வரலாறை திரும்பி பார்க்கலாம்.. இராஜபாளையம் சட்டப்பேரவை தொகுதி..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி குறித்த வரலாறுகளை இன்று காணலாம்.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலில் களம்காண தீவிர முனைப்புடன் தயாராகி வருகிறது. வேட்பாளர்கள் தேர்வு, வாக்கு சேகரிப்பு என தமிழக அரசியல்களம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இன்று, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி குறித்த வரலாறுகளை இன்று காணலாம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் அம்மாவட்டத்தின் பிரதான நகர்களில் ஒன்றாக இருக்கிறது. மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இராஜபாளையம், அங்குள்ள சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் கிராமங்களின் மக்களுக்கு பல்வேறு வகையான வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. 

இதுமட்டுமல்லாது, தன்னாட்சி பெற்ற தொழிற்பட்டயக்கல்வி கல்லூரி, மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி என கிராமப்புற மக்களின் குறைந்தபட்ச படிப்பை உறுதி செய்யும் கல்வி நிறுவனங்களும் இங்கு உள்ளது. புகழ்பெற்ற சஞ்சீவி மலையும் இங்கு அமைந்துள்ளது.

இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் இராஜபாளையம் தாலுக்கா, வடக்கு வெங்காநல்லூர், சம்மந்தபுரம், மேலப்பாட்டம்கரிசல்குளம், கொத்தன்குளம், அரசியார்பட்டி, செட்டிகுளம், அயன் கொல்லன்கொண்டான், திருச்சானூர், புதுப்பாளையம், ஜமின் கொல்லன்கொண்டான், சுந்தரராஜபுரம், சோலைச்சேரி, தெற்கு தேவதானம், இளந்திரைகொண்டான், சேத்தூர் (ஆர்.எப்) துரைசாமிபுரம், வடக்கு தேவதானம், தெற்கு வெங்காநல்லூர், கோவிலூர், நல்லமங்கலம், புத்தூர், சொக்கநாதபுத்தூர் மற்றும் மேலூர்துரைசாமிபுரம் கிராமங்கள், உள்ளது. இதில், இராஜபாளையம் நகராட்சி, செய்தூர் பேரூராட்சி, தளவாய்புரம் சென்சஸ் டவுன் மற்றும் செட்டியார்பட்டி பேரூராட்சி ஆகிய பகுதிகளும் அடங்கும்.

இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியை பொறுத்த வரையில் கடந்த 2016 சட்டப்பேரவை தொகுதியின் கணக்கெடுப்பின் படி 1,10,138 ஆண் வாக்காளர்கள், 1,13,853 பெண் வாக்காளர்கள் மற்றும் 20 மூன்றாம் பாலினத்தவர்கள் வசித்து வருகின்றனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிகம். இராசபாளையம் சட்டமன்ற தொகுதி நாடாளுமன்ற தேர்தலின் போது, கடந்த 2009 ஆம் வருடம் சிவகாசி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு, தென்காசி (தனி) நாடாளுமன்ற தொகுதியில் இணைக்கப்பட்டது. 

இராசபாளையம் சட்டமன்ற பேரவை தேர்தல் கடந்த 1962 ஆம் வருடம் முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 1962 ஆம் வருடத்தில் ரா. கிருஷ்ணசாமி நாயுடு    இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு 51.73 விழுக்காடு வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைந்தார். மொத்தமாக இராசபாளையம் சட்டமன்ற தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் 2 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 முறையும், சுயேச்சை 2 முறையும், அதிமுக 5 முறையும், திமுக 3 முறையும் வெற்றியை அடைந்துள்ளது. 

இராஜபாளையம் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிமுகவே அதிக முறை வெற்றிவாகை சூடியிருந்தது. இந்த தொகுதியில் உள்ள மக்களின் பிரதான கோரிக்கையாக இருந்த இராஜபாளையம் - சத்திரப்பட்டி இரயில்வே பாலம் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டம் பல இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டமும், குடிநீர் இணைப்பு திட்டமும் அடுத்தடுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இராஜபாளையம் மக்களின் பிரதான தொழிலாளாக விசைத்தறி நெய்தல், நூற்பு ஆலைகள் இருக்கிறது. உலகளவில் பெருமை கொண்ட இராஜபாளையம் நாய்களான சிப்பிபாறை, கொம்பை, கன்னி போன்ற நாட்டு நாய்களும் இங்கு அதிகம்.

இராஜபாளையம் அரசியலை பொறுத்த வரையில் மக்களின் நீண்டகால கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் நிலையில், தற்போதைய தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக சார்பில் கோரப்பட்டுள்ளதாகவும், திமுக சார்பில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தொகுதியில் யார் களம்கண்டாலும், கடந்த தேர்தல் காலங்களில் உள்ளூரில் நடைபெற்ற சில செயல்பாடுகள் காரணமாக அதிமுக கடந்த 2016 ஆம் வருட தேர்தலில் தோல்வியை தழுவும் வகையில் சூழ்நிலை அமைந்தது. இந்த தேர்தலில் அதிமுக எப்படி இந்த தொகுதியை கைப்பற்றப்போகிறது? அல்லது கூட்டணி கட்சிக்கு வழங்கிவிட்டு தேர்தல் முடிவை காண போகிறதா? திமுக தானே மீண்டும் களம்காண்கிறதா? அல்லது அதிமுகவை போல கூட்டணிக்கட்சிக்கு ஒதுக்கீடு செய்யபோகிறதா? என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும். 

இது குறித்து உள்ளூர் இளம் வாக்காளர் ஸ்ரீராம்கண்ணா தெரிவிக்கையில், " இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியை பொறுத்த வரையில் நகராட்சி பகுதிகளிலும் சரி, பிற பஞ்சாயத்துகள் கீழ் வரும் சட்டப்பேரவை கிராமங்களிலும் சரி பல இடங்களில் அடிப்படை வசதிகளில் இருந்து பல்வேறு வசதிகள் மக்களுக்கு ஏற்படுத்தி கொடுத்திருந்தாலும், சில இடங்களில் மக்களின் குறைந்தபட்ச பிரச்சனை அப்படியே இருக்கிறது. தேர்தல் காலங்களில் வாக்குகளை சேகரிக்க வரும் அரசியல் பிரமுகர்கள், தேர்தலில் தங்களுக்கு வாக்குகள் கிடைக்காத பகுதியை கண்டுகொள்ளாமல் சென்று விடுகின்றனர். கட்சி ரீதியாக அவர்களுக்கு வாக்குகளின் எண்ணிக்கையில் முரண்பாடு இருந்தாலும், சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் என்ற அடிப்படையில் கூட அவர்கள் எதையும் செய்வதில்லை. 

இன்று வரை இராஜபாளையம் பகுதியை கடந்த 25 வருடங்களுக்கு முன்னதாக செழிக்க வைத்திருந்த குறிப்பிடத்தக்க ஏரிகள் தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பின் பிடியில் இருக்கிறது. புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள கண்மாய் ஊரில் இருந்து வரும் சாக்கடை நீரின் பிரதான தேக்கமாகவே காலப்போக்கில் மாறிவிட்டது. அதனை சீரமைக்க இன்று வரை எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. சிறிய அளவிலான கண்மாய்கள் தூர்வாரப்பட்டு வந்தாலும், உள்ளூரில் இருக்கும் அரசியலால் அவை காலப்போக்கில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. தற்போது, பாலம் கட்டுமான பணிகள் மற்றும் பாதாள சாக்கடை பணிகள், குடிநீர் இணைப்பு பணிகள் அடுத்தடுத்து ஒரே மூச்சாக நடைபெற்று வருவதால், இராஜபாளையம் நகரே சீரமைக்கப்படாத பணிகள் நடைபெற்று வரும் சாலைகளால் புழுதி மண்டலமாக மாறியுள்ளது. 

பல இடங்களில் எதிர்பாராத விபத்துகளும் ஏற்படுகிறது. நல்ல வேலையாக உயிரிழப்பு இல்லை என்றாலும், விரைவில் அது ஏற்படுவதற்குள் ஆட்சியாளர்கள் அதனை சரி செய்ய வேண்டும். ஒருகாலங்களில் சாலையோரம் மரங்களாக இருந்த பல்வேறு பகுதிகள், சாலை ஆக்கிரமிப்பு அல்லது விரிவாக்கம் என்ற பெயரில் மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. வளர்ச்சிப்பணிகளுக்காக மரங்கள் அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் சாலையோரம் மரங்களை நட்டுவைத்து அதனை நகராட்சி மற்றும் பஞ்சாயத்து பணியாளர்கள் பராமரிக்க வேண்டும். இங்கு களம்கண்ட வேட்பாளர்களை பொறுத்த வரையில் பெரிய அளவிலான குறைகள் என்று கிடையாது. கடந்த ஆட்சியில் அதிமுக, இந்த ஆட்சியில் திமுக என்று இருந்தாலும், மக்களிடம் எந்த பிரச்சனையும் இல்லை. இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அய்யனார் கோவில், இராக்கட்சி அம்மன் கோவில் போன்ற இடங்களை மாவட்ட நிர்வாகம் அடையாளம் கண்டு சுற்றுலா தலமாக அதனை மேம்படுத்தினால், அப்பகுதிகளில் வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மூலமாக குறைந்தபட்ச வருவாய் கிடைக்கும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virudhunagar District Rajapalayam Assembly Consultancy Tamil Update


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->