கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கைது.. சி.பி.ஐ.எம் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கைது நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (எம்) பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கரூர் நகரில் லைட் ஹவுஸ் பகுதியில் கடந்த 60 ஆண்டுகளாக அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் சிலை இருந்து வருகிறது. அந்த சிலை இருக்கும் பீடம் தற்போது மிகவும் சிதிலமடைந்து உள்ளதால், அதை அகற்றிவிட்டு புதியதாக பீடம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் பீடம் அமைக்கும் பணிகள் மிகவும் தரமற்ற முறையில் நடந்து வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்ததோடு, தரமான முறையில் பணிகள் நடப்பதையும் நகராட்சியின் சார்பில் உறுதி செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை காந்தி சிலைக்கான பீடம் அமைக்கும் பணிகளை பார்வையிடுவதற்காக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் அங்கு சென்றுள்ளார். அப்போது அவர் நடைபெறும் பணிகள் மிகவும் தரமற்ற முறையில் இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு பணிகள் குறித்த விபரங்களை தெரிவிக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளார். பொதுவாக இத்தகைய தன்மையில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் நடைபெறும் பணிகளை பார்வையிடுவதும், ஆலோசனை சொல்வதும் வழக்கமான ஒரு நடைமுறையேயாகும். நடைபெறும் பணிகள் தரமானதாக இருப்பதை உறுதி செய்வதும், முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கவும் இத்தகைய நேரடி ஆய்வுகள் உதவும். ஆனால் கரூர் சம்பவத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பணியை அவமதிக்கும் வகையில் அதிகாரிகள் நடந்து கொண்டதோடு,  பணிகள் குறித்த கேள்விகளுக்கு  உரிய விளக்கத்தையும் அளிக்காமல், காவல்துறையினரை வைத்து அவரை அந்த பகுதியிலிருந்து பலவந்தமாக அப்புறப்படுத்தி கைது செய்திருப்பது மிக மோசமான நடவடிக்கையாகும். இத்தகைய நிலைமை நீடித்தால், எதிர்காலத்தில் மக்கள் பிரதிநிதிகளின் ஜனநாயக உரிமைகள் கூட பறிபோகும் ஆபத்தும் கூட உருவாகிவிடும்.

எனவே, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரிடம், பொதுவெளியில் மிகவும் கண்ணியக்குறைவான முறையில் நடந்து கொண்டுள்ள காவல்துறையினரின் இத்தகைய அடாவடித்தனமான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குவின் சார்பில் வன்மையாக கண்டிப்பதோடு, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலிறுத்துகிறோம்.

மேலும் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் மீது இத்தகைய தன்மையில் தொடர்ச்சியாக போலீஸ் அடக்குமுறையை ஏவிவிடும் தமிழக அரசின் மோசமான அணுகுமுறையிலும் மாற்றம் தேவை என தமிழக அரசை கேட்டுக் கொள்வதோடு, கைது செய்யப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்களையும், அவருடன் கைது செய்யப்பட்ட  அனைவரையும் உடனடியாக விடுதலை செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் " என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CPIM Condemn about Karur MP Jothimani Arrest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->