வாக்குத் திருட்டு விவகாரம்..வெளிப்படையான விசாரணை தேவை..காங்கிரஸ் வலியுறுத்தல்!
Vote theft controversy A transparent investigation is needed Congress insists
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் மீது வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;”இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களே. அந்த உரிமை பறிக்கப்படுவதும், வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நிகழ்வதும் இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகும் என்று கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசம், பிகார்,உள்ளிட்ட பல மாநிலங்களில் வாக்காளர்களுக்கே தெரியாமல் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மராட்டியத்தில் ஒரு தொகுதியில் மட்டும் 9,850 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறது.
இவ்வாறான முறைகேடுகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்தாலும், தேர்தல் ஆணையம் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகிறது. இது தேர்தல் ஆணையத்திற்கு மிகப்பெரிய அவமானம்.
இந்திய தேர்தல் ஆணையம் தனது கடமைகளை புறக்கணிப்பதால், மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுகிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்.
வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் மற்றும் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடியாக, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். வாக்குரிமையை பறிக்க முயன்றவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியம் காட்டிய தேர்தல் ஆணைய அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யவேண்டும் .மக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சி அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. ஜனநாயகத்தை காப்பதற்கான எங்கள் போராட்டம் தீவிரமாக தொடரும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Vote theft controversy A transparent investigation is needed Congress insists