நீலகிரி கூடலூர் மக்களின் நெடுங்கால பிரச்சனை.. முதல்வருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தும் கே.பாலகிருஷ்ணன்.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி மக்களின் நிலப்பிரச்சனையை தீர்க்கவும், நிலப்பட்டா வழங்கிடவும் சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.

நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி மக்களின் நிலப் பிரச்சனையை தீர்க்கவும், நிலப் பட்டா வழங்கிட வேண்டுமெனவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.

பொருள்:- நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதி மக்களின் நிலப்பிரச்னையை தீர்க்கவும், நிலப்பட்டா வழங்கிடவும் கோருதல் தொடர்பாக..

" நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் வருவாய் வட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் பிரிவு 17 (Section 17 of Gudalur Jenmam Land)  என வகைப்படுத்தப்பட்டுள்ள ஜென்மம் நிலங்களில் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களும் விவசாயிகளும் நிலப்பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அந்த நிலம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் பட்டா வழங்க முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் கடந்த 09.10.2010 அன்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் மேற்படி 80,088 ஏக்கர் நிலம் முழுவதும் தமிழக அரசுக்கு சொந்தாமன நிலமே என்றும், அரசு அந்நிலங்களை தனது விருப்பப்படி பயன்படுத்துக் கொள்ளலாம் எனவும் தெளிவுபடுத்தி விட்டது. 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, கடந்த 26.08.2011 அன்று அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த திருமதி ஜெ.ஜெயலலிதா அவர்கள் மொத்தமுள்ள 80,088 ஏக்கர் நிலத்தில், பெருமளவு மக்கள் வசிக்காத பகுதிகளில் 17,014.43 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை வனத்துறைக்கு ஒப்படைத்ததோடு, அவற்றை வனம் எனவும் வகைப்படுத்தினார்.  ஆனால் மக்கள் பெருமளவில் வசிக்கும் இதர பகுதி நிலப்பரப்பான 34,986.28 ஏக்கர் நிலங்கள் குறித்த எவ்வித முடிவையும் அப்போதைய அரசு எடுக்கவில்லை. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் சட்டமன்றத்தில், இந்நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு நிலப்பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்போது முன்வைத்த போது, மேற்படி நிலங்களை ஆய்வு செய்வதற்காக தமிழக அரசின் சார்பில் ஐந்து அதிகாரிகளை கொண்ட ஒரு உயர்மட்டக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. உயர்மட்ட அதிகாரிகளை கொண்ட அக்குழுவும் நீலகிரி மாவட்டத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு அரசுக்கும் அறிக்கையை அளித்துள்ளது. அந்த அறிக்கையின் விபரங்களை சட்டமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என நான் பலமுறை வலியுறுத்திய பிறகும் அப்போதைய அதிமுக அரசு அதன் மீதான எவ்வித தொடர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

மேற்படி நிலங்களில், 4,939 ஏக்கர் நிலங்கள் 10,052 குடும்பங்களின் அனுபவத்தில் உள்ளன. இவற்றில் 2545 குடும்பங்கள் தலா ஒரு ஏக்கர் என 1179.69 ஏக்கர் நிலங்களையும், 730 குடும்பங்கள் தலா இரண்டு ஏக்கர் என 1017.89 ஏக்கர் நிலங்களையும், 130 குடும்பங்கள் தலா மூன்று ஏக்கர் என 463.70 ஏக்கர் நிலங்களையும், 19 குடும்பங்கள் தலா நான்கு ஏக்கர் நிலங்கள் என 103.49 ஏக்கர் நிலங்களையும், 79 குடும்பங்கள் தலா ஐந்து ஏக்கர் மற்றும் அதற்கு அதிகமான நிலங்களையும் கைவசம் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.

மேற்குறிப்பிட்டுள்ள விபரங்களை தொகுத்து பார்க்கும் போது 3754 குடும்பங்களிடம் மொத்தம் 4866.96 ஏக்கர் நிலங்கள் பயன்பாட்டில் உள்ளதோடு இந்நிலங்களில் 10,608 வீடுகளையும் கட்டி மிக நீண்ட காலமாக வசித்தும் வருகின்றனர். இவர்களில் 3704 பேர் தலித் சமூகத்தையும், 707 பேர் பழங்குடி சமூகத்தையும், 1459 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும் சேர்ந்தவர்களாவர். மேலும் இந்நிலங்களில் வசிப்பவர்களில் 2126 பேர் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களாகவும், 1178 பேர் இதர மக்களாகவும் உள்ளனர். மேற்குறிப்பிட்டுள்ள நிலங்களை தவிரவும், சில நூறு குடும்பங்கள் விவசாயம் செய்து வரும் 29,942.43 ஏக்கர் நிலங்களும், அவர்களுக்கு முறையாக எவ்வித அறிவிப்பும் அளிக்கப்படாமல் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களாக பிரிவு 53 எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்நிலங்களில் மிக நீண்ட காலமாக வசிக்கும் மக்களுக்கும் நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விடுவோமோ எனும் அச்சமும் அதிகரித்துள்ளது.

எனவே, மேற்கண்ட நிலப்பிரச்னை தொடர்பான நிலைமைகளின் பின்னணியையும், மக்களின் நீண்ட கால கோரிக்கைகளையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புவதோடு மக்களின் பயன்பாட்டில் உள்ள 34,986.28 ஏக்கர் நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு நிலப்பட்டா வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகளையும், இப்பகுதிகளில் மின் இணைப்பு இல்லாதவர்களுக்கு விரைவில் மின்சார இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளையும்  தங்களின் தலைமையிலான அரசு அமைந்தவுடன் எடுக்கப்படும் என தாங்கள் அளித்துள்ள வாக்குறுதியையும் இத்தருணத்தில் நினைவூட்டவும் விரும்புகிறேன்.

மிக நீண்ட காலமாக கோரிக்கைகளோடு காத்திருக்கும் கூடலூர் பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பிரிவு 17 நிலங்களை வகை மாற்றம் செய்து நிலப்பட்டா  வழங்கிடவும், மேலும் இந்நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு மின்சார இணைப்பு வழங்கிடவும் தங்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் " என்று கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CPIM K Balakrishnan Letter to TN CM about Nilgiris Gudalur Land Document Issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->