தமிழக அரசு எடுத்த துணிச்சலான முடிவு! உருவான நிம்மதி! டாக்டர் ராமதாஸ் பாராட்டு!  - Seithipunal
Seithipunal


ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை என்ற தமிழக அரசின் அறிவிப்பு பாராட்டத்தக்கது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த அதிமுக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது என்று தமிழக சட்டம் மற்றும் கனிமவள அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவித்திருக்கிறார். காவிரி பாசன மாவட்டங்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் உருவெடுத்து வரும் நிலையில், தமிழக அரசின் இந்த துணிச்சலான நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கது ஆகும்.

தமிழக சட்டப்பேரவையில் இதுதொடர்பாக கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம்,‘‘தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த வேதாந்தா, ஓ.என்.ஜி.சி. ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனினும் தமிழக அரசின் அனுமதியை பெறாமல் இத்தகையத் திட்டங்களை செயல்படுத்த முடியாது. இத்திட்டத்திற்கு அனுமதி கேட்டு ஓ.என்.ஜி.சி நிறுவனம் தமிழக அரசிடம் விண்ணப்பித்துள்ளது. ஆனால், அதற்கு இதுவரை தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. இனியும் அனுமதி அளிக்காது’’ என்று உறுதிபட தெரிவித்தார். ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் குறித்த தமிழக அரசின் நிலைப்பாட்டை  அமைச்சர் தெளிவாக விளக்கியுள்ளார். இது உழவர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.

காவிரி பாசன மாவட்டங்கள் தான் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்தன. அவை தொடர்ந்து நெற்களஞ்சியமாக திகழ வேண்டும்; அதை எண்ணெய் மற்றும் எரிவாயுக் களஞ்சியமாக மாற்றிவிடக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இதற்காக பாட்டாளி மக்கள் கட்சி ஏராளமான போராட்டங்களை நடத்தியுள்ளது. காவிரி பாசன மாவட்டங்களை காப்பாற்ற அந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. மக்களவைத் தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்த போது பா.ம.க. முன்வைத்த 10 கோரிக்கைகளில் முதன்மையானது காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது தான். அந்த வகையில், காவிரி பாசன மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த அனுமதி அளிக்க மாட்டோம் என்று அரசு அறிவித்திருப்பதை சாதகமான முன்னேற்றமாக பா.ம.க. பார்க்கிறது.

காவிரி பாசன மாவட்டங்களை எண்ணெய் மற்றும் எரிவாயு மண்டலமாக மாற்றும் முயற்சிகளுக்கு  நுழைவாயில் அமைத்துக் கொடுத்தது திமுக அரசு தான். தஞ்சாவூர், திருச்சி, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 7049.70 சதுர கி.மீ பரப்பளவில் துரப்பண பணிகளை மேற்கொள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு 28.08.1989 அன்று அனுமதி அளித்தது திமுக அரசு தான். அதைத் தொடர்ந்து 2010&ஆம் ஆண்டில் காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் ஆய்வுக்கு அனுமதி அளித்ததும் அப்போதைய திமுக அரசு தான். மேற்கண்ட இரு நடவடிக்கைகளால் ஹைட்ரோ கார்பன் பூதம் இப்போது ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிரட்டும் அளவுக்கு விசுவரூபம் எடுத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் மரக்காணம் முதல் இராமநாதபுரம் வரையிலான பகுதிகளில் இதுவரை வேதாந்தா நிறுவனத்திற்கு இரு உரிமங்களும், ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு ஓர் உரிமமும் அளிக்கப்பட்டுள்ளன. திருவாரூர் பகுதியில் 471.19 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த நான்காவது உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் 1863.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மேலும் இரு  ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவற்றையும் சேர்த்தால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 5000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கும்.

தமிழக அரசின் அனுமதியின்றி இவற்றில் ஒரு திட்டத்தைக் கூட செயல்படுத்த முடியாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் தவிர பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் உள்ளிட்ட சில திட்டங்களையும் காவிரி பாசன மாவட்டங்களில் திணிக்க திமுக ஆட்சிக் காலத்தில் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்திலிருந்தும் காவிரி பாசன மாவட்டங்களைக் காக்க, கூடுதல் பாதுகாப்பு கவசமாக, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க  வேண்டியது அவசியமாகும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்" என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramadoss welcome tamilnadu govt announcement about Hydrocarbon Project


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->