பா.ஜ.க இல்லாமல் அதிமுக–தவெக கூட்டணி வந்தால்? — புதிய சர்வே எடுக்கத் தயாராகும் திமுக! பரபரக்கும் அரசியல் களம்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் களத்தில் புதிய கூட்டணிகள் குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. அதிமுக–பா.ஜ.க–தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகியவை இணைந்தால் அது விஜய்க்கு சாதகமாக இருக்காது; மாறாக ஆளும் திமுகவிற்கே நன்மை பயக்கும் என ஒரு சர்வே சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து பா.ஜ.க இல்லாமல் அதிமுக–தவெக மட்டும் இணைந்தால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று திமுக தரப்பு புதிய சர்வே நடத்தத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக–விஜய் கூட்டணி குறித்து சமீபத்தில் அரசியல் ரீதியாக சில சைகைகள் தென்பட்டன. குமாரபாளையம் தேர்தல் பிரசாரத்தில் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம்” என்று கூறியபோது, கூட்டத்தில் தவெக கொடிகள் பறந்தன. இதற்கு பதிலாக அவர், “கொடி பறக்குது... கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது” என்று கூறியதோடு, “இந்த ஆரவாரம் ஸ்டாலின் அவர்களின் செவியைத் துளைக்கும்” எனவும் குறிப்பிட்டார். இதனால், அதிமுக–தவெக கூட்டணி உருவாகும் வாய்ப்பு குறித்து அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

மேலும், எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன் தொலைபேசியில் பேசியுள்ளார் என்றும், இருவருக்கும் இடையே அரசியல் தொடர்பான முக்கிய விவாதங்கள் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இதேநேரத்தில், திமுக தரப்பு நடத்திய ரகசிய சர்வே ஒன்று “தி பிரிண்ட்” ஊடகம் மூலம் வெளிவந்தது. அந்த சர்வேப்படி, விஜயின் கட்சி தனித்து போட்டியிட்டால் சுமார் 23 சதவீத வாக்குகள் பெறும் என கூறப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் அவரின் அரசியல் வளர்ச்சியை பெரிதாக பாதிக்கவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2.91 லட்சம் வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் படி —திமுகக்கு 45 முதல் 50 சதவீத வாக்குகள்,என்.டி.ஏ கூட்டணிக்கு (அதிமுக–பா.ஜ.க–தவெக) 35 சதவீத வாக்குகள்,நாம் தமிழர் கட்சிக்கு 12 சதவீதம்,மற்ற கட்சிகளுக்கு 3 சதவீதம் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதிமுக–பா.ஜ.க–தவெக இணைந்தாலும், அதிமுகவின் உட்கட்சி பூசல்கள் மற்றும் பா.ஜ.க சித்தாந்தத்தை எதிர்க்கும் மக்கள் மனநிலை காரணமாக கூட்டணிக்கு எதிரொலி குறையும் என்றும் அந்த சர்வே எச்சரித்துள்ளது.

இதில் குறிப்பிடத்தக்கது — பா.ஜ.க இல்லாமல் அதிமுக–தவெக மட்டும் கூட்டணி அமைந்தால் என்ன நடக்கும் என்பதற்கான தரவுகள் அந்த சர்வேயில் இல்லை. இதனால், திமுக தரப்பு இப்போது புதிய கருத்துக் கணிப்பை நடத்தத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக–தவெக மட்டும் இணைந்து களமிறங்கினால் வாக்காளர் ஆதரவு எவ்வாறு மாறும், விஜயின் தனிப்பட்ட பிரபலத்தால் வாக்கு வங்கி எவ்வளவு மாற்றமடையும், திமுக எவ்வளவு பாதிக்கப்படும் என்பன குறித்து விரிவான புதிய ரகசிய ஆய்வு நடத்தப்படுகிறது.

அந்த ஆய்வின் முடிவுகள் வெளிவந்தவுடன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் கூட்டணி கணக்குகள் மாற்றமடையலாம் என்று அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What if AIADMK Tvk alliance comes without BJP DMK prepares to take new survey


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->