகுப்புகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்வது நோக்கமல்ல என்பதால், அவர்கள் கடினமான பாடங்களை படிக்கத் தயங்கி வேறு படிப்புகளுக்கு மாறிக் கொண்டிருக்கின்றனர்.  நூற்றுக்கணக்கான மாணவர்கள் கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் இருந்து விலகி,  வணிகவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்துள்ளனர். வேறு பலர் 11-ஆம் வகுப்பிலிருந்து விலகி  பலதொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். 11-ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பாடத்திட்ட பாடங்களை படித்து தேர்ச்சி பெற இயலாது என்ற அச்சம் தான் மாணவர்கள் வேறு படிப்புகளில் சேருவதற்கு காரணம் ஆகும்.  மாணவர்களின் இந்த அச்சம் நியாயமானது தான். ஆனால், இந்த அச்சத்தைப் போக்கி மாணவர்களிடையே நம்பிக்கையை விதைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்காதது தான் நிலைமையை மோசமாக்கியுள்ளது.

புதியப் பாடத்திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு முன்பாக, புதிய பாடங்களை மாணவர்களுக்கு புரியும் வகையில் நடத்துவதற்கு வசதியாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,   புதிய கல்வியாண்டு தொடங்கி 50 நாட்களுக்கு மேலாகியும் ஆசிரியர்களுக்கான பயிற்சி இன்னும் நிறைவடையவில்லை. தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு இதுவரை பயிற்சி அளிக்கப்படவில்லை என்பதால், அவர்களால் தெளிவாக பாடம் நடத்த முடியவில்லை. செப்டம்பர் முதல் வாரத்தில் 11-ஆம் வகுப்புக்கு காலாண்டுத் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு இன்னும் பயிற்சியளித்து முடிக்கப்படவில்லை என்பதிலிருந்தே இந்த விஷயத்தில் பள்ளிக்கல்வித்துறை  எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். பல இடங்களில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்குக் கூட பாடங்களில் ஐயங்கள் இருப்பதால் அவர்களுக்கு கூடுதல் பயிற்சி  தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு, அவற்றில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் அது அவர்களை உளவியல் ரீதியாக பாதிக்கக்க்கூடும்.

எனவே, புதியப் பாடத்தின் மீதான புரிதல் குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, அதற்கேற்றவாறு ஆசிரியர்களுக்கு விரிவான பயிற்சி அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, 11-ஆம் வகுப்பு பாடங்கள் குறித்த கூடுதல் விவரங்களை புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள க்யூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்து தான்  படிக்க முடியும். இதற்குத் தேவையான ஸ்மார்ட் செல்பேசிகள் ஏழை மாணவர்களிடம் இல்லை என்பதால், அவர்களால் பாடங்கள் குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, க்யூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்யும் வசதி மட்டும் கொண்ட ஸ்மார்ட் செல்பேசிகள் அல்லது வேறு கருவிகளை  ஏழை மாணவர்களுக்கு மட்டும் இலவசமாக வழங்கவும் தமிழக ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்.'' என அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anbumani ramadoss WARN TN TN GOVT


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->