மின்வாரியப் பணியிடங்களைத் தனியார்வசம் ஒப்படைக்கும் முடிவு - உடனடியாகத் திரும்பப்பெறுக – சீமான் வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தமிழக மின்வாரியத்தில் 23,000 கள உதவியாளர்கள் மற்றும் 8,500 கம்பியாளர்கள் உள்ளிட்ட 31,000 பணியிடங்களை நிரப்பத் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது மின்வாரியத்தை மெல்ல மெல்லத் தனியாருக்குத் தாரைவார்ப்பதற்கான சதிச்செயலேயாகும். தமிழ்நாடு மின்சார வாரியத்திலுள்ள உபகோட்டங்களில் மின் விநியோகம் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளத் தேவைப்படும் ஊழியர்களைத் தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்யப்படுவார்கள் எனத் தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது. ஏற்கனவே, பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்யவேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை வைத்துப் போராடி வரும் நிலையில், அக்கோரிக்கைக்குச் சிறிதும் செவிமடுக்காது, ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்யும் முறையையே மொத்தமாகத் தனியாரிடம் ஒப்படைக்கத் தமிழக அரசு முடிவு செய்திருப்பது வெந்தப்புண்ணில் வேலைபாய்ச்சும் கொடுஞ்செயலேயாகும்.

ஏற்கனவே, ஐ.டி.‌ஐ, டிப்ளமோ போன்ற தொழில்முறை படிப்புகளைப் படித்துவிட்டு இலட்சக்கணக்கான தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றித் தவித்து வரும் நிலையில், அரசுத்துறைகளிலுள்ள மிகச்சொற்ப அளவு வேலை வாய்ப்புகளையும் தனியார்வசம் ஒப்படைப்பது இளைஞர்களின் அரசு வேலை எனும் கனவைக் கானல் நீராக்கும் துரோகச்செயலாகும். அதுமட்டுமின்றி, மக்களின் இன்றியமையாத சேவைத்துறைகளில் ஒன்றான மின்துறையின் விநியோகம் மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைப்பது என்பது சேவை மனப்பான்மையிலிருந்தே மின்துறையை மொத்தமாக மாற்றி, முழுக்க முழுக்க இலாபத்தேவையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வைக்கும் பேராபத்தாகும். இதனால், மின்கட்டணமும் கட்டுப்பாடின்றி உயர்ந்து பொதுமக்களையும் கடுமையாகப் பாதிக்கும்.

தனியார் ஒப்பந்தங்களில் நிலவும் முறைகேடுகள் காரணமாகவே மின்சார வாரியம் ஒரு இலட்சம் கோடி அளவில் இழப்பில் இயங்குகிறது. தற்போது மின்வாரியப் பராமரிப்பு மற்றும் விநியோக ஒப்பந்தத்தையும் முழுவதுமாகத் தனியாரிடம் ஒப்படைப்பதென்பது முறைகேடுகள் இன்னும் அதிகரிக்கவே வழிவகுக்கும். இது மின்வாரியத்தையே மேலும் இழப்புக்குத் தள்ளி, முழுவதுமாகத் தனியாரிடம் விற்கும் சூழலை ஏற்படுத்தும். இதனால், மின்வாரிய ஊழியர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதுடன், அனுபவமில்லாத பணியாளர்களை நேரடியாகப் பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுத்தும்போது விபத்துக்கள் அதிகரிக்கவும் வழிவகுக்கும்.

மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்டத் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக ஏற்கனவே அரசிடம் கையேந்தி நிற்கும் நிலையில், ஒப்பந்த ஊழியர்களும் தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு முறையான ஊதியமோ, ஊக்கத்தொகையோ அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். புயல், மழை,வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட காலங்களிலும், தற்போதைய கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும், இரவுப்பகல் பாராமல் கண் துஞ்சாது, கடமை தவறாது அர்ப்பணிப்புணர்வோடு கடினமான பணிபுரிந்து மக்கள் சேவையாற்றிய நிரந்தர மற்றும் ஒப்பந்த மின் ஊழியர்களின் குறைகளைக் களைய முன்வராது, அவர்களது வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் மின்சாரத்துறையை முற்று முழுதாகத் தனியாருக்குத் தாரைவார்ப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

ஆகவே, தமிழக இளைஞர்களின் அரசு வேலைக்கனவை நிரந்தரமாக முடக்கும் மின்வாரியத்தின் முடிவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் எனவும், பத்தாண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மின் ஊழியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்யவேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman Angry about TN Govt Announcement TNEB Gang man Tempravorily Job Private 18 December 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->