இலங்கை இனப்படுகொலை விவகாரம்... ஐ.நா ஆணையத்தில் இந்தியா தீர்மானம் - மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


இலங்கை இனப்படுகொலை: பன்னாட்டு பொறிமுறை கோரி ஐ.நா ஆணையத்தில் இந்தியா தீர்மானம் கொணர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இலங்கை இறுதிப் போரின் போது தமிழர்களுக்கு எதிராக போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், குற்றவாளிகளை சிங்கள அரசு தண்டிக்க வாய்ப்பே இல்லை என்பதால், அது குறித்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டும் - பன்னாட்டு பொறிமுறை அமைக்க வேண்டும் என்று ஈழத்தமிழர் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐ.நா. மனித உரிமை ஆணைய உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இக்கோரிக்கை பெரும் திருப்பமாகும்.

இலங்கைப் போர்க்குற்ற விசாரணை தொடர்பான விஷயத்தில் ஈழத்தமிழர் கட்சிகளின் தலைவர்கள் கடந்த பல ஆண்டுகளாகவே ஒருவருக்கொருவர் முரண்பாடான நிலைப்பாட்டை எடுத்து வந்தனர். தமிழ்த் தேசிய கூட்டணியின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட ஈழத்தமிழர் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் இப்போது தங்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளை மறந்து ஒரே குடையின் கீழ் வந்திருப்பதே இலங்கைப் போர்க்குற்ற விசாரணையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

இலங்கைப் போர்க்குற்றவாளிகளை தண்டிப்பதற்கான எந்த ஏற்பாடும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இருந்து தான் தொடங்கப்பட வேண்டும். ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 46&ஆம் கூட்டம் பிப்ரவரி 22&ஆம் நாள் தொடங்கவுள்ள நிலையில், ஆணைய உறுப்பினர்களின் ஆதரவைத்   திரட்டும் நோக்குடன் இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட 47 நாடுகளுக்கும் ஈழத்தமிழர் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இது மிகவும் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பாகும்.

இலங்கைப் போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவை குறித்து பன்னாட்டு குற்றவியல்  நீதிமன்றம் (International Criminal Court)அல்லது அதற்கு இணையான அமைப்புகளின் விசாரணைக்கு ஆணையிடுமாறு ஐ.நா. பொது அவைக்கும், ஐ.நா. பாதுகாப்பு அவைக்கும் பரிந்துரைக்க வேண்டும்; இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடும் குற்றங்களை விசாரித்து, ஆவணப்படுத்த, சிரியா, மியான்மர் நாடுகளுக்காக அமைக்கப்பட்டது போன்று, பன்னாட்டு பொறிமுறையை (International, Impartial and Independent Mechanism -IIIM) உருவாக்க வேண்டும் ஆகியவை தான் ஈழத்தமிழர் கட்சிகளின் தலைவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை ஆகும். இவை நியாயமானவையாகும். இவற்றின் மூலமாகத் தான் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தர முடியும்.

ஈழத்தமிழர் கட்சிகளின் தலைவர்கள் இப்போது ஐநா மனித உரிமை ஆணையத்திடம் முன்வைத்துள்ள  இதே கோரிக்கைகளைத் தான் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.  21.1.2018, 04.02.2019, 26.02.2019 ஆகிய நாட்களில் நானும், 21.02.2020 அன்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறோம். உலக மனித உரிமை நாளான 10.12.2018 அன்று இக்கோரிக்கையை வலியுறுத்தி டுவிட்டர் இயக்கம் நடத்தினோம். 31.12.2018 அன்று கோவையில் நடைபெற்ற பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டத்திலும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இப்போது இந்தக் கோரிக்கையை ஈழத்தமிழர் கட்சிகளும் வலியுறுத்தியிருப்பதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தரும் விஷயத்தில் பா.ம.க. மேற்கொண்ட நிலைப்பாடு மிகச்சரியானது என்பது உறுதியாகிறது.

இலங்கைப் போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் நடத்திய விசாரணையில் போர்க்குற்றங்கள் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தக் குற்றச்சாட்டுகள் மீது வெளிநாட்டு நீதிபதிகளும், இலங்கை நீதிபதிகளும் அடங்கிய கலப்பு விசாரணை நீதிமன்றத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை பேரவையில் 2015-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதன் பின்னர் 5 ஆண்டுகள் ஆகியும் அந்த விசாரணை தொடங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, 2015-ஆம் ஆண்டு தீர்மானத்திலிருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு மனித உரிமை ஆணையத்தில் தெரிவித்து விட்டது. அதாவது, போர்க்குற்ற விசாரணையை தொடர்ந்து நடத்த இலங்கை மறுத்து விட்டது. இத்தகைய சூழலில் ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கும், போர்க்குற்றங்களுக்கும் நீதி பெற்றுத் தருவதற்கு இந்த குற்றச்சாட்டுகளை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு அனுப்புவதும், பன்னாட்டு பொறிமுறையை அமைப்பதும் தான் சரியானத் தீர்வு ஆகும். எனவே, அடுத்தமாதம் தொடங்கவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தில் மேற்கண்ட இரு கோரிக்கைகளையும் வலியுறுத்தும்  தீர்மானத்தை நட்பு நாடுகளுடன் இணைந்து இந்தியா கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SriLanka Tamil Peoples war Murder Issue Dr Ramadoss Request to Central Govt 19 Dec 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->