பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தை கையில் எடுங்கள் - தமிழக அரசுக்கு தங்கர் பச்சான் கோரிக்கை.!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசுக்கு நடிகர் மற்றும் இயக்குனர் தங்கர் பச்சான் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இது தொடர்பாக அவரது முகநூல் பக்கத்தில் வெளியாகியுள்ள பதிவில், " நிலைமை கை மீறி சென்றுவிட்ட நிலையில் ஊரடங்கு என்பது தற்போதைய சூழலில் கட்டாயமான ஒன்றுதான். ஊரடங்கினாலோ அதை தொடர்ந்து நீடிப்பதினாலோ கொரோனா இரண்டாம் அலையிலிருந்து மீண்டுவிட முடியாது. ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து தருவதினாலோ நோயாளிகளுக்கான படுக்கை எண்ணிக்கைகளை மேலும் மேலும் அதிகப்படுத்துவதினாலோ இழப்பிலிருந்து  முழுமையாக மீள முடியாது.நிலைமையின் தீவிரத்தை தொலைநோக்கு பார்வைகொண்டு உணராமல் கட்டமைப்புகளை உருவாக்காமல் போனதன் விளைவே இத்தகைய நிலைமைக்குக்காரணம்.  

சோதனை செய்துகொள்ளவே தயங்கும் இம்மக்கள் சோதனை செய்து கொண்டாலும் இரண்டு நாட்கள் சில ஊர்களில் ஐந்து நாட்கள் கழித்தே மருத்துவ அறிக்கையை தெரிவிக்கின்றனர். அதற்குள் தொற்று தீவிரமாகி நுரையீரலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது. நோய் தாக்கி மருத்துவம் மேற்கொள்ளாமல் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானது. அரசு மருத்துவ மனைகளிலோ இடமில்லை. தனியார் மருத்துவமனைகளிலும் இப்பொழுது இதே நிலைதான்.

தனியார் மருத்துவ பரிசோதனைக் கூடங்கள் நோய் கண்டறியவே இரண்டாயிரம் மூன்றாயிரம் என அவரவர்களின் விருப்பத்திற்கேற்றபடி வசூலிக்கின்றனர். எட்டாயிரம் பத்தாயிரம் என நுரையீரல் சோதனைக்காக பெறுகின்றனர். இவை தொடர்பான மற்ற இரத்த சோதனைகளுக்கும் சேர்த்து பல்லாயிரக்கணக்கான கோடிகள் மக்களிடமிருந்து மருத்துவ சோதனை எனும் பேரில் கொள்ளையடிக்கப்படுகின்றன. இதுபோக மருத்துவனையில் உள்நோயாளியாகும் நிலை ஏற்பட்டு விட்டால் அவர்கள் கேட்கின்ற பணத்தைதராமல் வெறும் உடலைக்கூட திருப்பித்தர மாட்டார்கள். பணம் படைத்தவர்களால் எப்படியும் வாழ்ந்துவிட முடியும். மாத ஊதியத்தை நம்பியும், வெறும் கை கால்களைக்கொண்டும் நாள் தோறும் உழைத்து வாழும் இம்மக்களின் துயரங்கள் சொல்லி மாளாது. 

என்னுடைய அனுபவத்தில் இதைக்கூற கடமைப்பட்டுள்ளேன். தொடக்கத்திலேயே நோயைக்கண்டறிந்து மருத்துவம் மேற்கொண்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை உருவாகாது. புதிய அரசு மிக விரைவாக நிலைமையை சமாளித்து நோய்ப்பரவலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமானால் இதைச் செய்வது அவசியம் என எண்ணுகின்றேன்.

நோய் முதன்முதலாக கண்டறியப்பட்ட சீன நாடு இன்று மகிழ்ச்சியாக உள்ளது.அவர்கள் கையாண்ட பல தலைமுறைகள் கையாண்ட பாரம்பரிய மருத்துவத்தை ஆங்கில மருத்துவத்துடன் இணைத்து கோரோனாவை முற்றிலுமாக ஒழித்தார்கள். இதைத்தான் நம்முடைய இந்திய அரசும் உடனடியாக இதைச்செய்திருக்க வேண்டும். இவ்வளவு பேரழிவை சந்தித்த பிறகும் மேலும் மேலும் தயங்குவதன் நோக்கம் தான் என்ன?

சித்த மருத்துவத்தில் தேர்ச்சியடைந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நம்மிடம் உள்ளதாகக்கூறுகின்றனர். இதைதவிர்த்து ஹோமியோபதி மருத்துவமும் கொரானாவை கட்டுப்படுத்துவதில் சிறந்த வெற்றி கண்டிருக்கின்றது. இத்துடன் ஆயுர்வேதம் மருத்துவத்தையும் இணைத்து இம்மூன்று மருத்துவர்களையும் கொண்ட உடனடி மருத்துவ மையங்களை தமிழகத்தில்  உருவாக்கலாம். இதற்கான பெருத்த செலவுகளை அரசு சந்திக்க நேராது. ஆங்காங்கே இருக்கின்ற பள்ளிக்கூடங்கள் போன்ற அரசு கட்டிடங்களை மையங்களாக உருவாக்கலாம்.

இதைச்செய்தாலே தொடக்க நிலையிலேயே கொரோனா தொற்று கட்டுக்குள் வந்து விடும். உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு மருத்துவ மனைகளைத்தேடி தஞ்சமடைய வேண்டி இருக்காது. எனக்குத்தெரிந்த சித்த மற்றும் ஹோமியோபதி மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்க வேண்டிய தேவை இல்லாமலேயே முழுமையாக குணப்படுத்தி விடுகின்றனர்.

தயவு செய்து பீதியில் உறைந்து கிடக்கும் மக்களுக்காக அரசு இக்கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து நோயிலிருந்தும் உயிர் இழப்பிலிருந்தும் காப்பாற்றுங்கள். இதைச் செய்வதால் தொற்று ஏற்பட்டால் பணத்துக்கு எங்கே போவது எனும் மக்கள் பணம் செலவழிக்கத் தேவையில்லை. ஊரடங்கையும் நீடிக்கத் தேவையில்லை. தொழிலும் உற்பத்தியும் முடங்கி நம் பொருளாதாரமும் இழக்கத்தேவை இருக்காது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thangar Bachan Facebook Post about TN Govt Request Help Lockdown


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->