தேர்தல் நிலைப்பாடு என்ன? புதிய தமிழகம் கட்சி நிறைவேற்றிய தீர்மானம்! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள டாக்டர் கிருஷ்ணசாமி இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 

புதிய  தமிழகம்  கட்சி மாநில உயர்மட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : 

2021 - தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு குறித்து விவாதிக்க திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின்  பூர்வீகக் கிராமமான மசக்கவுண்டன்புதூர் தாமரை இல்லத்தில் கட்சியின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் 28.02.2021 பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு.,

தீர்மானம் - 1: 

சிதறிக்கிடந்த தேவேந்திரகுல வேளாளர்களை ஒன்றுபடுத்தி அரிசன், தலித், தாழ்த்தப்பட்டோர் என்று முத்திரை குத்தப்பட்டு, மறைக்கப்பட்ட அடையாளங்களோடு வாழ்ந்துவந்த தேவேந்திரகுல வேளாளர்களின் பூர்வீக, பெருமைமிகு அடையாளங்களை மீட்டெடுத்து  சர்வதேச அளவில் மிளிரச் செய்த பட்டியல் வெளியேற்ற நாயகர் டாக்டர் அய்யா அவர்களுக்கு புதிய தமிழகம் மாநில உயர்மட்டக்குழு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. 

தீர்மானம் - 2: 

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் & தலைவர் டாக்டர் அய்யா அவர்களால் கடந்த 30 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் தேவேந்திரகுல வேளாளர்களின் மூளையும், இதயமுமாக விளங்கக்கூடிய பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை நிறைவேற்றாமல் பெயர் மாற்ற கோரிக்கையை மட்டும் நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் ஏற்புடையது அல்ல என்பதையும்; பட்டியல் மாற்ற கோரிக்கையை வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றிட வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சியின் மாநில உயர்மட்டக்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

தீர்மானம் – 3: 

தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றம் மற்றும் பெயர் மாற்றக் கோரிக்கையை வென்றெடுக்க கரோனா காலத்திலும் புதிய தமிழகம் கட்சியின் வேண்டுகோளை ஏற்று அக்டோபர் 6, 2020 அன்று 10,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல அடக்குமுறைகளைத் தாண்டி உண்ணாவிரதம் மேற்கொண்டும்; ஜனவரி 6, 2021 அன்று மதுரையில் பேரணியை பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் அணிதிரண்டு மதுரையை திணறடிக்க செய்தும்; கடந்த 30 ஆண்டுகாலமாக தொடர்ந்து போராடி வரும் புதிய தமிழகம் கட்சியின் பின்னால் அணிதிரண்டும் உள்ள புதிய தமிழகம் கட்சியினருக்கும், தேவேந்திரகுல வேளாளர் சொந்தங்களுக்கும் புதிய தமிழகம் கட்சியின் மாநில உயர்மட்டகுழு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் - 4:

நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க அனைத்து அதிகாரங்களையும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் - தலைவர் டாக்டர் அய்யா அவர்களுக்கு வழங்கப்படுகிறது. 

தீர்மானம் - 5:

பட்டியல் வெளியேற்றம் குறித்து தேவேந்திரகுல வேளாளர்கள் மத்தியில் ஆழமாக எடுத்துரைத்து, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் தேர்தல் நிலைப்பாட்டை உளமாற ஏற்று, புதிய தமிழகம் கட்சியின் வெற்றிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து கணிசமான புதிய தமிழகம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை வென்றெடுக்க கண்துஞ்சாது களப்பணி ஆற்றிட அனைத்து நிர்வாகிகளையும் புதிய தமிழகம் மாநில உயர்மட்டக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 6:

தற்போது நிலவிவரும் மோசமான பொருளாதார நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு, பொது மக்களின் அத்தியாவசியத் தேவைகளான பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலைவாசி உயர்வை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக குறைத்திட வேண்டுமெனவும், தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் மீது தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி நிறைவேற்றிட வேண்டுமெனவும் புதிய தமிழகம் மாநில உயர்மட்டக்குழு வலியுறுத்துகிறது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puthiya Tamilagam Katchi TN Assembly Election Resolution 1 March 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->