'ஸ்டாலின் தோற்றது ஒரே ஒரு நாள்தான்...ஆனா அந்த மக்கள்'...! - கொளத்தூர் தோல்வி குறித்து வைரமுத்து ஆவேசம்...!
Stalin lost for just one day but those people Vairamuthu rage over Kolathur defeat
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்த தோல்வி குறித்து மனவேதனையுடன் கருத்து பகிர்ந்தார்.

விழாவில் உரையாற்றிய அவர், "இந்த தருணத்தில் என் மனதில் நீண்ட நாட்களாக உறைந்திருக்கும் ஒரு ஆதங்கத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு அரசியல் இயக்கம் தேர்தலில் பின்னடைவை சந்திக்கலாம். ஆனால் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் போன்ற தலைவர் தோல்வியை எதிர்கொண்டிருக்கக் கூடாது என்பதே என் உள்ளத்தின் வலி" என்றார்.மேலும் அவர் பேசுகையில், "நிலவு தேய்வது இயற்கையின் நடைமுறை.
ஆனால் வானமே தேய்ந்து போகக்கூடாது. அதுபோலத்தான் இந்த தேர்தல் முடிவையும் நான் பார்க்கிறேன். கொளத்தூர் தொகுதியை வளர்ச்சியின் அடையாளமாக மாற்றியவர் ஸ்டாலின். தமிழ்நாட்டின் ஒரு சாதாரண தொகுதியாக அல்லாமல், உலகத் தரத்துக்கு இணையான வளர்ச்சி மண்டலமாக மாற்றிய தலைவருக்கு இந்த முடிவு கிடைத்திருக்கக் கூடாது" என்று குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து பேசிய அவர், "மே 4-ஆம் தேதி ஒரே ஒரு நாள்தான் ஸ்டாலின் தேர்தலில் தோல்வியை சந்தித்தார். ஆனால் அந்தத் தொகுதி மக்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வளர்ச்சி வாய்ப்பை இழந்து நிற்கிறார்கள் என்பதுதான் என்னை அதிகம் வருத்துகிறது. ஸ்டாலினுக்காக நான் கவலைப்படுவதை விட, அந்தத் தொகுதி மக்களுக்காகவே அதிகம் கவலைப்படுகிறேன்" என்றார்.
தி.மு.க.வின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அவர், "தோல்விக்கான காரணங்களை சுட்டிக்காட்டி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் காலம் இது அல்ல. தவறு சிலரிடம் மட்டுமல்ல, அனைவரிடமும் இருந்திருக்கலாம்.
அப்படியிருக்கும்போது யார் மீது நடவடிக்கை எடுக்க முடியும்? இது குற்றவாளிகளை தேடும் நேரமல்ல; நம்மை நாமே சீராய்வு செய்து மீண்டும் எழுச்சிக்குத் தயாராக வேண்டிய காலம்" என தெரிவித்தார்.வைரமுத்துவின் இந்த உரை, விழாவில் பங்கேற்ற தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்ததுடன், அரசியல் வட்டாரங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
English Summary
Stalin lost for just one day but those people Vairamuthu rage over Kolathur defeat