சபாநாயகர் தொகுதியில் கல்குவாரி வெடியால் 3 வயது குழந்தை உயிரிழந்த விவகாரம்.. சார் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


கல்குவாரி வெடி அழுத்தத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலியான விவகாரத்தில், விசாரணை நிறைவுபெறும் வரை கல்குவாரிகள் செயல்பட தற்காலிக தடை விதித்து சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இராதாபுரம் அருகேயிருக்கும் கிராமம் சீலாத்திக்குளம். இந்த கிராமத்தை சார்ந்தவர் முருகன். இவரது மனைவி சுகன்யா. முருகன் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய ஆகாஷ் என்ற மகன் இருக்கிறார். இராதாபுரம் சுற்றுவட்டார பகுதியில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று அங்குள்ள ஒரு கல்குவாரியில் பாறையை உடைக்க வெடிவைத்து பாறைகள் தகர்க்கப்பட்ட நிலையில், வெடியின் வீரியம் காரணமாக சீலாத்திகுளத்தில் உள்ள வீடுகள் அதிர்ந்துள்ளது. 

மேலும், 10 க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்கள் சேதமடைந்த நிலையில், முருகனின் வீட்டு சுவரும் சேதமாகியுள்ளது. வீட்டின் உள்ளே முருகனின் மகன் ஆகாஷ் உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், சுகன்யா அருகே தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். வெடி அழுத்தத்தால் அதிர்ந்த சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த முருகன் - சுகன்யா தம்பதியின் மகன் ஆகாஷ் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்து இருக்கிறான். இந்த விஷயம் முருகனுக்கு தெரிவிக்கப்பட்டு, ஊர் மக்கள் திரண்டு வந்து சிறுவனின் உடலை மீட்டுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த இராதாபுரம் காவல் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சிறுவனின் மரணம் சீலாத்திக்குளம் கிராம மக்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது. சிறுவனின் உடலை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மடியில் கிடத்தி கதறி அழுதது காண்போரை பெரும் சோகத்திற்கு தள்ளியது.

இதுதொடர்பாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கையில், " இராதாபுரம் சுற்றுவட்டார பகுதியில் 20 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது எனவும், குவாரிகளின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும், போராட்டம் நடத்தியும் பலனில்லை. இன்று ஒரு உயிர் பறிபோய்விட்டது " என ஆதங்கம் தெரிவித்தனர். தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் எம். அப்பாவு இராதாபுரம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், சீலாத்திகுளத்தில் இயங்கி வந்த கல் குவாரிகள் செயல்பட தடை விதிப்பதாக சார் ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி அறிவித்துள்ளார். கல் குவாரிகளின் விதிமீறல் தொடர்பாக ஆய்வு செய்த சார் ஆட்சியர், விசாரணை நடைபெற்று முடியும் வரை கல்குவாரிகள் செயல்பட கூடாது என தடை விதித்து இருக்கிறார். மேலும், வெடி விபத்து தொடர்பாக கல்குவாரி உரிமையாளர் செப்டம்பர் 30 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.  

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Radhapuram Seelathikulam Quarry Bomb Explodes Child Die Issue Deputy Collector Tempraveory Banned Quarry


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->