ஆளுங்கட்சிக்கு இது அவசர அட்வைஸாம்.!! திமுக எம்பிக்களையும் விட்டுவைக்காத வீரமணி.!!   - Seithipunal
Seithipunal


மக்களைப் பாதிக்கும் பொதுப் பிரச்சினைகளில், எதிர்க்கட்சிகளை அழைத்து - அணைத்து ஒத்துழைப்பைப் பெற்று, ஆக்கப்பூர்வமாக ஆளுங்கட்சி நடந்துகொள்வது அவசியம். திராவிட கழக தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களவை திமுக உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவும் மற்ற திமுக எம்.பி.க்களும் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படவேண்டும் என்றும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு நிறைவேற்றப்பட்ட விதிவிலக்குக் கோரும் இரண்டு மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படாமலேயே உள்துறை அமைச்சகத்தில் கிடப்பில் போடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியும், நீட் தேர்வுக் கொடுமையால் பலியான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவக் கண்மணிகளைப்பற்றியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பரிதாபம்பற்றியும் படம் பிடித்துக் காட்டியுள்ளனர்.

சிபிஎஸ்இ முறையில் தேர்வு

மாநிலத்தில் உள்ள ஒத்திசைவுப் பட்டியலில் தற்போது கல்வி இருக்கின்றது. மாநிலக் கல்வித் திட்டத்தில் படித்து 500 மதிப்பெண்ணுக்கு 490 மதிப்பெண் வாங்கியும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுக மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வு உதவவில்லை; காரணம், கேள்விகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி கேட்கப்பட்டால், எப்படி பதில் அளிக்க அவர்களால் முடியும்? கார்ப்பரேட் கம்பெனிகள் பல லட்சங்கள்கூட அல்ல; கோடிக்கணக்கில் பணம் பண்ணும் பண்ணையமாக, தனியார் நீட் தேர்வு மய்யங்கள் வணிக மயமான கல்விக் கொள்ளையகங்களாக மாறிய நிலை உள்ளது.

அதுபோல, புதிய தேசியக் கல்விக் கொள்கை என்பது அப்படியே மாநிலத்திலிருக்கும் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள கல்வியை, கபளீகரம் செய்து, முழுக்க முழுக்க மத்திய அரசிடமே சேர்த்து, ஒற்றைக் கல்வி முறையாக மாற்றப்பட்டுவிடும் - இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, அங்கேயும் நீட் போன்ற ஆக்டோபஸ் நுழைவுத் தேர்வின் கொடுங்கரங்கள் நீளுகின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் என்ன செய்யவேண்டும்?

நாளை (28 ஆம் தேதி) கூடி, ஏறத்தாழ ஜூலை மாதம் வரை நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில்,
ஆளுங்கட்சி முன்வந்து ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு கிடப்பில் 2 ஆண்டுகளுக்கு மேல் உள்ள நீட்டிலிருந்து விலக்குக் கோரும் இரு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு தீர்மானமும், புதிய தேசியக் கல்விக் கொள்கை நாட்டின் பன்முக கலாச்சாரம், மாநில உரிமைகள் பறிப்பு, இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு போன்றவை 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள இருமொழிக் கொள்கைக்கு விரோதமாக மீண்டும் மும்மொழிக் கொள்கைத் திணிப்பும் செய்வதால், மத்திய அரசு அதனை அமல்படுத்துவதை நிறுத்தி, மறு ஆய்வு செய்ய முன்வரவேண்டும் என்பதையும் அத்தீர்மானத்திலோ அல்லது தனித் தீர்மானமாகவோ தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி - ஆளுங்கட்சி என்ற வேறுபாடின்றி ஒருமித்த கருத்தோடு, ஒருமித்த குரலோடு நிறைவேற்றி, மத்திய அரசுக்குப் பிரதமருக்கு அனுப்ப வேண்டும்.

இதில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி பேதம் பார்க்காமல், நீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் முந்தைய மசோதா நிறைவேற்றம் போலவே, ஒரு மனதாக நிறைவேற்றப்படுதல் அவசியம், அவசரம்!

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிடுக!

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், மனமுடைந்த மாணவிகள் தற்கொலை தொடரக் கூடாது. உள்ள உறுதிகொண்டு நம்பிக்கையோடு எதிர்காலத்தை அவர்கள் எதிர்கொண்டு முன்னேற முயற்சிக்கும் மனோபாவம் உள்ளவர்களாக அவர்களை ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஆக்க வேண்டும்.

பிள்ளைகளை இழந்து வாடும் குடும்பங்கள் எல்லாம் ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்கள் ஆனபடியால், முதல்வர் முந்தைய மாணவிகளின் குடும்பத்திற்கு உதவியதுபோல, உதவி செய்து, மனிதாபிமானத்தையும் காட்டவேண்டும் என்று முதல்வரையும், தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறோம்.

உயர்சாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது, சமுகநீதிக்கும், சட்டத்திற்கும் எதிரானதாகும். இதிலும் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கவேண்டும். அரசின் நிலைப்பாட்டை சட்டப்பேரவையிலேயே அறிவிக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகளை அழைத்து முடிவு செய்க!

இம்மாதிரி, மக்களைப் பாதிக்கும் பொதுப் பிரச்சினைகளில், எதிர்க்கட்சிகளை அழைத்து - அணைத்து ஒத்துழைப்பைப் பெற்று, ஆக்கப்பூர்வமாக ஆளுங்கட்சி நடந்துகொள்வது அவசியம். குடிநீர்ப் பஞ்சம் - பற்றாக்குறை - தலைவிரித்தாடும் இந்தக் காலகட்டத்தில், இந்த அணுகுமுறை மிகமிக தேவையானதாகும் என்று அரசியலுக்கு அப்பாற்பட்ட சமுதாயக் கண்ணோட்டமே மேலோங்கி நிற்க வேண்டும்", என அதில் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VEERAMANI ADVICE TO MP AND MLAS


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->