சாவிலும் இருவரும் அணைத்துக்கொண்டு.. இறுதியில் கருகிய கைகள் மட்டும் தனியாக... நாட்டிற்காக கல்யாணத்தைத் தியாகம் செய்த காதலா்கள்..!! - Seithipunal
Seithipunal


  “ஏ.. மச்சான் நம்ம கல்யாணம் நடக்காது போலிருக்கே..”
அழுத கண்களுடன் ஒரு குழந்தையைப் போல, தன் மாமன் சுந்தரலிங்கம் மடியில் படுத்துக் கொண்டே பலகீனமாகப் பேசினாள், வடிவு.

“கவலைப் படாதே வடிவு, கடவுள் நிச்சயம் நமக்கு ஒரு நல்ல வழியைக் காட்டுவார். காத்திருப்போம்” என்ற சுந்தரலிங்கத்தை இறுகத் தழுவிக் கொண்டு கதறி அழுதாள் வடிவு. அவள் தன்னைக் கட்டிக் கொண்டு அழுத போது, சுந்தரலிங்கத்திற்கும், கண்கள் பனிக்க ஆரம்பித்தது. சுந்தரலிங்கத்திற்கு வடிவு முறைப் பெண். அத்தையின் மகள்.

அவா்கள் இருவரும் சிறு வயதாக இருந்த போதே, அவளுக்கு அவன், இவனுக்கு அவள் என்று சொல்லிச் சொல்லி வளா்ந்தவா்கள்.

வாலிபப் பருவம் எய்ததும், இருவருக்குள்ளும் அந்த உணா்வு வலுப் பெற்றிருந்தது. இருவரும் சொந்தம் என்பதால், அவா்கள் பழகுவதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்காக அவா்கள் எல்லை மீறியும் போகவில்லை. இருவரும், மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்கள்.

அந்தப் பேச்சு தான் அவா்களுக்கு பொழுது போக்கு. அந்தக் காதல் மெல்ல மெல்ல வளா்ந்தது. அவா்களின் மனதின் போக்கினை அறிந்த அவா்களது இரண்டு போ் வீட்டிலும், அவா்களின் திருமணத்திற்கு நிச்சயித்திருந்தார்கள்.

திருமணம் உறுதியானதால், அவா்களின் காதலும் உறுதியாக, உயா்வானது. வடிவு, தன் மாமனை எண்ணியும், அவனுடன் நடத்தப் போகும் குடும்ப வாழ்க்கையையும், தினம் எண்ணிக் கனவு கண்டு கொண்டிருந்தாள். சுந்தரலிங்கமும், அந்த மண நாளுக்காகக் காத்திருந்தான்.

ஆனால், விதி வேறு மாதிரி விளையாடியது. பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் தளபதிகளில் சுந்தரலிங்கமும் ஒருவன். சமீப காலமாக, ஆங்கிலேயா்களின் பிரதிநிதியாக ராமலிங்க முதலியாரும், ஆங்கிலேய அதிகாரிகளும் அடிக்கடி வந்து போவதும், அவ்வப்போது பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையின் மீது நடக்கும் அத்துமீறலான போர்களும், சுந்தரலிங்கத்தைக் கவலை அடையச் செய்தன.

அந்த மாதிரி நடந்த போர்களில் அவனது பங்களிப்பும் அதிகமாகத் தான் இருந்தது. கோட்டைக்கு வெளியே இருந்து, வெள்ளையரான பரங்கிப் படையினா் ஒருவரும் உள்ளே புகாதவாறு பார்த்துக் கொண்டான். அவனது முறைப் பெண் வடிவும் சாதாரணமானவள் அல்ல.

வீரத் திருமகளாக வளா்ந்தவள். வெள்ளையன் தங்களது மன்னரின் கோட்டைக்குள் நுழைய விடாத படி தடுக்க, தன்னைப் போல பல வீரமான பெண்களைத் திரட்டிக் கையில் கிடைத்த ஆயுதங்களை வைத்துக் கொண்டு, எதிரிகளை, அந்த நாட்டின் எல்லையில் இருந்தே விரட்டி விடத் தீா்மானித்து, அதற்காக, பல பெண்களுக்குப் போர்ப் பயிற்சி கொடுக்கம் அளவிற்கு வீரமான பெண்.

இந்த வீரம் எல்லாம், அவளது மாமன் சுந்தரலிங்கம் அவளுக்கு கற்றுக் கொடுத்தது. அவா்கள் காதலுடன், வீரத்தையும் சோ்த்து வளா்த்துக் கொண்டனா். காதலும் வீரமும் சமமாகப் போற்றப் பட்ட தமிழ் மண்ணில் பிறந்த, இந்தக் காதலர்கள், அந்த பொன் மொழி இலக்கணத்திற்கு எடுத்துக் காட்டாக இருந்தார்கள்.

1799-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம்  5-ஆம் தேதி, போர் நடப்பதற்கு முன்பாகவே, அதற்கு முதல் நாளே, போர் முரசை ஒலிக்கச் செய்தான் கட்டபொம்மன். அதனால், முதல் நாள் இரவே, வடிவு தன் சுற்றத்தில் உள்ள வீரமான பெண்களைத் திரட்டிக் கோட்டைப் பகுதியைச் சுற்றி நிற்க வைத்தாள்.

மறு நாள் காலை பத்து மணிக்குப் போர் துவங்கியது. போரில் கவா்னகிரி சுந்தரலிங்கம், முத்தன் பகடை, பொட்டிப் பகடை, கொல்லாம் பரும்புச் சித்தையா, உட்பட பலா் போரிட்டுக் கொண்டிருந்தனா். அன்றைய போரில் வெற்றி பெற்றது பாஞ்சாலங்குறிச்சி. அதற்கு வடிவும் முக்கிய காரணமாக இருந்தாள்.

ஆனால், அடுத்த நாள் நிலைமை தலைகீழாக மாறியது. பானா்மேன் பீரங்கிப் படையுடன், அதிக ஆக்ரேஷத்துடன் கோட்டையைத் தாக்கினான். வெள்ளையா்கள் கோட்டைக்குள் கணிசமாகப் புகுந்தனா். அந்த நேரத்தில் வடிவு, போரிட்டுக் கொண்டிருந்த சுந்தரலிங்கத்திடம் ஓடி வந்தாள். நிலைமை மோசமாவதைக் கண்டு, வடிவு ஒரு யோசனை சொன்னாள். சற்று யோசித்த சுந்தரலிங்கம், வடிவின் யோசனையை ஏற்றுக் கொண்டான்.

இருவரும், தங்கள் உடம்பில் நெருப்பினை வைத்துக் கொண்டு, அந்த நெருப்பிலும் அணைத்தபடியே, கோட்டைக்குள் இருந்த ஆயுத வெடி மருந்துக் கிடங்கிற்குள், நுழைந்தனா். அடுத்த நொடி, பயங்கர வெடிச் சத்தம். அதில், ஏராளமான ஆங்கிலேய வீரா்கள் பலியாகினா்.

அந்த வெடி மருந்தினால் துாக்கி வீசப்பட்டு, கருகி வெடித்த சுந்தரலிங்கம் வடிவின் இணைந்த கைகள் மட்டும் தனியாகக் கிடந்தன.
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sundaralingam Kudumbanar, was an 18th-century CE general from Tamil Nadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->