H-1B விசா மாற்றம்! அமெரிக்காவுக்கு திறமை கொண்டவர்களே அனுமதி...! - டிரம்பின் புதிய உத்தரவு!
H1B visa change Only talented people allowed enter America Trumps new order
அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் H-1B விசா விதிகளில், டிரம்ப் நிர்வாகம் பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. புதிய உத்தரவு படி, இனிமேல் H-1B விசாவைப் பெற விரும்பும் வெளிநாட்டு நிபுணர்கள் வருடாந்திரமாக $1,00,000 (சுமார் ரூ.88 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும், விசா செயல்முறையுடன் தொடர்புடைய பல புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
டிரம்ப் அரசின் இந்த முடிவு, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதைத் தவிர்த்து, உள்ளூர் அமெரிக்கர்களை அதிகமாக வேலைக்கு அமர்த்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.அமெரிக்காவின் H-1B விசா திட்டம், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான உயர் திறமையுடைய பொறியாளர்கள், தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள், விஞ்ஞானிகளை அமெரிக்க நிறுவனங்களில் பணியமர்த்தும் முக்கிய வாயிலாக இருந்தது.

இதுவரை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் H-1B விசாக்களில் 70%க்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.ஆனால், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வும் புதிய விதிகளும் இந்திய ஐடி துறையிலும், அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய நிபுணர்களிலும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், முந்தைய கருத்துக்களிலிருந்து மாறி, H-1B விசா திட்டத்துக்கான தனது ஆதரவை டிரம்ப் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்குக் கொடுத்த பேட்டியில் அவர் கூறியதாவது,“என் நிர்வாகம், அமெரிக்கர்களுக்கே வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கிறது.
இருப்பினும், சில உயர் தொழில்நுட்ப துறைகளுக்கு தேவையான உயர் திறமைகள் கொண்ட நிபுணர்கள் அமெரிக்காவில் போதுமான அளவில் இல்லை. எனவே உலகம் முழுவதிலிருந்தும் சிறந்த திறமைகளை அமெரிக்கா நோக்கி ஈர்ப்பது மிக அவசியம்,” என டிரம்ப் வலியுறுத்தினார்.அவரது இந்த புதிய கருத்து, அமெரிக்கா திறமையான குடியேற்ற நிபுணர்களுக்கு மீண்டும் கதவைத் திறக்குமா என்ற எதிர்பார்ப்பை உலக தொழில்நுட்ப வட்டாரங்களில் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
H1B visa change Only talented people allowed enter America Trumps new order