தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை : வானிலை ஆய்வு மையம் தகவல்!
Rain for another 3 days in Tamil Nadu Information from the weather analysis center
மிக கனமழை பெய்யும் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கனமழை பதிவாகும் இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழ்நாட்டில் நேற்று முன்தினத்தில் இருந்து மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்து இருக்கிறது.இந்த மழையால் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியிருக்கிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் ஊட்டியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது.நேற்று நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதைப் பார்க்க முடிகிறது. இந்தநிலையில் தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாட்டாலும் மேலும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இன்று நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள், திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் நாளை நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்கள், திருநெல்வேலி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், நாளை மறுதினம் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக கனமழை பெய்யும் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், கனமழை பதிவாகும் இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று பல இடங்களில் இயல்பைவிட வெப்பம் குறைவாகவே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Rain for another 3 days in Tamil Nadu Information from the weather analysis center